புதிய நம்பிக்கை – 11

ஆனந்த சிவா
அனைத்து உயிர்களிடமும் இருக்கும் பொதுவான, இயல்பான ஒரு செயல் ’கவனம்’… குறிப்பாக மனிதர்களிடம் ’கவனம்’ (Attention) என்கிற அந்தத் தனித்த செயல் அதிகமிருக்கும்… இருக்க வேண்டும்..! அதற்குக் காரணம், மனிதர்களுக்கென்றே பிரத்தியேகமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் இயற்கையின் பரிசான மூளை… மற்றைய உயிரினங்களில் இருந்து மனிதர்களை அனைத்து விதங்களிலும் முற்றிலும் மேம்படுத்தி, நம்மை அறிவார்ந்தவர்களாக, ஆற்றல் மிக்கவர்களாக வைத்திருக்க உதவும் இயற்கையின் அற்புதமான பரிசுதான் நம் மூளை…
விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே ‘கவனம்’ என்கிற அந்தச் சிறப்பான திறன் வழங்கப்பட்டிருக்கிறது… உயிரினங்கள் தங்களின் வாழ்வாதாரம், இனவிருத்தி என அனைத்திற்கும் அந்தக் கவனத்தைத்தான் மூல ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன..!
மனிதனைத் தவிர மற்றைய உயிரினங்கள் பிறந்து வளரும் காலங்களில் தங்களுடைய மூளையைக் கொண்டு கவனத்தைப் பெறவேண்டிய அவசியம் இல்லை… அப்படிப்பட்ட அமைப்பும் அவைகளின் மூளையில் இல்லை… அவைகள் வாழ்வதற்குத் தேவையான கவனத்தை எதனைப் பார்த்தும் கற்றுக் கொள்வதில்லை… இயற்கையாகவே மரபணுக்களில் பெற்றிருக்கின்ற அமைப்பின்படி உயிரினங்கள் வாழ்கின்றன, இனவிருத்தி செய்கின்றன… அதனால் அவைகளுக்குக் ’கவனம்’ எப்பொழுதும் நிலையாக மாறுபாடில்லாமல் இருக்கிறது… கவனமின்மை ஏற்படுவதில்லை..!

ஆனால், மனித இனத்துக்கு அப்படிப்பட்ட அமைப்பு இல்லை… மனித இனத்துக்கும் இயற்கை சில கவனத்தை நம் மரபணுக்களில் பொதித்து வைத்திருக்கிறது… அதாவது குழந்தையாக இருக்கையில் சிலவகையான கவனங்கள் அவைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன… குழந்தைகள் சில வாரங்கள் வரையில் அம்மா, அப்பாவின் முகத்தைப் பார்த்து அடையாளம் கண்டுகொள்வதில்லை… தொடுவுணர்வு, வாசனை போன்றவற்றை வைத்தே அடையாளம் காண்கின்றன..! ஆனால், அது பெரும்பாலும் குழந்தைப் பருவத்துடன் சில வாரங்களில் முடிந்து போகிறது…
மூளை சிந்திக்க ஆரம்பித்தவுடன் அதன் கவனம் அதிகரித்து அம்மா, அப்பா, சுற்றம் என அனைத்தையும் அடையாளம் கண்டுகொள்கின்றன… பின்னர், சூழல்களுக்கு ஏற்றவாறு தன் கவனத்தை மாற்றிக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் ஆரம்பித்து விடுகிறது…
இயற்கையாக மரபணுக்களின் மூலம் கிடைக்கும் கவனம் மட்டுமே மனிதர்களுக்குப் போதுமானதா என்றால், நிச்சயமாகப் போதாது என்பதால்தான் இயற்கைக் கொடுத்திருக்கும் மூளையைக் கொண்டு நாம் நம் கவனத்தை சீர்படுத்தி, செம்மைப்படுத்திக் கொள்கிறோம்…
மனிதர்கள் வளர வளர தான் பார்க்கும் இந்த சமூகத்திற்கு ஏற்றவாறு தங்களின் கவனத்தை வளர்த்துக் கொண்டோ, வளைத்துக் கொண்டோ, விரிவுபடுத்திக் கொண்டோ இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது…
இயற்கையாகவே மனித சிந்தனை என்பது மாறிக்கொண்டே இருக்கும் இயல்புடையது… மனிதர்களின் அறிவு விரிவடைந்து கொண்டே இருப்பதால் அவர்களின் சிந்தனையும், கவனமும் மாற்றமடைந்து கொண்டே இருக்கின்றன…
காடுகள், மலைகள், நீர்நிலைகள் வழிப்பயணம்..!
வாகனங்களே கண்டுபிடிக்கப்படாத காலங்களில் மனிதர்கள் எங்கு சென்றாலும் காடுகள், மலைகள், நீர்நிலைகள் என கடினமான, ஆபத்துகள் நிறைந்த பகுதிகளை நடந்துதான் கடந்து செல்லவேண்டும்… அப்படி நடந்து செல்லும் பொழுது நம்முடைய பாதுகாப்புக்கோ, மற்றவற்றுக்கோ நமக்குத் தேவைப்பட்ட கவனம் என்பது வேறு…
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்றைய நவநாகரிக உலகத்தில், நாம் ஒரு வாகனத்திலும், நம்மைப்போல மற்றவர்களும் வாகனங்களில் பயணிக்கக்கூடிய சூழல்… நிலத்தைப் போலவே வானிலும் நீரிலும் கூட பயணம் தொடர்கிறது… வாகனங்களற்று நடந்தே சென்று கொண்டிருந்த காலத்தில் நம்மிடம் இருந்த ’கவனம்’ இப்பொழுது நடைமுறைக்கு ஒத்து வரவே வராது… நாம் நம் கவனத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம்…
இங்கு ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்… மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்குமே காலமாற்றத்தில் கவனம் என்பதை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது… ஆனால், அவைகள் தங்களின் இயற்கைத் தன்மையிலிருந்து மாறமுடியாமல், அதற்கான அறிவு (மூளை) அவைகளிடம் இல்லாமல் போனதால் அவைகளின் அழிவு அதிகமாயிற்று… நாம் அவைகளின் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்தபின்னர், அவைகளின் கவனம் சிதைந்து, கவனமின்மை அதிகரித்து விலங்குகளின் அழிவுகள் அதிகமாகிவிட்டன… அது ஒரு தனி விவாதம்…
கற்காலத்தைப் போல் இன்றில்லை… தற்காலத்தில் ஒரு மனிதனுக்கு, தான் வாழும் பொழுதே, தன்னுடைய கவனத்தை அவன் தொடர்ந்து மாற்றியமைத்துக் கொண்டும், சரியாகவும் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது… மனிதனின் கவனத்தை முற்றிலுமாகத் திசைதிருப்பும் எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் பெரும்பாலான மனிதர்களுக்கு நன்மைகள் கிடைக்காது…
ஏறக்குறைய அப்படிப்பட்ட ஒன்றுதான் மொபைல், 2G, 4G, 5G, 6G, 7G என்று நீண்டுகொண்டே செல்லும் மாற்றங்கள்… இவ்வளவு அவசரமான, அதிவேகமான மாற்றங்கள் இங்கு இப்பொழுது தேவையா..? அவசியமாக, அத்தியாவசியமாக செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்யாமல், இதில் மட்டுமே இத்தனை ஆர்வம் காட்டி செல்வதற்குக் காரணம் கார்ப்பரேட்… மக்கள் நலன் அல்ல…
இன்றும் தற்கொலை சம்பவங்களில் இந்தியா எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை சமீபத்திய சில புள்ளி விபரங்கள் சொல்கின்றன… குறிப்பாக, தமிழகம் போன்ற அதிகமான கல்வி அறிவைப் பெற்ற முன்னேறிய மாநிலங்களில்தான் தற்கொலை அதிகமாக நடப்பதாகப் புள்ளி விபரங்கள் சொல்கின்றன…
அதிகமான கல்வி அறிவைப் பெற்ற பின்னர் ஏன் தற்கொலை அதிகரிக்கவேண்டும்..?
உத்தரப்பிரதேசம் போன்ற கல்வியறிவு மிகவும் பின்தங்கிய மாநிலத்தில் தற்கொலை மிகமிகக் குறைவாக நிகழ்வதாகச் சொல்கிறார்கள்…
உண்மையில் அதிகமாகப் படிக்கப் படிக்க நம் கவனம் இன்னும் அதிகரித்து நாம் எல்லாவற்றிலும் தெளிவாகச் சிந்தித்து செயல்படும் தெளிவை, அதிகமான கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும்… எவ்விதமான சிக்கல்களாக இருந்தாலும் அதற்கான தீர்வை அறியும் அறிவைப் பெற்றிருக்க வேண்டும்… ஆனால் அப்படி நடக்கவில்லை, நம் கவனம் மேம்படவில்லை என்பதைத்தான் அதிகரித்திருக்கும் தற்கொலைகள் நமக்குத் தெரிவிக்கின்றன…
நம்முடைய கவனம் சிதறியிருக்கிறது… நம் கவனத்தை ஒருங்கிணைக்க வேண்டிய படிப்பு அதைச் செய்யவில்லையா..? அப்படிச் செய்யவிடாமல் நம் கவனத்தைத் திசைத்திருப்பிக் கொண்டிருப்பது என்ன..? நாம் படிப்பறிவு இல்லாமல் வாழ்ந்த காலத்தில் நம் கவனம் சரியாக இருந்தது எப்படி..?
ரசிகர்களைக் கவனத்தில் கொண்ட வானொலி..!
அறிவியல் முன்னேற்றத்தில் மனிதர்களுக்கான பொழுது போக்கு சாதனமாக வானொலி வந்தபொழுது நாம் அதனால் ஈர்க்கப்பட்டோம்… வீடுகள், கடைகள், உணவகங்கள் என எங்கும் எப்பொழுதும் ஓயாமல் வானொலி ஒலித்துக் கொண்டேயிருக்கும்… பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அளவுக்கான வானொலி வந்த பொழுது கைகளில் அதை வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் வழக்கம் பலரிடமும் இருந்தது…
சினிமா பாடல்கள், பக்திப் பாடல்கள், செய்திகள், நாடகங்கள், ஒலிச்சித்திரங்கள் என நம்முடைய நேரத்தை வானொலிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தன… பலரும் சாப்பாட்டை மறந்து வானொலி கேட்கும் அளவுக்கு அதன் பேச்சில், பாட்டில், இசையில் மயங்கிக் கிடந்தார்கள்… நம் கவனம் பெரும்பாலும் வானொலியிலேயே படிந்து கிடந்தது… வானொலிகளும் நம் கவனத்தின் மீது அக்கறைக் கொண்டு, சரியானவற்றை மட்டுமே நமக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன…
வானொலிக்குப் பின்னர் T.V என்கிற தொலைக்காட்சி வந்தது… அதுவரையில் நம்மை முழுமையாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த வானொலி மீதிருந்த நம் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்காட்சியின் பக்கம் திரும்பியது…
ஒலியை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருந்தது வானொலி… ஆனால், காட்சிகளுடன் கூடிய ஒலிப்படமாக தொலைக்காட்சி செயல்பட்டதால் ஒட்டு மொத்தமாக அனைத்து மக்களின் கவனமும் முற்றிலும் தொலைக்காட்சியின் பக்கமாகத் திரும்பி விட்டது… வானொலி தன் மகிமையை இழந்தது..!
ஒட்டு மொத்தமாக அனைத்து மக்களின் கவனமும் தன் பக்கமாகத் திரும்பியதாலோ என்னவோ அந்தத் தொலைக்காட்சியின் தன்மையில் பொறுப்பு இல்லை… வானொலிக்குத் தன் ரசிகர்கள் மீதிருந்த அக்கறை, பொறுப்பு தொலைக்காட்சிக்கு இல்லாமல் போனது… அங்குதான் வானொலியின் மீது கவனம் வைத்திருந்த மக்களுக்கும் தொலைக்காட்சியின் மீது கவனம் வைத்திருந்த மக்களுக்குமான வேறுபாட்டில் பெரும் மாற்றம் இருந்தது…
வானொலி தன் ரசிகர்களின் கவனத்தை சிதைப்பதற்கு முயலவில்லை… மக்களின் கவனம் அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்பதை வானொலி உணர்ந்துகொண்டு மக்களின் கவனம் சிதையாமல் பாதுகாக்கும் வகையில் தன்னுடைய நிகழ்ச்சிகளைக் கட்டுப்பாடுகளுடன் கன்னியமாகக் கொடுத்தது…
தொலைக்காட்சி அந்தக் கட்டுப்பாட்டை, ஒழுங்கை, அறத்தை, நாகரிகத்தை கையாளவில்லை… அது தன் ரசிகர்களை, அவர்களின் கவனத்தைச் சிதைக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளி(லி)பரப்பியது… மக்களின் கவனம் சிதைந்தது… தேவையானவற்றின் மீதான கவனமின்மை அதிகரித்தது…
(தொடரும்)

