
மனநல மருத்துவர் – டாக்டர் குறிஞ்சி
இன்றைய காலகட்டத்தில் அறிவியல் அதிவேகமாக வளர்ந்துகொண்டு இருந்தாலும் சில பழமையான நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் நம்மிடமிருந்து முற்றிலுமாக மறைந்து விடவில்லை. குறிப்பாக மனநல மருத்துவம் பற்றிய தயக்கங்கள் மக்களிடம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும் நகரங்களில் ஓரளவுக்கு நிலைமை மாறியிருந்தாலும், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மூடநம்பிக்கைகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.
‘நான் மனநல மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்’ என்று வெளிப்படையாகச் சொன்னால் கேலியும் கிண்டலும் செய்வார்களோ என்கிற மனத்தடை இன்று பெருமளவு மாறியிருக்கிறது என்பது பெரும் ஆறுதலாக இருக்கிறது.
மனநல மருத்துவரிடம் சென்று ‘எனக்கு என்ன உளவியல் பிரச்சனை இருக்கிறது டாக்டர்?’ என்று நேருக்கு நேராகத் தயங்காமல் கேட்கிறார்கள். இந்த மாற்றம் வரவேற்கத்தக்க மாற்றம்’ என்று சொல்லும் டாக்டர் குறிஞ்சி…சென்னையில் மனநல சிகிச்சை அளித்து வரும் முக்கியமான மருத்துவர்களில் ஒருவர். டாக்டரை அவரது கிளினிக்கில் சந்தித்து பேசினோம்…
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மனநல மருத்துவர்களால் எடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான அடிப்படை நோக்கம் என்ன டாக்டர்?
ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்பது, விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்வது வழக்கமான நடைமுறைதான். அதைப்போல இந்த ஆண்டும் ” Make mental health and wellbeing for all a Global priority” என்பதை அடிப்படை முழக்கமாகக் கொண்டு செயல்பட இருக்கிறோம்.
’உலக அளவில் மனநலம் காக்க மருத்துவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், உலகமே மனநலத்திற்கு முன்னுரிமை தர வேண்டும்’ என்பதே இந்த ஆண்டின் முக்கியமான முழக்கம்.
மனநலம் சிறப்பாக இருந்தால்தான் உடல் நலமும் சிறப்பாக இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருந்தால்தான் தனிநபர் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், சமுதாயம் மேம்படும்.
மனநல மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுப்பது சகஜமான ஒன்றாக மாறி வருகிறதா டாக்டர்..?
ஒருவருக்கு இதய நோய், மூட்டு வலி போன்ற எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் ’நான் இந்த மருத்துவமனைக்குப் போனேன், சிகிச்சை பெற்றேன்’ என்று தயங்காமல் எல்லோரிடமும் சொல்வார்கள். ஆனால், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதை மற்றவர்களிடம் சொல்வதில் எல்லோருக்குமே ஒருவித தயக்கம் உள்ளது. இதை மனத்தடை என்று சொல்லலாம். இந்தத் தடை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. முன்பிருந்ததைவிட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மனநல மருத்துவரைத் தேடி நேரில் வந்து உட்கார்ந்து, எனக்கு என்ன ஆயிற்று..? நான் ஏன் இப்படி இருக்கிறேன்..? என்று இயல்பாக மனம் திறந்து கேட்கிற அளவுக்குப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
என்ன மாதிரியான மனநல பிரச்சனைகளுக்கு அதிகம் வருகிறார்கள் டாக்டர்?
நம் ஊரில் மட்டுமல்ல உலக அளவில் பெரும்பாலான மக்களைப் பாதிக்கும் நோய் மனப்பதட்டம் (Anxiety). இந்த நோயால் பாதிக்கப்படும் நபர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். இனம் புரியாத பயம், எப்போதும் ஒருவித அச்சம், தயக்கம், மந்த நிலை, தப்பாக எதாவது நடந்து விடுமோ என்கிற பதட்டம் பெரும்பாலானவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களிடம் மகிழ்ச்சி இருக்காது.
இதைப் போன்ற மனப்பதட்ட நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டால் ஒரு சில வாரங்களிலேயே நல்ல மாற்றம் தெரியும். தைரியமாக இருப்பார்கள். வாழ்க்கையை ரசித்து வாழ்வார்கள். எதையும் எதிர்கொள்ளும் மன வலிமை கிடைக்கும்.
இதற்கு அடுத்து மனஅழுத்தம் (Depression), ‘மனச்சிதைவு’ (Schizophrenia), ’ஓசிடி’ (Obsessive Compulsive Disorder) போன்ற நோய்களால் சராசரியாக 10 சதவிகித மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தீவிரமான சிகிச்சை தேவைப்படும். தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டால் நலம் பெறுவார்கள்.
மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போனால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்ற கருத்து மக்களிடம் இருக்கிறதே டாக்டர்…?
பலவிதமான மனநோய்கள் இருக்கின்றன. எல்லா நோய்களுக்கும் வாழ்நாள் முழுக்க மருந்து சாப்பிட வேண்டுமென்கிற கட்டாயம் இல்லை. மனப்பதட்ட பாதிப்புகளுக்கு சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் மருந்து சாப்பிட்டால் போதும். மிகத் தீவிரமான மன நோய்களுக்கு தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு தொடர்ச்சியாக மருந்து சாப்பிடுவது போல், ஒரு சிலர் மட்டும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். பெரும்பாலானவர்களுக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை வராது.
மருந்து, மாத்திரைகள் இல்லாமல் சிகிச்சையே இல்லையா டாக்டர்?
மனப்பதட்டம் ஆரம்ப நிலையில் இருந்தால் மாத்திரைகள் தேவைப்படாது. ஒருவர் வேகமான நடைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடும் பொழுது நன்றாக வியர்த்துக் கொட்டும்… அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் மூளையில் என்டார்பின் (Endorphins) சுரப்பு அதிகரிக்கும். ஆரம்ப நிலையில் இருக்கும் லேசான மனப்பதட்டம் சரியாகும். அப்படியே பூஸ்ட் சாப்பிட்ட மாதிரி எனர்ஜி கிடைக்கும். உற்சாகமாக இருப்பார்கள். அவர்களுக்கு மாத்திரை தேவைப்படாது. ஆனால், மனச்சிதைவு போன்ற தீவிர நோய்களுக்கு மருந்து, மாத்திரைகளைக் கட்டாயமாக எடுத்துக் கொண்டே ஆகவேண்டும்.
யோகாசனப் பயிற்சி கை கொடுக்குமா டாக்டர்?
நிச்சயமாக உதவும். பொதுவாக யோகாசன பயிற்சிக்கு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். யோகா பயிற்சியால் மன அழுத்தம் குறையும். உற்சாகம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை கட்டுப்படும். பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நிறைவான, ஆரோக்கியமாக வாழ்வதாக உணர்வார்கள்.
நாம் சாப்பிடும் உணவின் மூலம் மன நலத்தை மேம்படுத்த முடியுமா?
எல்லோருடைய வயிற்றிலும் பாக்டீரியாக்கள் இருக்கும். அந்த பாக்டீரியாக்கள் பல்கி பெருகக் கூடிய வகையில் நாம் சாப்பிட்டால் நமது மனநலம் மேம்படும். இதனால் இரசாயன சுரப்புகள் அதிகம் சுரந்து உடலுக்கும் மூளைக்கும் நல்லது செய்யும்.
புளிப்புச் சுவையுள்ள உணவுகள் (Fermented Food) உடலுக்கும் மூளைக்கும் நன்மை செய்யக் கூடியவை. குறிப்பாகப் பழைய சோறு ஒரு அருமையான, சிறப்பான உணவாகும். இட்லி, தோசையும் நன்மை செய்யக்கூடிவை. நார்ச்சத்து (Fibre) மிகுந்த காய்கறிகளும் பழங்களும் மிகவும் நன்மை கொடுக்கக்கூடியவை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
மனநல பாதிப்பு உள்ளவர்களை எப்படி அடையாளம் காண்பது?
பொதுவாக மனநல பாதிப்புகள் குழந்தைப் பருவத்தில் வருவதில்லை. ஒருவர் அன்றாடப் பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபட்டு நடந்து கொள்வது, அவருடைய இயல்பான பழக்க வழக்கங்கள் மாறி, அசாதாரணமாக நடந்து கொள்வது போன்ற மாற்றங்கள் ஒருவரிடம் இருந்தால் அவரைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
உதாரணமாக, சரியாகக் குளிக்காமல் இருப்பது, ஒழுங்காகச் சாப்பிடாதது, சரியான தூக்கமில்லாத நிலை, தனிமையை விரும்புதல், தன்னை ஒரு மிகப்பெரிய சாதனையாளனக நினைத்துக் கொண்டு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பது, தன்னுடைய நம்பிக்கையை பிறரையும் ஏற்றுக்கொள்ள வைக்க முயற்சிப்பது, இடைவெளி இல்லாமல் பேசிக் கொண்டே இருப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஒருவரது மனநல பாதிப்பை யூகிக்கலாம். இத்தகைய பாதிப்புகள் இருந்தால், தாமதிக்காமல் மனநல மருத்துவர்களின் உதவியை நாடுவது நல்லது.
சைக்கோ தெரபிஸ்ட்டுகளின் ரோல் எப்படி டாக்டர்?
சைக்கோ தெரபிஸ்ட்டுகள் கொடுக்கும் கவுன்சிலிங் மூலம் பலரையும் காப்பாற்ற முடியும்.
வேலையில்லாமல் இருப்பது, வருமானம் இல்லாமலிருப்பது, எப்பொழுதும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டையிடுவது, உறவு சிக்கல்கள், தம்பதியர் பிரச்சனை, எதிர்மறை சிந்தனை, எந்தவொரு செயலைச் செய்வதற்கும் தயக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களை எளிதாக இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும். மருத்து, மாத்திரைகள் தேவையில்லை…
மந்திரிப்பது, தாயத்து கட்டுவது, வேப்பிலை அடிப்பது போன்ற நம்பிக்கைகள் இன்றும் தொடர்கிறதே?
பெருநகரமான சென்னையில் கூட இந்தப் பழக்கங்கள் இன்னும் பலரிடமும் இருக்கின்றன. மருத்துவ அறிவியல் முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அதைச் செய்வதற்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அரசாங்கம், பள்ளிப் பருவத்திலேயே மருத்துவ அறிவியலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். இளைய சமுதாயத்தினரிடம் நல்ல சிந்தனையை, அற நெறிகளை, அறிவியல் கருத்துக்களை விதைத்து விட்டால் எதிர்கால சமுதாயம் முன்னேறிய சமுதாயமாக, நாகரிக சமுதாயமாக, படிப்பறிவு மிக்கச் சமுதாயமாக, அறிவியல் அறிவு பெற்ற சமுதாயமாக மாறும்.
ஐ.டி ஊழியர்கள் கை நிறைய சம்பாதித்தாலும் மன நிறைவோடு வாழ முடியாமல் அவதிப்படுகிறார்களே ஏன்…?
அவகளுக்கு இரவுப் பணிகள் அதிகம். பணிச் சுமையால் அவதிப்படுகிறார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகளை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் முடித்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவர்களை ஒவ்வொரு நிமிடமும் துரத்திக் கொண்டே இருக்கின்றது. நிம்மதியாக வேலை செய்வதற்கு அவசியமான, பணிப் பாதுகாப்பும் இல்லை (Job Security).
எப்போது, எந்த நேரத்தில் வேலை பறிபோய் விடுமோ என்ற மனக் கலக்கத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதன் காரணமாகவும் பெரும் மன நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தனது ஒட்டுமொத்த சக்தியையும் செலவு செய்து விட்டு ஆரோக்கியத்தை தேடும் அவல நிலை இருக்கிறது.
அவர்களுக்கு எப்படி உதவுவது டாக்டர்?
தொடர்ந்து நெருக்கடி மிகுந்த சூழலில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். ஐ.டி ஊழியர்கள் மட்டுமல்ல ஆட்டோ ஓட்டுபவருக்குக் கூட ஸ்ட்ரெஸ் இருக்கும். அதை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் வெற்றி இருக்கிறது. வேலையையும் வாழ்க்கையையும் பேலன்ஸ் பண்ணும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில ஐ.டி நிறுவனங்கள் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார்கள். வெகுசில நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பே மிக மோசமானதாக இருக்கும். அது போன்ற நிறுவனங்களை விட்டு வெளியேறி அவர் அவருக்கு ஏற்ற வேலைகளையும் நிறுவனங்களையும் தேர்ந்தெடுத்து பணியாற்றுவதே புத்திசாலித்தனம்.
இந்தியாவிலேயே அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது… படித்தவர்கள் மத்தியில் தான் தற்கொலை அதிகமா?
அப்படிச் சொல்ல முடியாது. படிக்காதவர்கள் மத்தியில் தான் தற்கொலை அதிகம். வேலை செய்யும் ஊழியர்கள், குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் தான் தற்கொலையில் அதிகம் ஈடுபடுகிறார்கள். மன நெருக்கடியில் இருப்பவர்களுக்கு அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் உதவவேண்டும்.
மொபைல் போன், வீடியோ கேம்களுக்கு அடிமையாவது அதிகரிக்கிறது. இளைய சமுதாயம் இதிலிருந்து மீள வழி உண்டா டாக்டர்?
அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது வசதிக்காகத்தான் அறிமுகமாகின்றன. நவீன தொழில் நுட்பங்கள் நமது வாழ்வில் தவிர்க்க முடியாதது. இவற்றில் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
வீடியோ கேம், யூடியூப் சேனல்கள் என எல்லாமும் நாம் திரும்பத் திரும்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திலேயேதான் உருவாக்கப்படுகின்றன. உணர்வுகளைத் தூண்டி அடிமைப்படுத்தும் இந்த அடிமைத்தனத்திலிருந்தும் நாம் மீள முடியும்.
குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்காணித்து, ஒழுங்குபடுத்த வேண்டும். பெற்றோர்களும் தங்களை சுயமாக ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.
தேவைப்பட்டால் மனநல மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும். மொபைல் போன் பயன்பாட்டை முடிந்த அளவுக்கு குறைத்துக் கொள்வது நல்லது. போன் இல்லாமல் வாழ்ந்தவர்கள் தானே நாம். சில மணி நேரங்களாவது செல்போனை பயன்படுத்தாமல் இருக்க பழக வேண்டும்.
தகவல் தொடர்புக்கு: 7530085857
சந்திப்பு: பவித்ரன்

