டாக்டர்.கு.கணேசன்.
பொது நல மருத்துவர்

ன்றைய தினம் தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்கு குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் பல பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்த மாதிரி ‘சுள்’னென்று ஒரு வலி குதிகாலில் துவங்கி கால் மற்றும் பாதம் முழுவதும் பரவும். காலை நகற்றவே முடியாத அளவுக்கு வலி கடுமையாக இருக்கும். இந்தச் சிரமங்கள் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி மாயமாய் மறைந்துவிடும். பிறகு இவர்கள் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, இரவில் படுக்கையில் சாயும்போது மீண்டும் வலி சிரமப்படுத்தும். இந்தத் தொந்தரவுக்கு பிளான்டார் ஃபேசியைட்டிஸ் (Plantar Fascitis) என்று பெயர்.

என்ன காரணம்?

குதிகால் எலும்பிலிருந்து ‘பிளான்டார் அப்போநீரோசிஸ்’ எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் வலி உண்டாகிறது.

குதிகால் எலும்பும் தசைநார்களும் அதிகம் உராய்வதைத் தடுக்க ‘பர்சா’ எனும் திரவப் பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்கு குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு ‘கால்கேனியல் ஸ்பர்’ என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி பலருக்கும் வருவதுண்டு,

சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம். முடக்குவாதம், தன்தடுப்பாற்றல் நோய், காசநோய், பாதம் கோணல் வளர்ச்சி, தட்டைப் பாதம், எலும்பு அரிப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் இந்த நோய் வருகிறது.

யாருக்கு வருகிறது?

முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இது வருகிறது. ஆண்களோடு ஒப்பிடும்போது 

பெண்களுக்கு சற்று அதிகமாகவே பாதிப்பு ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்ல முடியாது. சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் வருகிறது.

கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்கு குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.காரணம், வாகனங்களில் ‘ஷாக் அப்சார்பர்’ வேலை செய்வதுபோல நம் காலணிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப்பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப் பலனை எதிர்பார்க்க முடியாது. மிருதுவான ரப்பர் செருப்புகள் (ஹவாய் செருப்புகள்) இதற்கு உதவும்.

இன்றைய பெண்களில் பலரும் ‘ஹை ஹீல்ஸ்’ செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகின்ற இந்தக் காலணிகள் பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றை காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிதவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால் சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.

இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குதிகால் வலி இளம் வயதிலேயே வந்து விடுகிறது. காரணம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீத சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டுகளில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் தொடங்கும். இதன் விளைவால் இவர்களுக்குக் குதிகால் வலி வரும்.

என்ன சிகிச்சை?

குதிகால் எலும்புக்கு எக்ஸ்ரே சி.டி.ஸ்கேன், யூரிக் அமிலம் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளைச் செய்து காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும். ஆரம்பநிலையிலேயே இதைக் கவனித்துவிட்டால் சிகிச்சை சுலபமாகும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம். அதே வேளையில் நீங்களாக கடைகளில் இந்த மாதிரி மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள். இவற்றில் பல பக்க விளைவுகள் உண்டு. ஆரோக்கியத்துக்கு ஆபத்தும் உண்டு.

வலி நீக்கும் களிம்புகளை குதிகாலில் பூசலாம். இது மட்டும் போதவில்லை என்றால், இப்படிச் செய்யலாம். காலையில் எழுந்திருக்கும்போது உடனே கால்களைத் தரையில் வைத்துவிடக்கூடாது. கால் விரல்கனை சிறிது நேரம் நன்றாக உள்மடக்கி பிறகு விரியுங்கள். இதனால் அந்தப் பகுதிக்கு புது ரத்தம் அதிகமாகப் பாயும். குதிகாலுக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாவிட்டால் சிலருக்கு குதிகால் வலி ஏற்படும். இந்த ரகத்தில் வலி ஏற்படுபவர்களுக்கு இந்த எளிய பயற்சியிலேயே வலி மறைந்துவிடும்.

அடுத்து இப்படியும் செய்யலாம்: காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் பாதத்தை ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறி மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாக கிடைக்கும். அப்போது வலியை உணரச் செய்கின்ற பொருள்கள் அங்கிருந்து விலகிவிடும். இதனால் குதிகால் வலி குறையும்.இதை பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டும். அப்போதுதான்

வலி நிரந்தரமாக விடை பெறும். இல்லாவிட்டால் சுவரில் எரிந்த பந்தாக குதிகால் வலி மீண்டும் வந்துவிடும்.

இதுபோன்ற எளிய சிகிச்சை முறைகளில் வலி சரியாகவில்லை என்றால், வலி உள்ள இடத்தில் ‘ஹைட்ரோகார்ட்டிசோன்’ (Hydrocortisone) என்ற மருந்தை ஊசியில் எடுத்து, அதை ‘லிக்னோகைன்’ எனும் மருந்துடன் கலந்து செலுத்தினால் வலி குறையும் என்றாலும் இந்த ஊசியை ஒன்றிரண்டு முறைக்கு மேல் செலுத்தக்கூடாது. இதிலும் சில பக்கவிளைவுகள் உள்ளன என்பதால் இந்த எச்சரிக்கை மேற்சொன்ன சிகிச்சைகளில் குதிகால் வலி குறையவில்லை என்றால் கடைசி ஆயுதமாக அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது.

தடுக்க என்ன வழி?

குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள் தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தால் சைக்கிள் பயிற்சி செய்யலாம். காரணம், முன்பாதத்தில் அழுத்தம் கொடுத்து பெடல் செய்வதால், மொத்த பாதத்துக்குமே ரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் வலி குறையும்.அடுத்து உடல் பருமன் இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும்.

குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது. தெருவில் மட்டுமல்ல: வீட்டுக்குள்ளும்தான். எப்போதும் மிருதுவான ஹவாய் செருப்புகளை அணிந்தே நடக்க வேண்டும். எம்.சி.ஆர். செருப்புகளை அணிந்து நடப்பது இன்னும் நல்லது. கரடுமுரடான செருப்புகளை மறந்தும் அணிந்துவிடக்கூடாது. சர்க்கரை நோய், ‘கவுட் (Gout) போன்ற நோய்கள் இருந்தால் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

புகைபிடிக்கக் கூடாது. புகையிலையில் உள்ள நிகோட்டின் ரத்தக்குழாய்களைச் சுருக்கி ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இயற்கையாகவே நம் குதிகால் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவு. இதில் புகைபிடிப்பது என்பது எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகிற மாதிரிதான். எனவேதான் இந்த எச்சரிக்கை.