முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil, Ph.D.,
உதவிப் பேராசிரியர்,தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர்.

ம் உணவு முறைகளில் ஒன்றாக,நம் அன்றாட வாழ்வில் மிகவும் பரிச்சயமான பல எளிய மூலிகைகளின் அறிந்த மற்றும் அறியாத பல மருத்துவ குணங்களை இத்தொடரில் நாம் அறிந்து வருகிறோம். ஒவ்வொரு மூலிகைக்கும் அதன் மருத்துவ பயனுக்கும் வரலாற்றில் அல்லது பாரம்பரிய மருத்துவ முறைகளில் நிறைய குறிப்புகள் இருக்கும்.

மிக சுவாரஸ்யமான ஒரு வரலாற்றைக் கொண்ட,மிக எளிய உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் வெள்ளரிக்காய் மற்றும் அதன் விதைகள் பற்றிய மருத்துவ குறிப்புகளையும், உட்கொள்ளும் முறைகளையும் இந்த மாதம் நாம் பார்க்கவிருக்கிறோம்.

வெள்ளரிக்காய், குக்குமிஸ் சட்டைவஸ் என்ற அறிவியல் பெயரைக் கொண்டது.இது குக்கூர்பிட்டேசி தாவர குடும்பத்தைச் சார்ந்த ஒரு கொடி வகையாகும்.நமக்கு பரிச்சயமான வகையில் இரண்டு வகையான வெள்ளரிக் காய்களை நாம் அறிவோம்.ஒன்று தடிமனாக சாலடுகளில் நாம் பயன்படுத்தும் வெள்ளரி வகை. மற்றொன்று விரல் பிஞ்சு வெள்ளரி என நாம் கோடை காலங்களில் எடுத்துக் கொள்ளும் ஒரு வகை.இவை இருவேறாக இருந்தாலும் இவற்றின் தன்மையில் ஒரே மாதிரியான குளிர்ச்சியூட்டும் தன்மையை கொண்டுள்ளன.

நீர்ச்சத்து மிகுந்தது. இன்றைய இளம் வயதினர் இடையே “லோ கேலரி” உணவு என்று அறியப்படும் இது, அதீத இனிப்பு அல்லது புளிப்பு இல்லாத காரணத்தினாலேயே பல்வேறு விதமான காய்கறிகள் மற்றும் பழங்களுடன் சேர்த்து சாலடுகளாக உட்கொள்ளப்படுகிறது. சமைத்தும், சமைக்காமலும் உட்கொள்ளும் காயாகவே வெள்ளரி உள்ளது. ஆனால் வரலாற்றை பார்க்கும் பொழுது, வெள்ளரிக்காய் என்பது மிகவும் கசப்புத் தன்மை கொண்ட காயாகவே அறியப்படுகிறது. இமயமலையின் அடிவாரத்தில் தோன்றி எகிப்து, ரோம், யூரோப் மற்றும் உலக நாடுகள் எங்கும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய காய் வெள்ளரிக்காய் ஆகும்.

சிறிய கணுக்களை கொண்ட காயாக, கரும் பச்சை நிறத்தில் அறியப்பட்டு வந்த வெள்ளரிக்காய் எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளிலேயே பல்வேறு மன்னர்களாலும் விரும்பப்பட்டு, மேன்மைப்படுத்தப்பட்டு, உருமாற்றம் செய்யப்பட்டு, கசப்புத் தன்மை நீக்கப்பெற்ற சுவை மேம்பட்ட காயாக மாற்றுரு பெற்றது. தற்போது உள்ள வெள்ளரிக்காயின் அமைப்பும் சுவையும் பிற்காலங்களில் வந்தது எனலாம். ரோமானிய மன்னரான டைபீரியஸ், வெள்ளரிக்காயின் சுவைக்கு மிகவும் அடிமைப்பட்டவர் என்பதால் வருடம் முழுவதும் வெள்ளரிக்காய் கிடைக்கும்படி, பசுமை குடில்கள் அமைத்து வெள்ளரிக்காயை வளர்க்க உத்தரவிட்டிருந்தார் என்பதும் சுவாரஸ்யமே.

இவ்வாறு எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளிலேயே மிகப் பிரபலமாக பயன்படுத்தப்பட்ட வெள்ளரி 15 ஆம் நூற்றாண்டில் தான் அமெரிக்காவிற்கு, யூரோப்பிய காலனியர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்ப காலங்களில் வெள்ளரிக்காய் அமெரிக்காவில் அவ்வளவாக பயன்படுத்தப்படவில்லை. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் அதாவது 1876, ஹென்றி ஜே. ஹெய்ன்ஸ் என்பவர் தனது முக்கிய உணவு தயாரிப்பு பட்டியலில் வெள்ளரிக்காய் ஊறுகாயை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் உணவின் ஒரு அங்கமாகவே வெள்ளரிக்காயும் அதன் விதைகளும் மாறிவிட்டது.

ஆனால், இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்தே நமது பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா மற்றும் சித்த மருத்துவ முறைகளில் வெள்ளரிக்காய் மற்றும் அதன் விதைகள் பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இதற்கான சான்றுகள் பல்வேறு நூல்களிலும் உள்ளன.

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பூண்டு போல ஒரு சில காய்கறிகளில் வெள்ளரிக்காயும் ஒன்று என்பது இதன் பிரத்தியேக சிறப்பாகும்.எப்படி எகிப்தில் பயன்படுத்தப்பட்டு வந்ததற்கான குறிப்பு பைபிளில் உள்ளதோ அதுபோல ஆயுர்வேத புத்தகங்களிலும் சித்த மருத்துவ குறிப்புகளிலும் வெள்ளரிக்காய் மற்றும் அதன் விதைகளின் பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வெறும் நீர்ச்சத்து காய் அல்ல அதையும் தாண்டி பல்வேறு விதமான விட்டமின்கள், நுண்ணூட்டசத்துகள் மற்றும் மருத்துவத் தன்மையையும் கொண்டுள்ளது என்பதே நவீன மருத்துவ மற்றும் ஆராய்ச்சியின் முடிவுகளாக உள்ளது. குறிப்பாக வெள்ளரியின் விதைப் பொடி, சூரணமாக அல்லது வெதுவெதுப்பான நீரில் அருந்தும் போது சிறுநீர் பெருக்கத்திற்கும், தொற்று நோய்களிலிருந்து காக்கவும், உடலில் இருக்கும் நச்சுகளை நீக்கவும் உதவும் என்பது அறிவியல் ரீதியாக அறியப்படுகிறது.

இதற்குரிய சான்றுகள் பாரம்பரிய மருத்துவ குறிப்புகளிலும் உள்ளன.அவை பல்வேறு காரணங்களால் உடலில் ஏற்படும் உள் வெப்பத்தை சமநிலைப்படுத்துவதற்கும், சிறுநீர் பாதை ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் வளமான ஆதாரத்தை வழங்குவதற்கும் கொண்டாடப்படுகின்றன.மேலும், தூக்கமின்மை,முன் தலைவலியைப் போக்க வெள்ளரிக்காய் விதைகளுடன் தயாரிக்கப்பட்ட மருந்து எண்ணெய்களை உச்சந்தலையில் பயன்படுத்துவது பாரம்பரிய சிகிச்சைகளில் அடங்கும்.

பல்வேறு கிழக்கத்திய பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படும் வெள்ளரிக்காய் விதைகள் கால்சியம் குறைபாடுகளை நிர்வகிக்கவும், எலும்பு அடர்த்தியை பராமரிக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது. வெள்ளரிக்காயின் நீர் தக்கவைப்பு திறன் அதன் குளிர்ச்சியை ஒருபோதும் இழக்காத நற்பெயரைப் பெற்றது. இதன் விளைவாக,17 ஆம் நூற்றாண்டின் மருத்துவர்கள் காய்ச்சல் நோயாளிகளை வெள்ளரிக்காய் படுக்கையில் வைக்க பரிந்துரைத்தனர்.

இதனால் அவர்கள் “வெள்ளரிக்காயைப் போல குளிர்ச்சியாக” மாறுவார்கள் என நம்பினர்.கூடுதலாக, வெள்ளரிக்காயை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டால்,சிவப்பு மூக்கு குணமடைந்து, முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும் என்று கருதப்பட்டது.

நவீன ஆராய்ச்சி முறைகளின்படி, வெள்ளரிக்காயின் விதைப் பொடி உட்கொள்ளப்படும் பொழுது, அல்சரின் தன்மை குறைவதாகவும், அல்சர் புண்கள் ஆறுவது மேம்படுவதாகவும், இரைப்பையின் அமில அளவு மற்றும் அமிலத்தன்மை குறைவதையும் மிகச் சிறந்த மருத்துவ குணமாக கருதலாம்.

இதற்கு காரணம், விதைகளில் உள்ள ஆல்புமின்கள், மாலேட் சின்தேஸ், சிட்ரேட் சின்தேஸ், கேட்டலேஸ், குளோபுலின்கள், ஐசோசிட்ரைடிலேஸ், மாலேட் டீஹைட்ரஜனேஸ், குரோட்டோனேஸ் ஆகியவை இருப்பது என்பதும் கண்டறியப்பட்டது.

விதைகள் உடலை குளிரூட்டும் விளைவைக் கொண்டுள்ளன என்பதால் அவை மலச்சிக்கலைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளரிக்காய் மற்றும் அதன் விதைகள் தோல் சுருக்கங்கள் மற்றும் வெயிலில் எரிச்சல் போன்ற பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும், ஒப்பனை தயாரிப்புகளை தயாரிக்கவும் உலகளவில் பரிந்துரைக்கப்படுகின்றன.

சித்த மருத்துவத்தில், வெள்ளரிக்காய் விதைகள் அவற்றின் இயற்கையான குளிர்ச்சி,டையூரிடிக் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.உடலில் அதிகப்படியான வெப்பத்தை சமநிலைப்படுத்த பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் அவை, சிறுநீர் பாதையை பாதுகாக்கவும், எரியும் உணர்வுகளைத் தணிக்கவும், ஒட்டுமொத்த உயிர்ச்சக்தியை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட மருந்துகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக செயல்படுகின்றது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வெள்ளரியை அப்படியே சாப்பிடலாம், அல்லது அதன் விதைகளை பச்சையாகவும் வறுத்தோ உட்கொள்ளலாம். வெயில் காலங்களில் உடல் சூட்டை தணிக்க பொடியாக உட்கொள்ள மறுக்கும் குழந்தைகளுக்கு சாலட் அல்லது குளிர்பானங்களிலும், மோரிலும், பழச்சாறுகளிலும் சேர்த்து அருந்தக் கொடுக்கலாம். வெள்ளரிக்காயின் ஊறுகாயும் உலகம் முழுவதும் மிகப் பிரபலமானது. வறுத்து பொடித்த வெள்ளரியின் விதைகள் பல்வேறு உணவு தயாரிப்புகளிலும் சூப் போன்ற உணவுகளிலும் பயன்படுத்தப் படுகிறது. இனிப்பு பண்டங்களிலும் வெள்ளரி விதைகள் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது.வெறும் வெள்ளரியின் உலர்ந்த விதைகள் பொடியாக்கப்பட்டு சுடுநீரில் உட்கொள்ளப்பட்டால் ஆரோக்கியமான உடல் எடை குறைப்பிற்கு உதவும்.உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் இது உதவும்.

இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களின் மனதிற்கு உகந்த காயாகவும் பல்வேறு மருத்துவ முறைகளில் மருத்துவர்களின் நல்ல நண்பனாகவும் இருந்த வெள்ளரிக்காய் மற்றும் அதன் விதைகளை நாமும் உட்கொண்டு பயன்பெறுவோம்.