– பிரியங்கா பாஸ்கர், மனநல ஆலோசகர்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளும், வன்முறைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் பெண் குழந்தை என்றால் அவளை பள்ளி, கல்லூரி என்று எங்கு அனுப்பினாலும், அவள் வீடு திரும்பும் வரை பெற்றோர்களின் மனநிலை சொல்லவே முடிவதில்லை. இதில் பல குழந்தைகள் வெளியில் என்ன நடந்தது என்று பெற்றோரிடம் கூறத் தயங்கி, பயத்திலேயே மறைத்து விடுகின்றனர். இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவர்கள், குழந்தைகளிடம் பேச விட வேண்டும். அவர்களும் குழந்தைகளிடம் பேச வேண்டும். பெற்றோராக இல்லாமல் நண்பராக பேச வேண்டும்.

10 வயதை மகளை ஒரு தம்பதியினர் என்னிடம் அழைத்து வந்தனர். இவள் பல வருடங்களாக யாரிடமும் சரியாக பேசுவதில்லை. மற்ற பெண்களைப் போல் உடை விஷயத்திலோ, அலங்காரத்திலோ ஆர்வம் காட்டுவதில்லை. இரவில் சரியாக தூங்குவதும் இல்லை. சமீப காலமாக திடீரென்று கதறி அழுகிறாள், கோபப்படுகிறாள், சரியாக சாப்பிடுவதும் இல்லை என்று அந்தப் பெண்ணின் பெற்றோர் புலம்பித் தீர்த்தனர்.

‘‘உங்கள் மகள் என்ன படித்திருக்கிறாள்?’’ என்று கேட்டேன்.

‘‘அஞ்சாம் வகுப்பு தாண்டவில்லை. அவளுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. எத்தனையோ முறை திட்டி, அடித்து பள்ளியில் விட்டுவிட்டு வந்தாலும் திரும்ப வந்து விடுவாள். நாங்களும் அப்படியே விட்டுவிட்டோம். அப்போதிலிருந்தே இப்படித்தான். வீட்டை விட்டு வெளியே போகவே மாட்டாள்’’ என்றார்கள்.

பின்னர் நான் அந்தப் பெண்ணிடம், நம்பிக்கையளிக்கும் வகையில் பேசினேன். அவள் பிரச்னையைப் பற்றி முதலில் என்னிடம் கூறத் தயங்கியவள் பிறகு அழ ஆரம்பித்தாள். நானும் அவளை அழட்டும் என்று விட்டுவிட்டேன். பிறகு ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு அவள் பேச ஆரம்பித்தாள். அஞ்சாம் வகுப்பு படிக்கும்போது என் வீட்டு அருகில் இருக்கும் கடைக்கு என்னை அம்மா அனுப்புவார்கள். அந்தக் கடையில் இருந்த அங்கிள் தவறாக நடந்து கொண்டார். நான் அழுதபோது, இதை வீட்ல போய் சொன்னா, உங்க அம்மா, அப்பாவை ஏதாச்சும் பண்ணிடுவேன் என்று மிரட்டினார். அம்மா வேலைக்குப் போயிடுவாங்க. நான் பயந்து கொண்டு வெளியில் போக மாட்டேன். வீட்டிலேயே இருப்பேன். ஸ்கூல்லேயும் இதுபோல ஒரு சம்பவம் நடந்துச்சு. அதனால ஸ்கூலுக்கு போறதுக்கும் எனக்கு பயம் என்று கூறிவிட்டு அந்தப் பெண் மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

10 வயது குழந்தையின் வாழ்க்கையிலும், மனநிலையிலும் இப்படி ஒரு கொடுமையை நிகழ்த்தியது யாருடைய குற்றம். குழந்தையை குழந்தையாக பார்க்கத் தெரியாத கொடூரர்களின் குற்றமல்லவா? இங்குதான் பெற்றோர்களின் கவனம் முக்கியத்துவம் பெறுகிறது. எங்கு எது நடந்தாலும், யார் என்ன மிரட்டினாலும் நாங்கள் இருக்கிறோம். நீ தான் எங்களுக்கு முக்கியம். மற்றதெல்லாம் பிறகுதான் என்ற நம்பிக்கையை குழந்தைகளின் மனதில் பெற்றோர் விதைக்க வேண்டும். அப்போதுதான், குழந்தைகளும் பெற்றோரிடம், தயக்கமின்றி எது நடந்தாலும் கூறுவார்கள்.

என்னிடம் வந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறாள். ஆண்கள் மற்றும் சமூகத்தின் மீதான வெறுப்பு அவளுக்கு அதிகமாகி விட்டது. இது எந்த விதத்திலும் உன் தவறில்லை. குழந்தையை குழந்தையாக பார்க்காத மோசமான கண்களின் தவறு. குற்றம் செய்தவன் எங்கோ அவனுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் செய்த தவறுக்கு எப்படியாவது தண்டனை கிடைத்திருக்கும். நீ ஏன் உன்னை வருத்திக் கொள்கிறாய் என்றெல்லாம் கூறி அவளைத் தேற்றினேன்.

ஆமாம். என் மேல எந்த தப்பும் இல்லை. அவங்களுக்கு எல்லாம் தண்டனை கிடைத்திருக்கும் இல்லே என்று இன்னும் குழந்தையாகவே கேட்டாள்.
பல வருடங்களாக மனதில் இருந்ததை தூக்கி எறிந்துவிட்டு பெற்றோரை பார்த்து சிரித்தாள். அவள் அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஏன் மகள் பள்ளிக்கு போக மறுக்கிறாள்? ஏன் வெளியே போக மறுக்கிறாள்? ஏன் இந்த திடீர் மாற்றம்? என்று அன்றே யோசித்து, அந்தக் குழந்தையிடம் அமர்ந்து பேசியிருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது. பேசுவதைத் தவிர, அடிப்பதும், திட்டுவதும் பெற்றோரின் ஆயுதமாகிவிட்டது. நம்மை மட்டுமே நம்பி இந்த பூமிக்கு வந்த குழந்தைகளுக்கு நம்மைத் தவிர முழுமையான பாதுகாப்பையும், உரிமையையும் வேறு எங்கும் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது முட்டாள்தனம். என் பிள்ளை என்பதைவிட, என் நண்பன் என்று கூறி பாருங்கள். நமக்கும் நம் குழந்தைகளுக்குமான நெருக்கம் அதிகரிக்கும்.