
கேக் இல்லாத கொண்டாட்டம் முழுமை பெறுவதில்லை.பிறந்தநாள், திருமண நாள், புரொமோஷன்,பிற முக்கிய நிகழ்வுகள்…என எதுவாக இருந்தாலும், கேக்கில்லாமல் கிடையாது என்கிற அளவுக்கு இதன் முக்கியத்துவம் கூடிவிட்டது.ஒருவரின் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடுகிறார்களோ இல்லையோ, அலுவலகத்தில் கொண்டாடுவது பரவலாகிவிட்டது. அதுவும், பட்டர் ஸ்காட்ச், காபி, சாக்லேட், கேரமல்… என விதவிதமான கேக்குகளில் ஒன்றை வாங்கி, வெட்டவைத்து அனைவரும் சுவைத்து மகிழ்கிறார்கள்.இதைப் பார்க்கும்போதே எடுக்கச் சொல்லி, கைகள் பரபரக்கத் தொடங்கிவிடும்; நாவூறும்; இனிப்புச் சுவையுடன் மெத்தென்று இருக்கும் இதன் தன்மை சொக்கவைத்துவிடும். இன்றைக்கு குழந்தைகளின் பிறந்தநாளில் தவிர்க்கவே முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. பேக்கரிகளில் கிலோ கணக்கில் ஆர்டர் கொடுத்து வாங்கி,வீட்டில் பலூன்களைக் கட்டி தொங்கவிட்டு, அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ ஆரவாரமாக கேக்கை வெட்டிக் கொண்டாடுவது எல்லா வீடுகளிலும் சர்வ சாதாரணமாகி விட்டது.
கேக் சாப்பிடுவது நல்லதா? யார் யார் சாப்பிடக் கூடாது?
முறையான ஊட்டச்சத்து நம் எல்லோருக்கும் அவசியம்.அந்த ஊட்டச்சத்துதான் நம் உடலை சீராகப் பராமரிக்க உதவும்.பழங்கள் அடங்கிய கேக்கில் சேர்க்கப்படும் அன்னாசி, ஆப்பிள் மற்றும் சில பழங்களில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தைச் சீராக்கும்.வாழைப்பழம் சேர்த்த கேக் என்றால் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்யும். அவை, கெட்ட பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடி நம் செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்யும்.
இதில் சேர்க்கப்படும் பால், முட்டை இரண்டுமே புரதச்சத்து நிறைந்தவை. இவை நம் தசை மற்றும் எலும்புகள் பலம் பெற உதவும்.அதோடு பாலில் இருக்கும் கால்சியம், பல்லுக்கும் எலும்புக்கும் உறுதி தரும். கேக்கில் சேர்க்கப்படும் பழங்கள், நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். இதில் சாக்லேட்- கலந்திருந்தால், நம் உடலில் இருக்கும் எண்டார்பின் மற்றும் செரொட்டோனின் அளவை அது உயர்த்தும். இது நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.பதற்றத்தை தணியச் செய்யும்.
நல்லவை இருந்தாலும் தீமைகளும் உள்ளன. இதில் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் கொழுப்பும் நம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.அதிகமாக அல்லது நீண்ட காலமாக கேக் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்து சர்க்கரை நோய் வருவதற்குக்கூட காரணமாக அமைத்துவிடும். இதில் வெண்ணெய் அல்லது மார்கரின் சேர்க்கப்படுகிறது. இவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் கூட்டுபவை. கேக்குக்கு வண்ணம் சேர்ப்பதற்காகச் சேர்க்கப்படும் நிறங்கள், செரிமானம் தொடர்பான பிரச்னையை ஏற்படுத்திவிடும். சிலருக்கு அலர்ஜிகூட ஏற்படலாம். சில வகை கேக்குகள்,சோர்வையும் உறக்கத்தையும் தரக்கூடியவை.
பொதுவாக கேக், நம் பாரம்பரிய உணவுப் பொருள் அல்ல.அதிக சர்க்கரை, வெண்ணெய், மாவுப் பொருள்கள் இவையெல்லாம் நம் நாட்டுச் சூழலுக்கு ஆரோக்கியமானவை கிடையாது.எப்போதாவது ருசி பார்ப்பதில் தவறில்லை.அதையும் அளவோடு சாப்பிடுவது சிறந்தது.
மதிய வேளைகளில் பசி எடுக்கும் போதெல்லாம் பேக்கரியில் கேக் வாங்கி சாப்பிடுவது நல்லதல்ல.கேக்கிலிருந்து சற்று தள்ளியே இருப்பதுதான் உடல்நலத்துக்கு நல்லது.

