-இ.க.இளம்பாரதி,மாஸ்டர் ஆஃப் பார்மஸி.

‘ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு’இது, நியூட்டனின் மூன்றாம் விதி.

‘செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு மருந்தின் நல்வினைக்கும் சரிசமான தீவினையும் உண்டு’. இது, இயற்கையின் நியதி.

நாம் எடுத்துக்கொள்ளும் பெரும்பாலான மருந்துகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட வேதிப் பொருள்கள்தான் (chemicals). வேளாண்மையின் பசுமைப் புரட்சியை நினைத்துப் பாருங்கள்.நாம் வாழும் மண்ணையே வேதிப் பொருள்கள் நச்சாக மாற்றுகிறது என்றால், உடலுக்குள் செல்லும் மருந்துகள் என்னென்ன செய்யலாம்…?

ஆங்கில மருத்துவம் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாத நிலையில் இன்று இருக்கிறோம். ஆபத்துக் காலங்களிலும், அறுவை சிகிச்சை சமயங்களிலும் ஆங்கில மருத்துவத்தின் தேவையை நாம் நன்கு அறிவோம்.ஆனால், தேவையற்ற சிறுசிறு உடல் பிரச்னைகளுக்கெல்லாம் வீரிய மிக்க செயற்கை மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

நோயைக் குணப்படுத்துவதற்காக, நாம் எடுத்துக்கொள்ளும் வழக்கமான சரியான அளவு மருந்தே, உடலுக்குத் தீய விளைவுகளை ஏற்படுத்தினால்,அந்த விளைவுகளை மருந்தின் எதிர்மாறான விளைவுகள் என்கிறோம்.

ஒரு சிறிய எடுத்துக்காட்டோடு. ஜலதோஷத்துக்காக எடுத்துக்கொள்ளும் வழக்கமான சரியான அளவு மருந்தே,தூக்கம் கலந்த சோம்பலை ஏற் படுத்துகிறது.

ஒவ்வொரு மருந்துக்கும் எதிர்மாறான விளைவுகள் உண்டு என்பதுதான் உண்மை. இந்த விளைவுகளைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு மருந்தும் வெவ்வேறு வகையான எதிர்மாறான விளைவுகளை உண்டுபண்ணுகின்றன.

பக்க விளைவுகள்

ஒரு நோயைத் தீர்ப்பதற்காக,நாம் எடுத்துக்கொள்ளும் சராசரி அளவுள்ள மருந்தே தேவையற்ற, ஆனால் தவிர்க்க முடியாத சில விளைவுகளை ஏற்படுத்துவதுதான் பக்க விளைவுகள் எனப்படுகிறது.

நச்சு சார் விளைவுகள் 

மருந்தை அதிக அளவு எடுத்துக்கொள்ளும்போது அல்லது தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும்போது, நச்சு சார் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மருந்தை அதிக அளவு எடுத்துக்கொள்ளுதல் என்பது, தெரியாமல் நிகழலாம் அல்லது தற்கொலை முயற்சி எடுக்கும்போதும் நிகழலாம்.

நாம் தலைவலிக்காக அடிக்கடி பயன்படுத்தும் பாரசிடமாலையே எடுத்துக்கொள்வோம். இந்த மருந்தைத் தொடர்ச்சியாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொண்டிருந்தால், கண்டிப்பாக அது கல்லீரலில் நச்சு சார் தன்மையை ஏற்படுத்தி இறுதியில் கல்லீரலைச் செயலற்றதாக்கிவிடும். இங்கிலாந்தில், 1989-ல் நடந்தப்பட்ட ஆய்வின்படி, அந்த நாட்டில் மருந்தின் மூலமாக இறக்கும் நபர்களுக்கு நான்காவது முக்கியக் காரணமாக பாரசிடமால் இருக்கிறது. ஏனென்றால், தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும்போது இந்த நச்சு சார் விளைவுகளை இது ஏற்படுத்துகிறது.

உடல் சூடானாலேயே, குழந்தைகளுக்கு அடிக்கடி பாரசிடமால் கொடுக்கும் பெற்றோர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனி முரண்பாடு

என் பரம்பரைக்கே இந்தப் பழக்கம் கிடையாது என்று பேசும் பலரைத் திரைப்படத்திலும், நேரடியாகவும் பார்த்திருப் பீர்கள்.இதைப்போலவே, சில மருந்துகள்கூட குறிப்பிட்ட மரபணு சார்ந்தவர்களுக்கு மட்டும் மருந்தின் எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.இது அனைவருக்கும் ஏற்படாது.குறிப்பிட்ட மரபணுவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒத்துவராது.இதனால், சில தேவையற்ற விளைவு களை ஏற்படுத்திவிடும்.இந்த விதமான மருந்தின் எதிர் மாறான விளைவுகளையே நாம் தனி முரண்பாடு விளைவுகள் என்கிறோம்.

மருந்து ஒவ்வாமை 

பெனிசிலின் (penicillin), செஃபலோஸ்போரின்ஸ் (cephalosporins), சல்ஃபோனமைட்ஸ் (sulphonamides), டெட்ரா சைக்ளின் (tetracycline) மற்றும் காசநோய் மருந்துகள் (anti TB drugs) உள்பட இன்னும் பல மருந்துகள், மருந்து ஒவ் வாமையை ஏற்படுத்துகின்றன.

மருந்து ஒவ்வாமையை ஏற்படுத்தும் மருந்துகள்,நமது உடலின் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிட்டுச் சில தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மருந்தின் ஒவ் வாமையைப் பொறுத்து, சில சமயங்களில் உயிரிழப்புகூட நேரலாம்.

மருந்து சார்பு நிலை

மனவியல் மற்றும் உடலியல் ரீதியாகச் சில மாற்றங்களை ஏற்படுத்தி, உடலும் மனமும் அந்த மருந்துகளைச் சார்ந் திருக்கவைக்கும் நிலையே மருந்து சார்புநிலை எனப் படுகிறது.இது இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று, மனவியல் சார்ந்தது (psychological dependence). மற்றொன்று, உடலியல் சார்ந்தது (physiological dependence).

எனது பாட்டி தலைவலி ஏற்படும்போது, எப்போதும் மஞ்சள் நிற அட்டையைப் பிரித்து மாத்திரையை எடுத்துக்கொள்வார். சில சமயம், மஞ்சள் நிற அட்டை மருந்து கிடைக்காமல், வெள்ளை  நிற அட்டையில் உள்ள மருந்தை விழுங்கிய சில நிமிடங்களில், தனது தலைவலி சரியாகவில்லை என்றும், வெள்ளை நிற அட்டை மருந்து சரியாக வேலை செய்யவில்லை என்றும்(மருந்தின் தன்மை ஒன்றுதான்)கூறுவார்.அவர் தனது மனத்தில் அழுந்தப் பதிவு செய்த ஒன்று, மஞ்சள் நிற அட்டை மருந்துதான் தலைவலியைச் சரியாகப் போக்கும் என்பது-இதைத்தான் மனவியல் சார்ந்த ஒரு வகையாகப் பிரிக்கிறார்கள்

மனவியல் சார்ந்த மருந்துகள், மனத்தளவில் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்துகிறது என்றால், உடலியல் சார்ந்த மருந்துகள் உடல் அளவில் மருந்தைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்துகின்றன. சிலவகை மருந்துகள், ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண் டிருப்போம்.நோய் அல்லது அந்தப் பிரச்னையின் முடிவில்,அந்த மருந்தை நிறுத்தும் சமயத்தில் உடல் அளவில், அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலைமையை, உடலியல் சார்ந்தது என்கிறோம்.

பெரிய விபத்தின்போது அல்லது மனவியல் சிக்கலுக்காகச் சாப்பிடும் சில வகை மருந்துகளை நிறுத்தியவுடன்,உடலின் நரம்பு மண்டலம் சில சமயம் தளர்ச்சியடைந்து, படபடப்புத் தன்மையை ஏற்படுத்துகிறது.இதுவே, உடலியல் சார்ந்ததற்கு எடுத்துக்காட்டாகும்.

இந்த மருந்து சார்பு நிலையை வேறு கோணத்தில் இரு வகையாகப் பிரிக்கலாம். அதாவது, ஒரு மருந்துக்கு அடிமையாவது அல்லது பழக்கப்படுவது.இது பெரும்பாலும் மருந்தை மருத்துவர்களின் அனுமதியின்றித் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளும் நபர்களைப் பாதிக்கக்கூடியது. மருந் தைப் பயன்படுத்தச் சொன்ன அளவைவிடச் சற்றுக் கூடுதலாக எடுத்துக்கொண்டு, போதையை அனுபவிப்பவர்களே, மருந்துக்கு அடிமையானவர்கள் என்கிறோம். போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் முற்றிலும் இந்தப் பிரிவைச் சார்ந்தவர்களே.

அடிமையாதல் என்பது தீவிரமானது, சற்று வீரியம் குறைந்தது, பழக்கம். பழக்கத்துக்குப் பல எடுத்துக்காட்டுகள். சிலருக்குக் காலைக் கடனுக்காகச் சுருட்டு பிடிப்பது, புகையிலை, வெற்றிலை, பாக்கு, தேநீர், அப்பப்ப தண்ணி (குடிநீர் இல்லைங்க) இவை அனைத்தும் பலருக்குப் பழக்கமாக இருக்கிறது.

கரு பாதிக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கும் தன்மை 

பெண் கருவுற்றிருக்கும்போது, எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள்,கருவில் இருக்கும் குழந்தையை நேரடியாகப் பாதிப்படையச் செய்யும் மருந்தின் எதிர்மாறான விளைவு களுக்கு, கரு பாதிக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கும் தன்மை என்று பெயர். தாலிடோமைடு துயரமே இந்தப்

பாதிப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.  புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் தன்மை மற்றும் மரபணு மாற்றம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் தன்மை …

எந்த ஒரு மருந்து, புற்றுநோயையோ அல்லது நமது மரபணு வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அந்த விளைவுகளின் பெயரே புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் தன்மை மற்றும் மரபணு மாற்றம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் தன்மை என்று அழைக்கப்படுகிறது.

மருந்தே எப்படிப் புற்றுநோயை உண்டு பண்ணும் என்ற கேள்வி எழலாம்.அனைத்து மருந்துகளும் புற்றுநோயை ஏற் படுத்துவது கிடையாது. குறிப்பிட்ட சில வகை மருந்துகள், உடலில் மறுஉரு அடைதலின்போது ஆக்சிஜனேற்றம் அடைந்து, அடுத்தகட்ட மறுஉரு அணுக்களை உருவாக்குகிறது. இந்த வகை மறுஉரு அணுக்கள், நமது மரபணுவைப் பாதிக்கச் செய்து, மரபணு உருவ மாற்றத்துக்கும் வழி வகுத்து, இறுதியில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

நோய்களை உருவாக்கும் மருந்துகள்

மருந்துகளே நோய்களை உருவாக்கும் செயல்கூட, மருந்தின் ஒருவகை எதிர்மாறான விளைவுகள்தான். நோயைக் குணப்படுத்த வரும் சில மருந்துகள், நோயைக் குணப்படுத்து கிறதோ இல்லையோ, சில நேரங்களில் நோயை உருவாக்க வழிவகை செய்கின்றன. ஆஸ்பிரின் (aspirin) வகை மருந்துகள், குடல் புண்ணை ஏற்படுத்துவது, ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மருத்துவர்கள் ஆலோசனை பெற்று குறைந்த காலத்தில் மருந்து சாப்பிட்டு நலம் பெற வேண்டும்.தேவை இல்லாமல் மாத்திரைகளை மிட்டாய் மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டாம்.நல்லது செய்யும் மருந்து நாசமும் செய்யும்.