
வாய் விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும்… என்று எப்போதோ நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனது,இன்று மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.
‘ஹ்யூமர் தெரபி ‘என்ற பெயரில் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘சிரிப்பு மருத்துவம்’ என்கிற ‘மகிழ்ச்சி மருத்துவம்’ பற்றிய ஆராய்ச்சி, உலகின் பல மூலைகளிலும் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.எண்பத் தைந்து சதவிகித நோய்களைக் குணப்படுத்துவதற்கு நம் உடலிலேயே இயற்கையான மெக்கானிசம் இருக்கிறது.அதில் சிரிப்புக்கு முக்கிய பங்குண்டு.
உடலின் அடிப்படை ஆரோக்கியத்துக்கும் மனம் சார்ந்த உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.வெறுப்பு, கசப்பு, வறுமை,அவ நம்பிக்கை, மனத்தளர்ச்சி,ஏக்கம், மனப் போராட்டம்,கவலை,தனிமை போன்ற எதிர்மறை உணர்வுகள் தலை தூக்கும் போது நோய்கள் எளிதில் குணமாவதில்லை.அதே நேரத்தில் அன்பு,நம்பிக்கை,கவனிப்பு, நெருக்கம், மகிழ்ச்சி,மன நிறைவு போன்ற உணர்வுகளுடன் இருக்கிறபோது நோய்கள் வெகு சீக்கிரத்தில் குணமாகின்றன.
‘இதயத்துக்கு சிரிப்பு இதமானது’ என்கிறது இன்னொரு ஆய்வு முடிவு.அடுத்த முறை நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்து முடித்ததும் இதயத்தின் மீது கையை வைத்துப் பாருங்கள்; இதயம் படபடவெனத் துடிக்கும்.சிரித்து முடித்து 15-20 விநாடிகள் கழிந்த பிறகும் இப்படி இதயம் ஜரூராக வேலை செய்வது வீட்டுக்குள்ளேயே ‘ஜாகிங்’ செய்வதற்கு இணையானது என்று சொல்லப்படுகிறது.
ஏதாவது உடலில் தொந்தரவு இருந்து, வலி இருந்தால் அந்த வலியின் தீவிரத்தை குறைப்பதிலும் சிரிப்புக்கு முக்கிய பங்கு இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
சிரிக்கும்போது உடலில் என்டோர்பின் என்கிற ஹார்மோன் சுரக்கிறது.இதனால் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.சிரிப்பதால் தசைகளின் இருக்கம் தளர்வதோடு இந்த எண்டோர்பின் ஹார்மோன் சேர்வதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சிரிக்கும் மனிதன் சிங்கத்துக்கும் நண்பன் ஆவான் என்று ஒரு பழமொழியும் உண்டு.
-எம். ஜெயஸ்ரீ.

