லகில் எத்தனையோ உணவுகள் இருந்தாலும் முட்டைக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது.காய்கறிகள், பழங்கள்,தானியங்கள்,இறைச்சிகள் என எதுவாயினும் அவை முழுமையான உணவு இல்லை.ஆனால்,முட்டை என்பது முழுமையானது.

ஒரு மனிதனுக்கு தேவையான எல்லா விதமான சத்துகளும் முட்டையில் இருக்கின்றன.முட்டை பற்றிய அச்சம் அதன் கொழுப்பிலிருந்து தான் தொடங்குகிறது.கொழுப்பும் கொலஸ்ட்ராலும் ஒன்றல்ல.கொழுப்பில் நல்லது செய்யும் கொழுப்பும் இருக்கிறது; கெட்டது செய்வதும் இருக்கிறது.

முட்டையில் இருக்கும் கொழுப்பு நம் உடலை வலுப்படுத்துமே தவிர பாதிக்காது.

உண்மையில் கொலஸ்ட்ரால் என்பது உடலுக்கு இன்றியமையாத உயிர் காக்கும் பொருள் என்று எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.சைவம் மட்டுமே சாப்பிடுவதற்கு கூட தினமும் 1,500-2000மி.கி. கொலஸ்ட்ராலை நம் கல்லீரல் உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கிறது.நம் உடலில் இருக்கக்கூடிய உயிர் காக்கும் ஹார்மோன்கள் அனைத்தும் கொலஸ்ட்ராலில் இருந்து உற்பத்தி ஆகுபவை தான்.

முட்டை பயன்பாடு பற்றி உலக அளவில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
எல்லா ஆராய்ச்சிகளையும் உள்வாங்கி அதனடிப்படையில் என்னுடைய பரிந்துரை என்னவென்றால், குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு தாராளமாக இரண்டு முட்டைகள் கொடுக்கலாம்.குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் 1 முட்டை கொடுக்க ஆரம்பித்து,வளர வளர 2 முட்டைகளாக உயர்த்தலாம். பெரியவர்களும் தினமும் இரண்டு முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் 3 முதல் 4 முட்டைகள்கூட சாப்பிடலாம்.சர்க்கரை, இதய நோய் உள்ளவர்கள்,மாரடைப்பு வந்தவர்கள் அல்லது கொலஸ்ட்ராலை சரியாகப் பராமரிக்க முடியாத மரபணுப் பிரச்னை உள்ளவர்கள் மஞ்சள் கருவுடன் சேர்த்து ஒரு முட்டை தினமும் சேர்த்துக்கொள்ளலாம். இதயத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும் மஞ்சள் கருவுடன் தினசரி ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் அவசியம்.கர்ப்பிணிகளும் தாராளமாக தினமும் மஞ்சள் கருவுடன் இரண்டு முட்டைகள் எடுத்துக் கொள்வது அவசியம்.

முட்டையை சேமிப்பது எப்படி?

முட்டையை தாராளமாக சாதாரண தட்பவெப்பத்திலேயே சேமித்து வைக்கலாம்.ஃப்ரிட்ஜில் வைத்தாலும் தப்பில்லை.ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் முட்டைகளை சமைக்கும் முன் கொஞ்சநேரம் வெளியில் வைத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.

முட்டையை சமைக்காமல் சாப்பிடலாமா?

1% முதல் 2% வரை முட்டைகளில் சால்மோனிலா( salmonella)எனப்படும் கிருமிகள் இயற்கையாகவே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் சமைக்காமல் சாப்பிட்டால் வாந்தி,பேதி,வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே சமைத்துச் சாப்பிடுவது எல்லா வகைகளிலும் சிறப்பு.சிலர் உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் 10-20 முட்டைகளை சமைக்காமல் சாப்பிடுவார்கள். இதுவும் நல்லதல்ல.வெள்ளைக் கருவில் இருக்கும் அவிடின்( avidin) என்ற வேதிப்பொருள்,பயோட்டின் என்ற வைட்டமினின் செயல்திறனைக் குறைத்துவிடும்.பயோட்டின் சத்துக் குறைபாடு வந்தால் சருமப் பிரச்னைகள்,முடி கொட்டுதல் போன்ற பாதிப்புகள் வரலாம்.

முட்டை கெடாமல் இருக்கிறதா… எப்படி கண்டுபிடிப்பது?

முட்டை கெடாமல் இருக்கிறதா… இல்லையா? என்பதைக் கண்டறிய பலரும் அறிந்த டெஸ்ட் ஒன்று உள்ளது. தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டால், நல்ல முட்டை மூழ்கிவிடும்.பழைய முட்டை மிதக்கும். நாள்கள் ஆக ஆக முட்டையின் ஓட்டில் இருக்கக்கூடிய நுண்துளைகள் பெரிதாகும்.அதன்மூலம் காற்று உள்ளேபோய் எடை குறைந்துவிடும்.

ஆரோக்கியமான வாழ்வு வாழ அன்றாட உணவில் அச்சமின்றி முட்டையை சேர்த்துக் கொள்ளலாம் என்பதே எனது சிபாரிசு.