செல்ஃபோனை தவிர்ப்பது இன்றைய காலகட்டத்தில் சாத்தியமில்லாதது. அதேநேரத்தில் பாதுகாப்பாக பயன் படுத்துவது நல்லது.கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

* குறைவாக கதிர்வீச்சை வெளியிடும் (ஸ்பெசிஃபிக் அப்சர்ப்ஷன் ரேட் SAR) செல்ஃபோன்களை தேர்ந்தெடுக்கலாம்.

* அதிக நேரம் ஃபோனில் பேச வேண்டியிருந்தால், முடிந்தவரையில் லேண்ட் லைனை பயன்படுத்தலாம்.

*செல்ஃபோன் உரையாடலை சுருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். சுருக்கமான விஷயங்களுக்கு எஸ்.எம்.எஸ்.தான் சிறந்தது.

* பேசும்போது முடிந்தவரையில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துங்கள். புளூடூத் கருவியையும் பயன்படுத்தலாம்.ஒப்பீட்டளவில் அது குறைவான கதிர்வீச்சையே வெளிப்படுத்துகிறது.நீங்கள் தனியாக இருக்கும் நிலையில் ஸ்பீக்கரை ஆன் செய்தும் பேசலாம். இதனால், கதிர்வீச்சு அபாயம் குறையும்.

* செல்ஃபோனை எப்போதும் பாக்கெட்டில் அல்லது கைகளில் வைத்திருக்க வேண்டாம்.சற்றுத் தொலைவில் மேஜையில் அல்லது ஷெல்ஃபில் வையுங்கள். உறங்கும்போது ஃபோனை ஆஃப் செய்துவிடுங்கள் அல்லது அடுத்த அறையில், உங்களைத் தொந்தரவு செய்யாத தூரத்தில் வையுங்கள்.

* சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஃபோன் செய்வதைத் தவிருங்கள்.நேரிலேயே தகவலைப் பரிமாறிக்கொள்ள முடியுமென்றால், அதுவரை காத்திருங்கள்.

* ஒருவரை ஃபோனில் அழைக்கும்போது, அவர் அந்த அழைப்பை எடுக்கும் வரையில் செல்ஃபோனை காதில் வைத்திருக்க வேண்டாம்.அவர் அழைப்பை எடுத்த பின்னர் பேசலாம்.

* சிக்னல் அளவு அதிகமாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவது நல்லது. சிக்னல் குறைவான இடத்தில் இருந்து நீங்கள் செல்ஃபோனில் பேசும்பொழுது, அதிக அளவு கதிர்வீச்சை வெளியிடும்.

* செல்ஃபோன் விளையாட்டுகளை குறைத்துக்
கொள்ளுங்கள் அல்லது தவிருங்கள்.இதனால் குடும்பத்தினருடன் செலவிட அதிக நேரம் கிடைக்கும்.

* செல்ஃபோன் கேமராவை முறையாகப் பயன்படுத்துங்கள். குழந்தைகள் பார்க்கக்கூடாத படங்கள், வீடியோக்கள் எடுப்பதைத் தவிருங்கள். இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்வதையும் தவிருங்கள்.யாரேனும் பார்க்க நேர்ந்தால் மதிப்பு கெடும்.

* குழந்தைகளுக்கு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்திருந்தால். அவர்களுக்கு வரும் செய்திகளையும் அழைப்புகளையும் கண்காணியுங்கள்.

* விருந்தினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் செல்ஃபோனில் பேசுவதைத் தவிருங்கள்.

* குடும்பத்தினருடன் ஏதேனும் முக்கியமான விஷயத்தைப் பேச வேண்டியிருந்தால் செல்ஃபோன்களை சுத்தமாகத் தவிருங்கள். உறவுகளையும் நட்பையும் பலப்படுத்த நேரடிச் சந்திப்பை பழக்கமாக்குங்கள். முதுகில் தட்டி உற்சாகமூட்டுவதையும், தோளில் சாய்ந்து ஆறுதல் தருவதையும் எந்த நவீன செல்ஃபோனாலும் செய்ய முடியாது.

* எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. செல்ஃபோன் வருவதற்கு முன்பும் நம் தொடர்புத் தேவைகளை நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. ஆகவே, செல்ஃபோன் என்பது வசதிக்காகத்தான். தொழில்நுட்பத்துக்கு எப்போதும் மனிதர்கள் அடிமையாக இருக்கக் கூடாது.