
பள்ளி,கல்லூரிகளில் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றவர் தொழில்,வியாபார நிறுவனங்களில் மேலாளர்,தலைமை நிர்வாகியாக உயர்ந்திருப்பார்.வகுப்பிலேயே கடைசி மாணவனாக இருந்தவர், மேலே சொன்னவருக்கு வேலை கொடுத்த முதலாளியாகவே உச்சம் தொட்டு இருப்பார்.
படிக்காதவர் தான் உயர்ந்த நிலைக்கு வருவாரா? என்று கூட கேட்க தோன்றலாம். வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.
உங்கள் இலக்கு என்ன என்பதை நீங்கள் முழுமையாக உணர்ந்து இருந்தால் உங்களால் நிச்சயம் பொறுமையாக இருக்க முடியும். லட்சியத்திற்கான அடிப்படைப் பணியைத் தொடங்கிவிட்டு, அடுத்தடுத்த உங்கள் செயல்களை பொறுமையாக அதாவது Active patience ஆகச் செயல்படுத்த முடியும்.அப்படிச் செயல்படும்போது, அந்த பொறுமையே அதன் வெற்றிக்கான மூலதனமாக அமையும்
வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையை செய்யத் துடித்த ஒரு பெண்ணின் வெற்றிக் கதையை சான்றாக அறியலாம்.
சான்டியாகோவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை, ஃப்லோரென்ஸ் சாத்விக். அவருக்கு ஆறு வயதில் தொடங்கியது நீச்சல் ஆர்வம்.நீச்சலை நேசித்த அவள், பலரும் பதறும் நீண்ட நீர்ப்பரப்பினைக்கூட அநாயாசமாக நீந்திக் கடந்து சாதனைகள் பல செய்தாள்.தன் 34வது வயதில் கலிஃபோர்னியாவின் நீர்ப்பரப்பில் 21 மைல் நீந்திக் கடக்கப் போகும் முதல் பெண்மணியாக சாதனை செய்யத் தீர்மானித்து, நீந்தத் தொடங்கினாள். சரசரவென நீந்திப் பல மைல்களைக் கடந்தாள். இன்னும் சில நிமிடங்கள்தான்,இதோ வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டோம் என அவள் மனம் சொல்ல, அதே நேரத்தில் கடுமையான பனிமூட்டத்தால்,சேர வேண்டிய கரைப் பரப்பை அவளால் பார்க்க முடியாமல் போனது.தான் இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டி இருக்கிறது என்பதைக் கணக்கிட முடியாமல் போனதால் அவளது மனமும் உடலும் சட்டென்று சோர்ந்துபோக பொறுமை இழந்தாள் அவள்.இனி தன்னால் நீந்த முடியாது என்று தீர்மானித்தவள், போட்டியைக் கைவிட்டுவிட்டு, தனக்கு சப்போர்ட்டாக பின் தொடர்ந்து வந்த படகில் ஏறினாள்.
அடுத்த ஓரிரு விநாடிகளிலேயே படகு கரையை அடைய, அதிர்ந்துபோனாள், அவள்.ஆம், சுமார் இருபது கிலோமீட்டருக்குமேல் சலிக்காமல் நீந்திய அவள், இன்னும் ஓரிரு மீட்டர் தொலைவு நீந்தியிருந்தால், சாதனையில் வெற்றியடைந்திருப்பாள்.
தான் இன்னும் எத்தனை தூரம் போராட வேண்டி இருக்கும் எனும் வரையறை தெரியாததாலே பொறுமையை இழந்து மனம் வலுவிழந்து தான் முயற்சியைக் கைவிட நேர்ந்ததை உணர்ந்தாள்.
அடுத்த இரண்டே மாதத்தில், மீண்டும் அதே சவாலை எதிர்கொண்டாள்.இந்த முறை அவள் போட்டியைத் தொடங்கியதில் இருந்தே பனிமூட்டம் நிலவியது. இருந்தாலும் தோல்வி தந்த பாடம், கரை அருகில்தான் இருக்கிறது என்று அவள் மனதை சிந்திக்கத் தூண்ட, அதனால்,இந்த முறை முன்பைவிட வேகமாக நீந்தி,குறிப்பிட்ட இடத்தை அடைந்து, குறுகிய நேரத்தில், அந்த நீர்ப்பரப்பினைக் கடந்த முதல் பெண்மணியாக வரலாற்று சாதனை புரிந்தாள் அவள்.
உங்கள் சூழல்கள் எவ்வளவு மேகமூட்டமாக தெளிவில்லாமல் இருந்தாலும்,பதட்டமோ, பரபரப்போ இன்றி பொறுமையோடு உங்கள் இலக்கில் நீங்கள் தெளிவாக இருந்தால், வெற்றிக் கோட்டை அடைந்து விடுவேன் எனும் நேர்மறை எண்ணம் உங்களுக்கு நிச்சயம் எழும்.அதன் விளைவாக வெற்றியை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். அதனால், நிறைவான மகிழ்ச்சி உங்கள் மனமெங்கும் நிறையும்!

