சமீபத்தில் திரைப்பட கலைஞரின் மகள் தற்கொலை, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.சைக்காலஜியை கற்பிப்பதில் எனது வாழ்நாள் பணியாக செய்து வருவதால், என்னால் அவ்வளவு எளிதாக கடந்து போக முடியவில்லை.
தற்கொலை என்பது கோழைத்தனம் அல்ல; அதுவும் ஒரு கொலை தான்.தற்கொலை ரொம்பவே துயரமானது.அதுவும் சிறுவர் தற்கொலைகளை ஏற்றுக்கொள்ளவே முடியாதது.கல்வி என்பது வாழும் நம்பிக்கையை தராமல் மன அழுத்தத்தை அச்சத்தை அளிப்பதாக இருக்கலாமா? நம்பிக்கையை விதைக்காத கல்வி, நாளைய சமூகத்திற்கு எப்படி பயன்படும்?
வெற்றி தோல்விகளை சரிசமமாக பார்க்க நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதே இல்லை.விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபடும் மாணவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் சமமாக கிடைக்கும்.அந்த அனுபவங்கள் எதார்த்த வாழ்க்கையில் உதவும்.ஆனால் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான பள்ளிகளில் இன்று விளையாட்டு மைதானங்கள் இருப்பதில்லை அப்படியே இருந்தாலும் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது இல்லை.
படிப்பு தான் முக்கியம்; மார்க் தான் அவசியம்.வேறு எதுவும் வேண்டாம் என்று தவறாக வழிநடத்துகிறோம்.
படி படி. மார்க் எடு.இல்லை என்றால் நீ வாழ்ந்து என்ன பயன்? என்று மனதில் பாரத்தை ஏற்றுகிறார்கள்.தங்களால் தேர்ச்சி பெற முடியாத நிலை வரும்போது பிள்ளைகள் கையறு நிலைக்குச் செல்கிறார்கள்.செய்வதறியாது நிற்கிற குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லி தேற்றுகிற எந்த ஏற்படும் நம்மிடம் இல்லை.
குழந்தைகளுக்காகத்தான் கல்வி; கல்விக்காக மட்டுமே குழந்தைகள் என்பது ஏற்க முடியாது.
தற்கொலைகளை தடுக்க முடியும்.பள்ளி ,கல்லூரிகளில் மன நல ஆலோசனை வழங்கும் ஏற்பாடுகள் அவசரம்.
தற்கொலைகளை தடுக்க பெற்றோர்களுக்கு இருக்கிற முக்கியத்துவம் ஆசிரியர்களும் உண்டு.
ஆசிரியர்கள் ஆத்மார்த்தமாக குழந்தைகளோடு நெருங்கி பழகி அவர்களின் மன உணர்வுகளை தெரிந்து கொண்டு தக்க சமயத்தில் வழி காட்ட வேண்டும்.எதற்கும் கவலைப்படாதே… நாங்கள் இருக்கிறோம் என்று உதவிக் கரம் நீட்ட வேண்டும்.
மனநல மருத்துவர்கள்,மன நல ஆலோசகர்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வர வேண்டும்.
தற்கொலை என்பது தனிப்பட்ட நபர் பிரச்சனை என்று பார்க்காமல் சமூக பிரச்சனையாக பார்த்து அதற்கான தீர்வுகளை தேட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
அன்புடன்,
டாக்டர் ஜி.ராஜமோகன்.

