டாக்டர் கே.ராதாகிருஷ்ணன், MBBS,DPM.
மனநல மருத்துவர். நிலா மனநல மருத்துவமனை. தஞ்சாவூர் 

ந்த உலகத்தின் பேரதிசியங்களில் ஒன்று நமது உடல்.நமக்காக நமது நலனுக்காக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எந்நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கிறது.

அதிசயமும் அற்புதமும் அழகும் நிறைந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் ஏற்படும் மனநெருக்கடிகளை எதிர் கொண்டு சமாளிக்க முடியாமல் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் அல்ல.

உலகளவில் ஆண்டுதோறும் 1.5 கோடி பேர் தற்கொலை முயற்சி மேற்கொள்கின்றனர். அவர்களில் 10 லட்சம் பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் மூன்றுலட்சம்பேர் தற்கொலையால் இறக்கின்றனர்.உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி உலகளவில் அதிக இறப்பினை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்களில் தற்கொலை எட்டாம் இடம் வகிக்கின்றது.

ஆண்களின் தற்கொலை முயற்சியானது பெண்களின் தற்கொலை முயற்சியைவிட தீவிரமானது; முழுமையானது. தற்கொலைக்கு முயல்பவர்களில் பெண்களே அதிகம் எனினும் தற்கொலையால் அதிகம் இறப்பது ஆண்களே.

தனிமையில் வாழ்பவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் ,ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவர்கள், அடிக்கடி தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துபவர்கள், நீண்ட நாளைய உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தற்கொலை குறிப்பு எழுதி வைப்பவர்கள், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ,புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர்.

மரபியல் சாத்தியக்கூறுகள், ஆளுமை தன்மை, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன், மன உளைச்சல்கள், ஆகியவைகள் தற்கொலைக்கு முதன்மை காரணங்களாக இருந்த போதிலும் மனநோய்களின் தாக்கமே தற்கொலை இறப்புகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. 95 சதவீதம் தற்கொலைகளுக்கு மனநோய்களே காரணமாகிறது. 80 சதவீதம் மனநோயாளிகள் இறப்பிற்கு தற்கொலையையே நாடுகின்றனர். மனநோயாளிகளில் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தற்கொலைகள் தடுக்கப்படக்கூடியதே.உற்றார் உறவினர்கள் நண்பர்கள் நினைத்தால் தடுக்க முடியும்.மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும்.தேவைப்பட்டால் மனநல மருத்துவர் ஆலோசனையை நாட வேண்டும்.

அனைத்து தற்கொலைகளும் தடுக்கப்பட கூடியவைகள் இல்லை என்றாலும் பெரும்பாலானவை தடுக்கப்பட கூடியதே. அடிக்கடி தற்கொலையை பற்றி பேசுபவர்கள்,தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துபவர்கள், ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவர்கள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,மன உளைச்சல்களால் அவதியுறுகின்றவர்கள், உயில் எழுதுபவர்கள், தற்கொலை குறிப்பு எழுதுபவர்கள் ஆகியோர்களை அலட்சியப்படுத்தாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மனநல ஆலோசனைகளுக்கும், சிகிச்சைக்கும் உட்படுத்தினால் பெரும்பாலான தற்கொலைகளை தடுக்க முடியும்.

தற்கொலை முயற்சி ஒரு கோழைத்தனம் அல்ல! அது ஒரு மனஅழுத்தத்தின் அறிகுறியே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.