புதிய நம்பிக்கை – 10   – ஆனந்த சிவா

துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள துணையுண்டா..?

பெற்றோரும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொவரும் இதை எதிர்கொண்டிருக்கலாம்… உங்கள் மகன், மகள் அல்லது குடும்பத்தில் உங்களைவிடக் குறைந்த வயதுள்ள ஒருவரிடம் உங்களுக்கு இருக்கும் ஏதோ ஒரு சிக்கலை, பிரச்சனையை ஒரு ஐந்து நிமிடங்கள் மனம்விட்டுச் சொல்லி ஆறுதல் அடைந்த நிகழ்வு உங்களில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது..?!

உங்கள் சோகங்களைச் சொல்லி ஆறுதல் அடைவதைக் கூட விடுங்கள்… பல சமயங்களில் உங்களவர்களுடைய ஏதோவொரு பிரச்சனையால் உங்களுடைய நிம்மதி முற்றிலுமாகப் போயிருக்கும்… உங்கள் சோகத்தைவிட அதுதான் உங்களுக்கு பெரும் வேதனையாக உறுத்திக் கொண்டே இருக்கும்… உங்களவர்களின் அந்தப் பிரச்சனையைப் பற்றி அவர்களிடம் கேட்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி நீங்கள் நிம்மதி அடைந்த நிகழ்வாவது ஏற்பட்டதுண்டா என்றால் அதற்கான வாய்ப்பும் இருந்திருக்காது என்று நிச்சயமாகச் சொல்லலாம்..!

கிட்டத்தட்ட இரண்டாயிரமாவது ஆண்டுகள் வரையில் ஓரளவுக்கு சமூகத்தில் சில அடிப்படையான விஷயங்கள் பெரும்பாலானவர்களால் அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தன… ஆணோ, பெண்ணோ வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருமே ஏதோ ஒரு பொதுவான சமூகக் கடமைகளுக்குக் கட்டுப்பட்டு இருந்தார்கள் என்றே சொல்லலாம்…

ஒரு ஆசிரியராக இருக்கட்டும், மருத்துவராக இருக்கட்டும், எழுத்தாளராக இருக்கட்டும், திரைக்கலைஞராக இருக்கட்டும், சாதாரண குடிமகனாக இருக்கட்டும், எவராக இருந்தாலும் ஏதோ ஒரு சமூகக் கடமை அல்லது கட்டுப்பாடு மற்றும் அடிப்படையான பொறுப்பு என்பது பெரும்பாலான மனிதர்களிடமும் இருந்தது…

உதாரணமாக, மக்களின் முக்கியமான பொழுது போக்கு அம்சமாக அமைந்திருந்த திரைப்படத்தையே எடுத்துக் கொள்வோம்… பெரிய கதாநாயகன் நடித்த படமாகவோ, பெரிய இயக்குநர் இயக்கிய படமாகவோ இருக்கலாம்… அப்படியில்லாமல் ஒரு சாதாரண அறிமுக நடிகர் நடித்த சிறிய படமாகவும் இருக்கலாம்… எந்தப் படமாக இருந்தாலும் அந்தப் படத்தில் குறைந்தபட்ச சமூக அக்கறை இருந்திருக்கிறது… எதிர்மறையான கருத்துகள் இல்லாத வகையில் எடுக்கப்பட்டதாக படங்கள் இருக்கும்…

பாடல்களை எடுத்துக் கொண்டால் கூட, காதல், சோகம், கலாட்டா, கவர்ச்சி என கலவையாக இருக்கும் அதே சமயத்தில், நல்ல கருத்துகளைச் சொல்லும் பாடலும் இருக்கும்… அல்லது மற்ற பாடல்களிலேயே நல்ல நல்ல கருத்துகளைச் சொல்லும் வகையிலும் பாடல்கள் அமைந்திருக்கும்…

பெரிய கதாநாயகர்கள் படங்களில் நிச்சயமாக உயர்ந்த கருத்துகளைக் கொண்ட பாடல்கள் இருக்கும்… படத்தின் கதையும் காட்சி அமைப்புகளிலுமே கூட அப்படிப்பட்ட சிறந்த சிந்தனைகள் அதிகமாக வெளிப்படும்…

பொழுது போக்குக்கான சினிமாவை உருவாக்குபவர்களிடமே அடிப்படையான அப்படிப்பட்ட சில நல்ல சிந்தனை, சமூக அக்கறை இருக்கிறதென்றால் சமூக பொறுப்புகள் இருந்தே ஆகவேண்டிய பொறுப்புள்ள ஆசிரியர்களும், மருத்துவர்களும், எழுத்தாளர்களும், அறிஞர்களும் எவ்வளவு அக்கறையுடன் இருந்திருப்பார்கள்…

அப்படிப்பட்ட மனிதர்கள் கொண்ட சமூகத்தில் வாழும் இளைஞர்கள் இயல்பாகவே தங்கள் குடும்பத்து மனிதர்களை, சமூகத்தைப் பின்பற்றித்தான் வளர்கிறார்கள்… தங்கள் மீது கரிசனம் காட்டும் பெற்றோர்களைப் போல, பொறுப்பான ஆசிரியர்களைப் போல, சேவை மனப்பான்மை கொண்ட டாக்டர்களைப் போல நல்ல சிந்தனைகளுடன், பொறுப்புடன், சமூகக் கடமையுடன் எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என்ற குறைந்தபட்ச அடிப்படை சிந்தனையுடன் இளைஞர்கள் இருந்தார்கள்…

அதே சமயத்தில், அவர்களுக்கென தனியான, சுதந்திரமான கருத்துகளும், சிந்தனைகளும் இருந்தன… ஆனாலும் அவற்றைத் தங்களுக்குள் வைத்துக் கொண்டு பெற்றோருடன், சமூகத்துடன் இணைந்து பயணித்தார்கள்… தங்கள் கருத்துகள் சமூகத்துடன் ஒத்துப் போகுமென்று தெரிந்தால் அதை வெளிப்படுத்தியும், தங்களின் கருத்துகள் அவசியமில்லாதது என்று உணர்ந்தால் அவற்றை விட்டு விலகிச் செல்லும் அளவுக்கு அவர்களிடம் புரிதல் இருந்தது… பரந்துபட்ட சிந்தனை இருந்தது…

தங்கள் கருத்துகளை, பிரச்சனைகளை, சோகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்… மற்றவர்களின் கருத்துகளை, சிக்கல்களை, துன்பங்களைக் காது கொடுத்துக் கேட்டார்கள்… தங்கள் எண்ணங்களுடன் ஒப்பிட்டு, தவறெனில் மாற்றிக் கொண்டார்கள்… சரியானவற்றை ஏற்றும் கொண்டார்கள்…

ஆனால், இன்றைக்கு அது சாத்தியமா..? உங்களவர்களிடமே கூட உங்கள் சோகத்தைச் சொல்லி ஆறுதல் அடைய முடியுமா..? உங்கள் குழந்தைகள், அண்ணன், தம்பி என உறவுகளிடம் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டி அவர்களை மாற்றிக் கொள்ள அறிவுறுத்த முடியுமா..? ஒரு ஐந்து நிமிடம் உங்களால் மனவிட்டு அவர்களிடம் பேச முடியுமா..?

இந்த நிலை மாறிப்போயிருக்கிறது என்கிற கசப்பான உண்மையை ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்… உலகமெங்கிலும் மாற்றங்கள் நிகழும் பொழுது அதற்கு ஏற்றவாறு இங்கும் மாற்றங்கள் நிகழ்வதை எவராலும் தடுக்க முடியாது என்று நினைத்து அசட்டையாக இருந்து விட்டோம் என்பதை பொறுப்புள்ள அனைவரும் ஒத்துக்கொண்டாக வேண்டும்…

மாற்றங்கள் இல்லாமல் உலகம் இல்லை… ஆனால், மாற்றத்தினால் நிச்சயமாக, உறுதியாக, மக்களுக்கு நன்மைதான் விளையும் என்று தெரிந்தால், அந்த மாற்றத்தை அனைவரும் வரவேற்றுத்தான் ஆகவேண்டும்… அதற்கு யாரும் தயங்கப் போவதுமில்லை… அப்படி இல்லாமல் அந்த மாற்றத்தினால் நன்மைகள் ஏற்படும் என்று உறுதியாக சொல்ல முடியாத சூழலில் அந்த மாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அனுமதிக்க வேண்டும்… ஏற்றுக் கொள்ள வேண்டும்…

அப்படி இங்கு நடக்கவில்லை… மாறாக இதுவரையில் உலகில் இல்லாத வகையில் மிகமிக விரைவாக மாற்றங்கள் நிகழ்ந்து முடிந்துவிட்டன… அந்த மாற்றங்கள் இந்த மண்ணுக்கோ, இந்த மக்களுக்கோ நன்மை அளிப்பதாக இல்லை… பெரும்பாலும் தீமையை மட்டுமே விளைவித்திருக்கிறது…

அதிலும் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்களிடையே பெரும் மாற்றத்தை உண்டாக்கி, அவர்களுக்குத் தேவையில்லாத அனைத்து விஷயங்களையும் அவர்கள் கரங்களில் கொடுத்து, மூளைக்குள்ளும் திணித்து விட்டிருக்கிறது அந்த அனாவசியமான மாற்றம்… அறிவியலின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பான மொபைல் என்கிற கருவியின் மூலம் நிகழ்ந்த மாற்றங்கள் பேராபத்துகளைத்தான் பெரும்பாலும் விளைவித்திருக்கின்றன..!

இதிலிருக்கும் இன்னுமொரு அவலம், இந்த மாற்றம் இத்தனை மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்கிற புரிதல் பொறுப்புள்ள பெரியவர்களிடமும் இல்லாமல் போனதுதான்… அதன் காரணமாகத்தான் அவர்களில் ஒரு பகுதியினர் மொபைலின் பிடியில் சிக்கிக்கொண்டு செயலிழந்து நிற்கிறார்கள்…

எவரிடமும் எதையும் கலந்து உரையாடுவதற்கு இயலாமல் போய்விட்டது… நம்மவர்களிடமே கூட, பேசியே ஆகவேண்டிய எதைப்பற்றியும் பேசமுடிவதேயில்லை…

இந்த மாற்றங்களை அவசியமற்றது என்று உணர்ந்து நமக்கும் உணர்த்திய அறிஞர்களே கூட இப்பொழுது அடுத்து என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கிறார்கள்..?! ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அடுத்து 5G என்று ஆரம்பித்து இன்னும் பல லட்சம் கோடிகளைக் கொள்ளையடிக்கப் புறப்பட்டுவிட்டார்கள்..!! எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா..? இல்லை செயல்படுவதைப் பற்றிச் சிந்திக்கப் போகிறோமா..?

(தொடரும்)…