
மனித உணர்வுகளில் நட்பு மிகவும் அழகானது. குடும்பம் இல்லாத மனிதர்கள்கூட இருக்கலாம். ஆனால், நட்பு இல்லாத மனிதர் என்று ஒருவர் இருக்கவே முடியாது. உண்மையான நட்பு எதிர்பார்ப்பு அற்றது. நட்பில் ஒப்பனையும் இருப்பதில்லை. ஒளிவு மறைவும் இருப்பதில்லை. நம் மன ஆரோக்கியத்துக்கும் தனிப்பட்ட வாழ்க்கையின் மேன்மைக்கும் நட்பின் ஆரோக்கியம் மிகவும் அவசியம்.
நட்புக்கு இலக்கணம் தந்த வள்ளுவர் தீமையை தடுத்து நல்வழி காட்டுவதே நட்பிற்கு அழகு என்கிறார். நட்பில்லா உலகை எண்ணிப் பார்க்கவே இயலாது. நாடுகளிடையே நட்பு பாராட்டப்படுவதால் தான் உலகம் மற்றொரு உலகப்போரை தடுத்து வருகிறது.
நட்பு என்பது வெறும் கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல;தவறு செய்யும் போது எடுத்துக்காட்டி தடுத்து நல்வழிப்படுத்துவதே ஆகும்.
நான் படிக்கும் காலத்திலும் கல்லூரியில் பணிபுரிந்த நாட்களிலும் எனக்கு ஏராளமானோர் நண்பர்களாக இருந்தனர்.ஓய்வு பெற்று முதுமையில் இருக்கும் போது அற்ற நீர் பறவை போல் இடம் தெரியாமல் மறந்து விடுகின்றனர்.முதுமைக்கு ஊட்டமமும் ஆறுதலும் அளிப்பது நல்ல நட்பு.
எல்லோரிடமும் இணக்கமாக இருங்கள்;ஒரு சிலரிடம் மட்டும் நெருக்கமாக இருங்கள். ஆராயாமல் நட்புக் கொள்வதும் ஆபத்து.
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்
துன்பம் வந்த காலத்து கைவிட்டு செல்வார் நட்பு,சாவை விட துன்பமான ஒன்றாகும்.
இணக்கமான விருப்பங்கள் ஆர்வங்கள்… இன்னல் வருங்கால் களைதல், எந்த நிலையிலும் விடாதிருத்தலே நட்புக்கு அழகு.
நட்பை பற்றி கூறும்போது கூடா நட்பை பற்றியும் குறிப்பிட வேண்டும். பேசுகிற சொற்களில் பணிவும் குழைவும் இருக்கிறது என்பதால் அவர்களை அப்படியே நம்பி விடாதீர்கள். எச்சரிக்கை தேவை.
ஒருவனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் நட்புகளே காரணம்.முதுமையின் துன்பம் நல்ல நண்பர்கள் இல்லாமையே!
பல வகையான சங்கங்கள் அமைப்புகள் இருந்தாலும் நெருங்கிய உண்மையான நண்பனுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
-நன்றியுடன் டாக்டர் ஜி .ராஜமோகன்

