
இளம்பெண்கள் சிலருக்கு மாதவிலக்கின்போது அடி வயிற்றில் கடுமையான வலி இருக்கும். அதே நேரத்தில் இயல்பான உதிரப்போக்கு இல்லாமல், மிகக்குறைந்த அளவே இருக்கும். இதனால் கருப்பையில் சேர்ந்திருக்கும் கழிவுகள் இயல்பாக வெளியேறாமல் அவதிப்படுவார்கள். இப்படி கஷ்டப்படுகிறவர்களுக்கு பப்பாளியே துணை! இவர்கள் மாதவிலக்கு நாட்களில் பப்பாளி சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம். பப்பாளிப் பழம் கருப்பையின் உட்புற தசைகளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. இதனால் இயல்பான உதிரப்போக்கு ஏற்படுகிறது. வலியும் குறைகிறது.
மலச்சிக்கலை தவிர்க்க பப்பாளி நல்ல மருந்து. நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தின் துண்டுகள் நான்கைந்தை தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் என்ற பேச்சே இருக்காது. அதிகாலையில் வெறுமனே பப்பாளி சாப்பிடுவது சிலருக்கு பிடிக்காது. அவர்கள் இதை வேறுவிதமாக எடுத்துக் கொள்ளலாம். பப்பாளி, கொய்யா இரண்டையும் சிறுசிறு துண்டுகளாக்கி, கலக்கி ‘ஃப்ரூட் சாலட்’ மாதிரி சாப்பிடலாம். இதை அதிகாலையில்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

