
– டாக்டர் ஜி.ராஜமோகன்
சைக்கோதெரபிஸ்ட்
சைக்கோதெரபிஸ்ட்
நம்பிக்கைதான் வாழ்க்கையின் அஸ்திவாரம்.
அந்த நம்பிக்கையில் சந்தேகம் என்று வந்து விட்டால் அதுவே வாழ்க்கையைச் சீரழிக்கும் ஒரு அஸ்திரமாக மாறிவிடும். கணவன் மனைவியை நம்ப வேண்டும். அதேபோல் மனைவி கணவனை நம்ப வேண்டும். காரணம் இல்லாமல் ஒருவர்மேல் மற்றவர் சந்தேகப்படக் கூடாது. ஒரு சிலருக்குக் காரணம் இல்லாமல் மற்றவர் நடத்தையின்மேல் சந்தேகம் வந்தால் அதை ஆங்கிலத்தில் Delusional Disorder என்று சொல்லுவார்கள். தம்பதியருக்குள் ஏற்படும் சந்தேகமும் ஒரு விதமான மனநோய்தான். இது ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படலாம்.
65 வயதுடைய பெரியவர். அவருடைய மனைவிக்கு வயது 60. கல்யாணம் ஆகி 40 வருடங்கள் ஆகிறது. 5 பிள்ளைகள். பிள்ளைகள் எல்லோருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. 12 பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள். மனைவிக்கு மூட்டு வலியால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. இருந்தாலும் கடந்த 4 மாதங்களாக பெரியவருக்கு அவருடைய மனைவியின் நடத்தையின்மேல் சந்தேகம். அவர் தூங்குகிற நேரத்தில் சில ஆண்கள் வந்து போவதாகவும், மனைவி அவர்களுக்காகக் காத்திருப்பதாகவும் சந்தேகப்பட்டார். பேரக்குழந்தைகளுடன் பேசினாலும்கூட சந்தேகம். இரவு முழுவதும் தூங்காமல் வாசலில் கம்போடு காத்திருப்பார். ஏன் என்று கேட்டால் யாராவது தன் மனைவியோடு உறவுகொள்ள வந்தால் அவர்களை அடித்து விரட்டத்தான் கம்போடு காத்திருப்பதாகக் கூறுவார்.
மனைவி எதேச்சையாக சும்மா வெளியில் சென்றால்கூட பின்னாடியே சென்று நோட்டம் விடுவார். தேவையில்லாமல் கோபப்பட்டு சின்ன விஷயத்திற்கும் எரிந்து விழுவார். அவருடைய பிள்ளைகள் அம்மா நல்லவர் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினர். டாக்டர் அவருக்கு டெலுசனல் டிஸ்ஸார்டர் (Delusional Disorder) நோய் வந்திருப்பதாகக் கூறினார். சிகிச்சை அளித்த சில வாரங்களில் நன்கு குணமாகி விட்டார்.
பொதுவான அறிகுறிகள்:
1. வீண் சந்தேகம்
2. அதிக கோபம்
3. எரிச்சல்
4. மன அழுத்தம்
5. தூக்கமின்மை
6. தற்கொலை எண்ணம்
– போன்ற அறிகுறிகள் காணப்படும். மற்றபடி தோற்றத்திலோ, நடவடிக்கையிலோ, வீட்டு வேலைகள் செய்வதிலோ மற்றவர்களைப் போலவே சாதாரணமாகக் காணப்படுவார்கள். எந்த ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை.
சந்தேக நோய் ஏற்படக் காரணம்:
மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றமே இதற்குக் காரணம். டோபமின் என்ற இரசாயனம் அதிகம் சுரப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. மது போன்ற போதைப் பொருட்களினாலும் இந்நோய் ஏற்படலாம்.
சிகிச்சை முறைகள்:
சந்தேகம் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தக் கூடியதே. மருந்து மாத்திரை, மின் அதிர்வு சிகிச்சை மற்றும் மனோரீதியான கவுன்சிலிங் போன்ற சிகிச்சைகள் உள்ளன. சந்தேக நோய் உள்ளவரை உடனே மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றால் முழு குணம் அடைவது உறுதி.

