
நீங்கள் சின்னதாய் எதையாவது சாதித்தாலும் கூட அதற்காக யாராவது உங்களைப் பாராட்டுகிறார்களா? அத்தகையவர்களை அடிக்கடி சந்தியுங்கள். உங்கள் சாதனைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் உங்களைப் பாராட்டும் போது உங்கள் பலம் பல மடங்கு அதிகரிக்கிறது என்பதை உணர்வீர்கள்.
இந்தப் பாராட்டுக்கள்தான் உங்களுக்கான ஹார்லிக்ஸ், பூஸ்ட், பழச்சாறு, டானிக் எல்லாமே. அப்படிப் பாராட்டுபவர்களை நீங்கள் நண்பர்களாகக் கொள்ளவேண்டும். இத்தகைய நண்பர்களைக் கண்டு பிடிப்பது சிரமமாக இருக்கிறதா?
உங்கள் நலனில் யாரெல்லாம் அக்கறை கொண்டவர்கள் என்று முதலில் ஒரு பட்டியல் போடுங்கள். உங்கள் ஆற்றலை வெளிக் கொண்டு வர உண்மையாகவே விரும்புகிறவர்களைக் கண்டு கொள்ளுங்கள். இவர்களுக்கு உங்கள் மேல் பொறாமை இருக்கக்கூடாது.
அவர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு மனப்பூர்வமாக மகிழ்பவர்களாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்க வேண்டும் என்பதில்லை. ஒருவரோ இருவரோ கிடைத்தால் கூடப் போதும்.
உங்களால் முடியும் என்று சொல்பவர்களிடம் பழகுங்கள். உங்களால் முடியாது என்று சொல்பவர்களை விலக்குங்கள்.
உங்களுக்கு ஊக்கம் தருபவர்களைத் தேடிச் செல்லுங்கள். உங்கள் உறுதியைக் குலைப்பவர்கள் உங்களைத் தேடி வந்தாலும் ஓடி மறையுங்கள்.

