ஆனந்த சிவா

னிதன் சிந்திக்கத் துவங்கிய காலம் முதல், அவனிடம் மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன… புதிய மாற்றங்கள் ஏற்பட முக்கியமான காரணமாக அமைவது மனிதனின் சிந்தனைதான்… மனிதன் தன் சிந்தனைகளை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கத் தயங்காதவனாக இருந்தான்… இயற்கை மனிதனுக்குக் கொடுத்திருக்கும் மிகச்சிறந்த பரிசான மூளையின் அமைப்பு அப்படிப்பட்டது… இயற்கையின் அந்தச் சிறப்பான அமைப்பினால், மனித மூளையானது தன் திறனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது…

மனிதனுடைய மூளையின் திறன் அதிகரிப்பதன் மூலம் அல்லது மனிதன் அதிகமாகச் சிந்திக்கத் துவங்கியதன் மூலமாகத்தான் மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்கிறான். அப்பொழுதுதான் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன… மனிதனின் முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாகவும், மனித சமூகத்தின் மாற்றங்களுக்கான முதல் தகுதியாகவும் சிந்தனைதான் அமைந்துள்ளது…

ஆனால், இன்று அந்த முக்கியமானத் தகுதி, முதன்மையான தகுதி மனிதர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போய்விட்டதோ என்று எண்ணுமளவுக்கு நிலைமை அமைந்திருக்கிறது… அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் இந்தச் சிந்தனையற்ற போக்கு அதிகரித்து விட்டது… மனிதன் தன் எண்ணங்களை, சிந்தனைகளை, தன் கருத்துகளைப் புதுப்பித்துக்கொள்ளத் தயங்காத அந்தத் தகுதியானது இன்று, அறவே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது… இன்றைக்கு மக்கள் தங்கள் எண்ணங்களை, சிந்தனைகளை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாத போக்குதான் அதிகம் இருக்கிறது… அப்படியே மாற்றிக்கொள்ளத் தயாரானாலும், அந்த மாற்றம் அவசியமற்றதாகவே இருக்கிறது…

மிக எளிதாகப் புரியக்கூடிய ஒரு செய்தியைச் சொல்வதன் மூலமாக இதை உணர்த்த முடியும்… கொரோனா என்ற வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் என்று உலகத்தில் உள்ள அனைத்து மருத்துவ வல்லுநர்களும் கூறிவிட்டார்கள்… தடுப்பூசி போட்டுக் கொண்டபின் இறப்பு விகிதமும், நோயின் தாக்கமும் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பதும் நிரூபணமாகி இருக்கிறது… ஆனாலும், இன்னும் உலகமெங்கிலும் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்… இதற்குக் காரணம், இவர்கள் கொரோனா என்கிற வைரஸைப்பற்றி ஓரளவுக்காவது தெரிந்து கொள்ள முயல்வதும் இல்லை, சிறிதளவுகூட எதைப்பற்றியும் சிந்திப்பதும் இல்லை… கொரோனாவுக்கு மட்டும் இல்லை, இப்படித்தான் எல்லாவற்றிலும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையானது…

எந்த ஒன்றைப்பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டுவிட முடியாது என்றாலும், ஓரளவுக்காவது சரியாகத் தெரிந்து கொண்டு, அவற்றைப் பற்றிச் சிரிதளவு சிந்திக்கும் போதுதான் அதில் இருக்கும் சரி அல்லது தவறு நமக்குப் புரிய வரும்…  ஆனால், அறிவியலைப் பற்றியோ, உடலைப் பற்றியோ எதுவும் தெரிந்து கொள்ளாமல், கண்ட கண்ட குப்பைகள் மூலமாகத் தெரிந்து கொண்டவற்றைக் கொண்டு, தங்களுக்கு இருக்கும் அரைகுறை அனுபவத்தில், தம் சிந்தனைகளை மட்டுமே சிறந்ததாக எண்ணிக் கொள்வதுதான் அதிகமிருக்கிறது… அதைவிட அபத்தமான செயல், ஆபத்தான செயல் வேறு எதுவாக இருக்க முடியும்..? இன்று நம் சமூகத்தில் அதுதான் மனிதர்களிடம் இருக்கும் இயல்பான குணமாகவே மாறிப்போயிருக்கிறது…

நுனிப்புல் மேய்ந்தால்..?

அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, வியாபாரம், அறிவியல், கல்வி என எந்தத் துறையாக இருந்தாலும், அந்தந்தத் துறையில் சாதனைகளைப் புரிந்த ஒரு மனிதனைப் பற்றிச் சில ஆயிரம் பக்கங்களில் ஒரு புத்தகம் வெளியாகி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்… அந்தப் புத்தகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு அந்தச் சாதனையாளனைப் பற்றித் தெரிந்து கொண்டு விட்டதைப்போல் பேசுவதும், அவனையும் அவன் வரலாற்றையும் முழுமையாக அறிந்து கொண்டதுபோல் புலம்புவதும் எவ்வளவு அபத்தமான செயலாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்..?

மூன்று மணி நேரம் ஓடும் ஒரு திரைப்படத்தில், இரண்டு நிமிடங்கள் ஓடும் ஓரிரு காட்சியை மட்டும் பார்த்துவிட்டு அந்தப் படத்தைப் பற்றிய தன் கருத்தை ஒருவன் வெளிப்படுத்துவதோ அல்லது திரைப்படத்தை விமர்சிப்பதோ எந்த வகையிலும் சரியான செயலாக இருக்க முடியாது என்பதை உறுதியாகச் சொல்லலாம்…

இப்படிச் சொல்வதோடு மட்டுமல்லாமல், இந்தச் செயலில் இன்னுமொரு மாபெரும் அபத்தமும் நடக்கும்… ஆயிரக்கணக்கான பக்கங்களுள்ள அந்தப் புத்தகத்தைப் படிக்காமல், மூன்று மணி நேரமுள்ள அந்தப் படத்தைப் பார்க்காமல் அவர்களாகவே, புதிதாக அந்தச் சாதனையாளனைப் பற்றி, அந்தப் படத்தைப் பற்றி ஒரு கதையைச் சித்தரித்துச் சொல்வார்கள்… சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்கள் சொல்வதுதான் சரியென்றும் சாதிப்பார்கள்… அப்படிப்பட்ட அபத்தங்களும், ஆபத்துகளும் இன்று சர்வ சாதாரணமாக நடக்கின்றன…

இன்றுள்ள பெரும்பாலான மனிதர்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் இப்படித்தான் நுனிப்புல் மேய்ந்த கதையாகவே இருக்கின்றன… இப்படி ஒப்பிடுவதுகூட சரியா என்பது தெரியவில்லை..? காரணம், மாடுகள் அடுத்த அடுத்த நாள்களிலும் அங்குதான் மேய்ச்சலுக்கு வரவேண்டும்… அதனால்தான், இயற்கையாகவே மாடுகள் அவ்வாறு நுனிப்புல் மேயும்படி அமைந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது… ஆனால், இவர்கள் நுனிப்புல் மேய்ந்துவிட்டு, மறுபடி அதைத் தொடுவார்களா என்பதே தெரியாது..? பிறகு எப்படி..? எதைப் படித்துப் புரிந்துகொள்ளப் போகிறார்கள்..? அதன் காரணமாகத்தான் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் பெரும்பாலும் குப்பைக் கூலங்கலாகவே இருக்கின்றன…

எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளும் எண்ணம் அறவே இல்லாமல், எல்லாவற்றையும் போகிற போக்கில் தெரிந்துகொண்டு – தெரிந்து கொண்டுவிட்டதாய் நினைத்துக்கொண்டு – தாங்கள் நினைப்பவை மட்டுமே சரியான சிந்தனை என்று நம்பிக்கொண்டிருக்கும் அபத்தமான, ஆபத்தான போக்குதான் இன்று பெரும்பாலானவரிடமும் இருக்கிறது… அது எவ்வளவு முட்டாள்தனமான சிந்தனை என்பதைக்கூட சுயமாக சிந்திக்க இயலாமல் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை…

தாங்கள் நினைப்பதுதான் சரி, தாங்கள் சொல்வதே உண்மை என்கிற இப்படிப்பட்ட எண்ணம் எல்லா காலகட்டங்களிலும் நம் சமூகத்தில் சிலரிடம் இருந்து கொண்டிருக்கும் ஒன்றுதான், அதுதான் இயல்பும் கூட… அதனால், முன்பெல்லாம் அதைப்பற்றி அதிகம் கவலைகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்தது… ஆனால், இன்றோ நிலைமை அப்படியல்ல…

முன்பிருந்ததைப்போல ஏதோ ஒருசிலரிடம் மட்டும் இப்படிப்பட்ட அபத்தமான எண்ணம் இல்லை… படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாரபட்சமில்லாமல் பெரும்பாலான மக்களிடமும் இந்த அபத்தமான சிந்தனைதான் இருக்கிறது என்பதை நினைக்கும் பொழுதுதான் கவலை ஏற்படுகிறது… பெரும்பாலானவர்களின் அந்தத் தவறான எண்ணத்தினால் உண்டாகப் போகும் ஆபத்தை, அது எப்படியெல்லாம் இந்தச் சமூகத்தைப் பாதிக்கும் என்பதைப் பற்றிய சிந்தனை துளியும் எவரிடமும் இல்லை…

இப்படிப்பட்ட சுய சிந்தனையற்று, மேம்பட்ட எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளாமல் வாழும் மக்களிடம் மாற்றங்கள் எப்படி உண்டாகும்..? அப்படியே மாற்றங்கள் உண்டானாலும் அவைகள் எப்படி இந்த சமூகத்துக்கு நம்மை அளிக்கும் மாற்றங்களாக இருக்கும்..? இருக்க முடியும்..? நிச்சயமாகச் சொல்லலாம், அந்த மாற்றங்களால் இந்தச் சமூகத்திற்கு எந்த வகையிலும் நன்மை கிடைக்காது…

மக்கள் மீதுள்ள அக்கறையினால், இந்தச் சமூகம் உயர வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒருவன் சிந்தித்து, ஆராய்ந்து அவற்றைச் செயல்படுத்தும் போதுதான் சமூகத்துக்குத் தேவையான மாற்றங்கள் உருவாகும்… அப்படிப்பட்ட மாற்றங்களை உருவாக்கியவர்கள், அனைத்துத் துறைகளிலும் உலகச் சரித்திரத்தில் ஏராளமானவர்கள் உண்டு…

திருவள்ளுவரில் இருந்து மகாகவி பாரதி வரை… ஜென் தத்துவங்களில் இருந்து கே.கிருஷ்ணமூர்த்தி வரை… சாக்ரட்டீஸில் இருந்து கண்ணதாசன் வரை… அயோத்திதாசரில் இருந்து அப்துல் ரகுமான் வரை ஏராளமான சமூகச் சிந்தனையாளர்கள் மனித இனத்தின் முன்னேற்றத்துக்குத் தங்களின் புதிய புதிய சிந்தனைகளை, உயர்ந்த சிந்தனைகளைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்… அவற்றைப் படிப்பதன் மூலம் நாமும் நம்மை மேம்படுத்திக் கொள்கிறோம்… அதைப்போன்று அறிவியல், பொருளாதாரம், கணிதவியல் என அனைத்துத் துறைகளிலும் எண்ணிலடங்கா அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள்… இருக்கிறார்கள்…

அந்த மாமனிதர்களிடம் இருந்து வெளிப்பட்ட புதிய, உயர்ந்த எண்ணங்களை அன்றைய மக்கள் உணர்ந்து கொண்டார்கள்… உள்வாங்கிக் கொண்டார்கள்… எல்லோருமே அங்கீகரித்தார்கள் என்று சொல்லிவிட முடியாவிட்டாலும், மிக அதிகப்படியான மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்… நடைமுறையில் கடைபிடித்தார்கள்… அதன் காரணமாகத்தான், பல்லாயிரம் வருடங்களாக மனிதர்களிடம் இருந்துவந்த, சமூகத்தில் நிலவிவந்த சாதி, மதம், இனம், மொழி, ஏற்றத்தாழ்வுகள் போன்ற ஏராளமான சமூகச் சிக்கல்களினால்கூட பெரிய அளவிலான பாதிப்புகள் உண்டாகிவிடவில்லை… வக்கிரங்களின் உச்சம் கொண்டவனாக மனிதன் வாந்திருக்கவில்லை…  

ஆனால், இன்றுள்ள மிகமிக மோசமான சிக்கல்களில் முக்கியமான ஒன்று எதுவென்றால், மனிதர்களிடம் இருக்கும் வக்கிரம்தான்… வக்கிரம் என்பதில் எத்தனையோ வகைகளுண்டு… நாம் திரைப்படங்களிலும், புத்தகங்களிலும் விதம் விதமான வக்கிரம் கொண்ட மனிதர்களைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம்… மனிதன் தோன்றிய காலம் முதல் வக்கிரங்களுடன் வாழ்வது எப்போதும் இருப்பதுதான்… ஆனால், இன்றைக்கு இருப்பதைப்போல, அன்று அவ்வளவு கொடூரமான மனிதனாக, மற்றவர்களுக்குப் பெரும் துயரங்களைக் கொடுக்கக் கூடிய மனிதனாக இருக்கவில்லை…

தன்னிடம் படிக்கும் தன் மாணவியைத் தன் இச்சைக்குப் பயன்படுத்தி, வன்புணர்ச்சி செய்து, தொடர்ந்து செய்துகொண்டு வாழும் வக்கிரம் கொண்ட ஆசிரியன் அன்றைக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை…

தன் மனைவியை ஒரு மனுஷியாகவோ, தன் மனைவியாகவோ அல்லது தங்கள் குழந்தைகளின் தாயாகவோகூட எண்ணாமல், அவளை ஒரு அடிமையாக, செக்ஸ் எந்திரமாக, அவளின் விருப்பம் பற்றிய அக்கறையின்றி அவளை வக்கிரமாகப் பயன்படுத்தும் எண்ணம் கொண்டவனாக ஒரு கணவன் இன்று வாழ்வதைப்போல அன்றைக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்…

சக மாணவியை ஒரு மாணவன் எவ்விதமான உறுத்தலும் இல்லாமல், குற்ற உணர்ச்சியும் இல்லாமல், அவளை வக்கிரத்துடன் தன் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறான்… அத்துடன், கொஞ்சம்கூட ஈவு, இரக்கம் இல்லாமல் அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடவும் செய்யும் அளவுக்கு வக்கிரம் நிறைந்தவனாக ஒரு மாணவன் இருக்கும் சூழல் இன்று இருக்கிறது… உறுதியாகச் சொல்லலாம் அன்றைக்கு இந்த அளவுக்கு ஒரு மாணவனின் மனநிலை இருந்திருக்க வாய்ப்பே இல்லை…

காதல் என்கிற பெயரில் நடக்கும் காம வெறியாட்டங்களைப் பற்றியெல்லாம் நாம் படிக்கும்போதும், கேட்கும்போதும் இவர்களெல்லாம் மனித ஜென்மங்கள்தானா என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை…

தன்னுடைய மகனை, தன் தகுதிக்கும் மீறி படிக்க வைத்து, அவனை உயர்த்திவிட, மகன் தன்னுடைய படிப்புக்கு ஏற்ற வேலைக்கும் செல்கிறான்… அதன்பின், தன்னுடைய பெற்றோரைப் பற்றி, உடன்பிறப்புகளைப் பற்றித் துளியும் எண்ணாமல், கவலைப்படாமல், தன் வாழ்க்கையை மிகவும் சொகுசாக வாழ்கிறான். வெளிநாடுகளுக்குச் செல்வதும், அறவே தன் பெற்றோரை மறந்துவிட்டு வாழ்வதும் சர்வசாதாரணமான சம்பவங்களாக இன்றைக்கு ஆகியிருக்கிறது… பசி, பட்டினி, நோய் பாதிப்பு என பெற்றோர்களின் வாழ்க்கை மோசமாகிக் கொண்டிருக்க, அவர்களின் பிள்ளைகளோ நகரங்களில் குடியும் கொண்டாட்டங்களுமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்…

பொதுவாகவே நம் சமூகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இப்படி எதைப்பற்றியும் சிந்திக்காமல், தாங்கள் வாழும் வாழ்க்கை தவறானது என்கிற சிந்தனையே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…

பெண்கள் தங்களின் சிந்தனைகளைத் தொலைக்காட்சித் தொடர்களில் செலுத்தி மொத்தமாகச் சிதைந்து கொண்டிருக்கிறார்கள்… இபொழுது, நடுவயதைக் கடந்த பெரும்பாலான ஆண்களும் சீரியல்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் அவலத்தைப் பார்க்க முடிகிறது…

இளைஞர்களின் கைகளில் இருக்கும் மொபைல்கள் அவர்கள் சிந்தனையை ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்தி – மருத்துவமே பார்க்க முடியாத அளவுக்கு முற்றிப்போன புற்றுநோயைப்போல – இளைஞர்களை அழித்து வருகிறது… அதையும் மீறி சிந்திக்க நினைக்கும் இளைஞர்களை, தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள் எல்லை மீறிப்போய் அந்த இளைஞர்களைக் கவர்ந்து கொ(ல்)ள்கின்றன… அவற்றைப் பார்த்து அவர்கள் மகிழ்ந்து கொண்டாடி தங்களின் சிந்தனைகளைச் சிதைத்துக் கொள்கிறார்கள்…

இப்படி, ஆண்கள், பெண்கள், இளம் வயதினர் என அனைத்து மக்களுமே ஒட்டு மொத்தமாகச் சிந்திப்பதையே நிறுத்திவிட்டார்கள் என்பதைப் போல்தான் இன்றைய சூழல் நிலவுகிறது… உண்மையில் இவர்கள் கொஞ்சமேனும் சிந்தித்தார்களேயானால், தங்களின் செயல்களால், இன்றைய குழந்தைகளின் நாளைய எதிர்காலம் பாழாகும் என்பது புரிந்துவிடும்… இப்படி இருந்தால், அவர்கள் எதற்கும் உபயோகம் இல்லாதவர்களாக எதிர்காலத்தில் உருவாகிவிட வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்… ஆனால், இவர்களால் அப்படியெல்லாம் சிந்திக்கவே முடியாமல் போய்விட்டது…

எந்தவிதமான அடிப்படையான சிந்தனையும் இல்லாததால் இவர்களால், தங்கள் குழந்தைகளுக்கோ, இந்தச் சமூகத்துக்கோ எதையும் கற்றுக்கொடுக்க இயலவில்லை… எதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை… இது ஒரு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்பதில்லை… அரசாங்க பணிகளில், தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும்… மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்… சமூக ஆர்வலர்களுக்கும் இது பொருந்தும்… சமூகப் பொறுப்பற்று, நாளை பற்றிச் சிந்திக்க மறுக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்…

எதைப்பற்றியும் கவலைப்படாமல், சிந்திக்க இயலாமல் இருக்கும் இப்படிப்பட்ட மனிதர்கள், சமூகத்துக்குத் தேவையான சிந்தனைகளை எங்கிருந்து பெற்று, எப்படி இந்தச் சமூகத்துக்கு உரிய கருத்துகளைக் கொடுப்பார்கள்..? தங்களின் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்..? எதையுமே கற்றுக் கொள்ளாமல், இவர்கள் எதைக் கற்றுக்கொடுப்பார்கள்..? ஒவொருவருக்கும் தாம் வாழும் சமூகத்தின் மீதான அக்கறை என்பது அவசியமான ஒன்றுதான்… அப்படி இருக்கையில், சமூகம் பற்றிய எந்தவிதமான புரிதலும் இல்லாமல், எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒவ்வொருவரும் எப்படி சமூகத்திற்கான மனிதர்களாக வாழ முடியும்..?

 

ஒவ்வொருவரும் சமூகத்திற்கான மனிதர்களாக வாழ்வதுதான் ஒட்டுமொத்த சமூகத்திற்கான மேம்பாட்டுக்கும் அடிப்படையான ஆதாரமாக இருக்க முடியும்… ஒரு பெண்ணுக்கு பொது இடத்தில் சில கயவர்களால் ஏற்படும் தொல்லைக்கு அங்கிருக்கும் மக்கள் எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்… அது எவ்வளவு ஆபத்தானது… அந்த அயோக்கியர்கள் அந்தப் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைகளுக்குச் சற்றும் குறையாத குற்றத்தை அங்கிருக்கும் மக்களும் செய்கிறார்கள் என்றுதான் அதற்குப் பொருள்…

அதற்கு என்ன காரணம்..? அவர்களிடம் சிந்திக்கும் திறன் இல்லாமல் போனதுதான்… உண்மையில் அங்கிருக்கும் யாருக்கும் அந்தப் பெண் உறவில்லாததால்தானே யாரும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்காமல் அமைதியாகக் கடந்து போகிறார்கள்… ஏன்..? எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத அங்கிருக்கும் ஒரு பெண்ணுக்கு நாளையே அப்படி ஒரு நிகழ்வு நடக்காது என்று சொல்லிவிட முடியுமா..? அங்கிருக்கும் ஒரு ஆணின் மனைவிக்கோ, தங்கைக்கோ, மகளுக்கோ நாளை அப்படி நடந்தால் என்ன செய்வார்கள்..?

எவருடைய எதிர்ப்பும் இல்லாமல் போய்விட்ட நிலையில், கயவர்களுக்குக் கூடுதல் தைரியம் வந்து, அப்படிப்பட்ட குற்றத்தை நிச்சயமாகத் தொடர்ந்து செய்யாமல் இருக்க மாட்டார்கள்… அப்படியென்றால், அந்தக் குற்றங்கள் தொடரும்… அதற்கு, அங்கிருக்கும் அனைவருமே பொறுப்பானவர்கள் அல்லவா..? ஒருவேளை, அங்கிருப்பவர்கள், இதை இப்படியே விட்டால் நாளை நமக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்து, ஒன்றாகத் திரண்டு அந்தக் கயவர்களை அடித்து, போலீஸில் ஒப்படைத்திருந்தால், அதைப்போன்ற சம்பவங்களில் மற்றவர்கள் ஈடுபடத் தயங்குவார்கள்… அப்படியில்லமால், சுய சிந்தனை எதுவும் இல்லாமல், முழுக்க முழுக்க சுயநலத்துடன் அங்கிருந்து கடந்து போகும்போதுதான், மற்றவர்களுக்கும் அப்படிப்பட்ட கயவர்களால் பாதிப்புகள் ஏற்படும்…

 

நமக்கு முன்னால் நடக்கும் ஒரு குற்றத்தை, அநீதியை நாம் எதிர்க்க வேண்டும்… தடுக்க முயலவேண்டும்… இல்லையென்றால், அந்தக் குற்றம் நாளையே நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நடக்கலாம்… குற்றத்தைத் தடுக்க முயல்வதிலுமே கூட ஒருவகையில் நம்முடைய சுயநலம் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, நாம் சிந்தித்துச் செயல்பட்டால் அதுவே போதுமானது… ஆனால், நாம் அதற்குக்கூட தயாராயில்லை…

 

இப்படி, எந்த வகையிலும் பெற்றோர்களாகிய நாம், மூத்தவர்களாகிய நாம், நம் குழந்தைகளுக்கு முன்னால் ஒரு சரியான மனிதர்களாக இருக்க முடியாத நிலையில், நாம் எப்படி அவர்களுக்குத் தேவையான நல்ல பழக்க வழக்கங்களை, சிறந்த கருத்துகளை, உயர்ந்த எண்ணங்களைக் கற்றுக் கொடுக்க முடியும்..? அவர்களுக்கு முன்னால் முன்னுதாரணமான மனிதர்களாக இருக்க முடியாத நாம் எப்படி அவர்களை நல்வழிப் படுத்தமுடியும்..? எப்பொழுதும் நம் கையிலிருக்கும் மொபைலில் எதையாவது பார்த்துக் கொண்டே இருக்கும் நாம் எப்படி அவர்களைப் புத்தகங்களைப் படிக்க வைக்க முடியும்..? தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் ஒரு தந்தையால் தன் மகனைக் குடிக்காதே என்று எப்படிச் சொல்ல முடியும்..?

நிறைய படிப்பதன் மூலமாக மட்டுமே நிறைய சிந்திக்க முடியும்… நிறைய சிந்திப்பதன் மூலமாக மட்டுமே நிறைய கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் முடியும்… அதன் மூலமாகவே மற்றங்களைக் கொண்டுவர முடியும்… அப்படிப்பட்ட மாற்றங்களால் மட்டுமே நம் சமூகத்துக்கு, நம் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்…

புத்தகங்கள் படிப்பது என்பது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் அல்ல… மிகச்சுலபமாக படிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளலாம்… அந்தப் பழக்கத்தினால் நாம் எவ்வளவு பெரிய சிக்கலையும் எளிதாக எதிர்கொள்ள முடியும்… சிறந்த புத்தகங்களைப் படிப்பதும், அதன்பின் சிந்திப்பதும் மட்டுமே மனிதனிடம் உயர்ந்த நம்பிக்கையை உண்டாக்கும்…

அறிவியல் பூர்வமாக, நாம் ஏன் நிறைய பொதுவான புத்தகங்களைப் படிக்கவேண்டும்..? அப்படிப் படிப்பதன் மூலம் நமக்கான நன்மைகள் எப்படிக் கிடைக்கின்றன என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம்…

தொடரும்…