ன்றைய பரபரப்பான உலகத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயமாக தேவைப்படுகிறது.திடீர் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் குடும்பங்கள் ஏராளம்.நகையை அடகு வைப்பதும் அநியாய வட்டிக்கு  கடன் வாங்கி கடனாளியாகி ஆவதும்,மன உளைச்சலுக்கு ஆளாகி,பித்து பிடித்து அலைவதும் யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத மோசமான துயரங்கள்.

கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் தற்கொலை நிலைக்கு தள்ளப்படும் குடும்பங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து,படாத பாடுபட்டு காப்பாற்றிய அனுபவங்கள் உண்டு.

மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மருத்துவச் செலவுக்கான பணத்தைக் கையிலிருந்து செலவு செய்வது நம் நாட்டில் 63 சதவிகிதமாக உள்ளது. இது வளர்ந்த நாடுகளில் 18% மட்டுமே. தவிர, நம் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரில் 57% பேர், சொந்தப் பணத்திலிருந்து மருத்துவச் செலவை செய்கிறார்கள்.

ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் மருத்துவக் காப்பீடு பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதால், எதிர் பாராமல் வரும் மருத்துவச் செலவுகளைக் கஷ்டப்படாமல் சமாளித்துவிடுகிறார்கள்.வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர்தான் காப்பீடு எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறார்கள்;அவதிப்படுகிறார்கள். இதனால் நெருக்கடி காலத்தில் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள். தேவையான சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லாததால், உயிர் இழப்பு என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி, குடும்ப உறுப்பினர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

நம் நாட்டில் பலவிதமான காப்பீட்டுத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்கள், மாநில முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு வழங்கும் காப்பீட்டுத் திட்டங்கள் எனப் பல்வேறு வழிகளில் கணிசமான மக்கள் மருத்துவக் காப்பீட்டின் கவரேஜுக்குள் வருகிறார்கள்,

ஆனாலும் நம் நாட்டிலுள்ள 140 கோடி பேரில் 30% -35%பேர் அதாவது, சுமார் 45 கோடி பேர் எந்தவித இன்சூரன்ஸ் கவரேஜுக்குள்ளும் வராமல் இருக்கிறார்கள்.கொரோனாவால் ஏராளமான உயிர் இழப்புகளை சந்தித்த பிறகு கடந்த சில ஆண்டுகளில் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது வரவேற்கத்தக்கது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை சூழலில் அனைவருமே தங்களுக்கு உதவும் சரியான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

மருத்துவக் காப்பீட்டு வகைகள்

தனிநபர் பாலிசி, பேமிலி ஃப்ளோட்டர் பாலிசி, ஊழியர் மருத்துவக் காப்பீடு, மூத்த குடிமகன் மருத்துவக் காப்பீட்டு பாலிசி, தீவிர நோய்களுக்கான காப்பீடு, டாப் அப் மருத்துவக் காப்பீடுகள், தனிநபர் விபத்து காப்பீடு என பலவகை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றின் மூலம் கிடைக்கும் பலன்கள் தனித்தனியானவை. இவற்றுக்கான நிபந்தனைகள் வேறுபாடு கொண்டவை.நம் தேவைக்கேற்ப சரியான காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

திருமணமாகாதவர் தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.கவரேஜ் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உறுதி செய்யப்பட்ட தொகை க்ளெய்மாக கிடைக்கும். குடும்பமாக இருப்பவர்களுக்கு பேமிலி ஃப்ளோட்டர் பாலிசி சரியாக இருக்கும். பாலிசி காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சிகிச்சைக்கான தொகை யைப் பெற முடியும். குழு அல்லது ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தில் பிரீமியம் சந்தையில் இருக்கும் சராசரியைவிட குறைவாக இருக்கும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூத்த குடிமக்களுக்கான பாலிசி எடுக்கலாம்.இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட பிரீமியம் செலுத்துவதன் மூலம் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியும். இந்த பாலிசி எடுக்கும் முன் மருத்துவப் பரிசோதனை கட்டாயம். புற்றுநோய், இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவற்றுக்கான மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க பிரத்யேக தீவிர நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டம் உதவும். டாப்அப் காப்பீட்டுத் திட்டங்கள் ஏற்கெனவே உள்ள பாலிசியின் மீது கூடுதல் கவரேஜ் பெறுவதற்கான திட்டமாகும். கூடுதலாக பிரீமியம் செலுத்தி கூடுதல் கவரேஜ் பெற்றுக்கொள்ள இந்தத் திட்டம் உதவும். இப்படி ஒவ்வொருவரின் தேவை அடிப்படையில் குறிப்பிட்ட பிரீமியம் செலுத்தி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வதன் மூலம் பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை பணம் செலவாவதைத் தவிர்க்க முடியும். இது ஒவ்வொரு குடும்பத்தின் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் நிதி ஆரோக்கியத்துக்கும் நல்லது.