குழந்தை வளர்ப்பு முறை முழுமையாக மாறிவிட்டது. நம் கலாச்சாரத்திற்கு எதிரான கல்விமுறை, மேலைநாட்டினரை மாதிரியாகக் கொண்ட வளர்ப்பு முறை, அந்நிய பண்பாட்டை ஊட்டி வளர்க்கும் நச்சுத்தன்மை தமிழர்தம் தனிப்பண்பினையே சீர்குலைத்து விட்டது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்கிற பழமொழிகள் மறந்து விட்டன. அவ்வையாரையும், நாலடியாரையும், மறந்துவிட்ட தமிழர்கள், இனி கரையேறுவது கடினம்தான்.

கன்னித்தாய்களும், தாய், தந்தை அறியாத குழந்தைகளும், பேரன் பேத்திகளால்.. ஏன்? தான் பெற்ற மக்களாலேயே புறக்கணிக்கப்பட்ட முதியவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. குழந்தைகள் காப்பகத்தை விட பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இல்லங்கள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளைத் தவறான வழியில் தள்ளிவிடும் போக்கு சமூக வலைதளங்களில் கூட வெளிவருகின்றன.

ஏதும் அறியா அந்தக் குழந்தைகள் எதற்கோ ஆசைப்பட்டு, பெற்றோர்கள் மூலம் பெற முடியாதவற்றை இந்த சமூக அரக்கர்கள் மூலமாக பெறுவதற்கு விலை மதிக்க இயலாத தன் கற்பை பறி கொடுக்கிறது. உறவு கொள்ளும் ஆணை மறைத்து பள்ளிக்கூட யூனிபாரமைக்கூட மறைக்காமல் அப்படியே வீடியோ எடுத்து விற்பனை செய்வதும் அவ்வப்போது வெளியாகும் செய்திகளாலும், யூ டியூப் மற்றும் சில சமூக வலைதளங்களில் வரும் காட்சிகளாலும் தெரிய வருகிறது. சில பெற்றோர்களே இதனை மறைத்து விடுகின்றனர். கருக்கலைப்பு மருந்துகள் அளவுக்கு அதிகமாக விற்பனையாகி வருவதை அரசு கண்காணிக்கிறது என்ற செய்தியைத் தமிழ் இந்து வெளியிட்டிருந்தது.

தமிழ்மறை ‘‘சிறை காக்குங் காப்பு எவன் செய்யும்’’ என்றும் அரிஸ்டாடில் அந்த இளம்பருவத்தை கண்கொத்திப் பாம்பு போல மிக நேர்த்தியாக கண்காணிக்க வேண்டிய பருவம் என்றும் எச்சரிக்கின்றனர். பிள்ளையை பெற்று விட்டால் மட்டும் போதாது, பேணி வளர்க்கவும் தெரிய வேண்டும். நல்ல குழந்தையே நாட்டின் செல்வம், வளமை என்பதை உணர்வோம்.

அன்புடன்
ஜி.ராஜமோகன்