
டாக்டர் ஜி.ராஜமோகன்.
கவலைகள் மன நோயில் நம்மை ஆழ்த்துகின்றன.மன நோயின் பின்புறம் ஒளிந்திருப்பது உடல் நோய் மட்டும் அல்ல நமது மோசமான வாழ்வியல் முறையும் தான். வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லோரும் ஈட்டிய முதல் வெற்றி தங்களை கவலை வலைக்குள் சிக்காமல் தற்காத்துக் கொண்டது தான்.
“கவலையை எதிர்த்துப் போராடத் தெரியாதவர்கள் இளம் வயதிலேயே இறந்து போகிறார்கள்” என்று உணர்த்துகிறது சமீபத்திய உளவியல் ஆய்வுகள். ஒரு பிரச்னை உங்களை அழுத்தும் அளவிற்கு ஹெவியாக இருக்கிறதா?இல்லையா?என்பதைவிட அதனை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதில்தான் அதன் கனம் கூடுவதோ குறைவதோ இருக்கிறது.சாதாரண பிரச்னையை பெரிதாக நினைத்தால் அதுவே வெயிட்டாகி அழுத்தும்.பெரிய பிரச்னையை சாதாரணமாக எடுத்துக் கொண்டால்,அது லேசாகிப் பறந்துவிடும்.
எந்த ஒரு விஷயமும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதற்கு நம்மிடம் ஒன்று அல்லது இரண்டு ஆப்ஷன்கள்தான் இருக்கும்.அந்த மாதிரி நடக்காமல் கொஞ்சம் மாறிவிட்டால் கூட இப்படி ஆகிவிடுமோ அப்படி நடந்துவிடுமோ என்ற கற்பனை பயம் எழும்.இருட்டில் ஏதோ பயங்கரம் இருப்பதாக, சின்னக் குழந்தை கற்பனை செய்து பயப்படுவதைப்போல் அது அச்சமாக மாறி அழுத்தத் தொடங்கும்.
பதினாறு நேர்மறை எண்ணங்களைவிட, ஒரே ஒரு எதிர்மறை எண்ணம் கனமானது என்கிறது வாழ்வியல்.அதாவது ஒரு சின்ன எதிர் மறை எண்ணம்,பதினாறு மடங்கு நேர்மறை எண்ணங்களை பலமிழக்கச் செய்துவிடுகிறது. இதனால்,உங்கள் மனதில் அதுவரை மகிழ்ச்சியாகப் பதிந்திருந்த தருணங்கள் எல்லாம் மாயமாக மறைந்து அந்த இடத்தில் அழுத்தம் இடம்பிடித்துக் கொள்கிறது.
ஒரு வேலையைச் செய்யும்போது, அதிலேயே தீவிரமாக இருப்பதையே பலரும் சரி என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் பொறுப்பு உள்ளவனுக்கு பொழுதுபோக்கிற்கு நேரம் இருக்காது என்ற எண்ணம்தான்.ஆனால், எத்தகைய சூழலிலும் மகிழ்ச்சியாகவும் எத்தகைய கடினமான உழைப்பின்போதும் உற்சாகத்துடனும் இருப்பவனே எந்த வேலையையும் சிறப்பாகவும், சீக்கிரமாகவும் செய்து முடிக்கிறான். மகிழ்ச்சியாக இருப்பவனே பலருக்கும் மகிழ்ச்சியைப் பரப்புகிறான்.அதனால், மற்றவர்களுடைய பணியும் எளிமையாகிறது.
உங்களுக்குத் தெரியுமா? தீர்க்கமான சிந்தனைகள் கொண்ட ஆர்கிமிடிஸ்,நியூட்டன் போன்ற பெரிய ஞானிகளும், விஞ்ஞானிகளும் ரிலாக்ஸாக இருந்த நேரத்தில் தான் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தார்கள். பாரத்தில் அழுந்தாமல் லேசாக இருப்பதால், மகிழ்ச்சியாக இருப்பவனின் அறிவும் மனதும் மிகக் கூர்மையாக சிந்திக்கும்.
எல்லா பிரச்னைகளுக்குமே நிச்சயம் தீர்வு உண்டு.நெருங்கித் தொட்டால் உடைந்துவிடக் கூடிய நீர்க்குமிழிபோல கொஞ்சம் சிந்தித்தாலே உடைந்து விடக் கூடியவைதான்.ஒருசில பிரச்னைகள் உண்மையிலேயே கனமானதாக இருந்தாலும் கூட, உங்கள் மனநிலை அதனை லேசாக எடுத்துக் கொண்டால்,மனதில் இருந்து அழுத்தம் வெளியேறும்.மகிழ்ச்சி நிரந்தரமாய்க் குடியேறும். உடலும் உள்ளமும் நலம் பெற வாழ்த்துகள்!
டாக்டர் ஜி.ராஜமோகன்.

