சிறந்த உடல் நலம் என்பது ஆரோக்கியமான உடலை பெற்றிருப்பது மட்டுமல்ல… ஆரோக்கியமான மனமும் இருக்க வேண்டும்.ஆரோக்கியமான மனத்தை பெற்று இருப்பவர் தெளிவாக சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை தீர்த்துக் கொள்பவராகவும், நண்பர்கள்,உடன் பணி புரிபவர்கள்,குடும்பத்தினர் ஆகியோரோடு நல்லுறவு பேணுபவராகவும், ஆத்ம திருப்தி உடையவராகவும் இருப்பார்.மனம் சார்ந்த இந்த தன்மைகளையே மனநலம் என்றும் கூறலாம்.

ஆரோக்கியம் என்பது உடல் நலத்தையும் மனநலத்தையும் உள்ளடக்கியது.
இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை.

உடல் நலம் இல்லாமல் போவதற்கு மனம் காரணமாக இருக்கலாம்.
மனநலம் பாதிக்கப்படுவதற்கு உடலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மனம் என்பது ஓர் அற்புதமான கருவி.அது சரியாக இயங்கினால் அதைப் போன்ற ஒரு அதிசயமானதும், உபயோகமானதும் வேறெதுவும் இல்லை.

மன நலக் குறைபாடுகள் ஆண்-பெண்,பணக்காரர்-ஏழை, கிராமவாசி -நகரவாசி, குழந்தைகள்-பெரியவர்கள் என்று எந்த விதப்பாகுபாடுமே இல்லாமல்,எல்லா தரப்பு மனிதர்களையும் பாதிக்கக்கூடியவை. ஆனால்,பிரச்னை என்னவெனில் இவற்றைப் பற்றி மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை.

நமது சமூகத்தில் உடல் நலத்திற்கு தரும் முக்கியத்துவம் மனநலனுக்கு தருவதில்லை.
அதனால் மனநலம் பற்றிய விழிப்புணர்வு பரவலாக தேவைப்படுகிறது.

மனநல சிகிச்சை எடுத்துக் கொள்வதில் தயக்கம் உள்ளது.நான் என்ன பைத்தியமா? என்று கேட்கிறார்கள்.

அக்டோபர் 10ம் தேதி உலக மனநல தினமாக(world Mental Health Day) கொண்டாடப்படுகிறது.

நான் கடந்த 50 ஆண்டுகாலமாக மனநலம் பற்றிய விழிப்புணர்வுப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.
தினமணி நாளிதழில் ஏராளமான கட்டுரைகளை எழுதி உள்ளேன்.ஹெல்த் அண்ட் பியூட்டி இதழில் மனநலம் தொடர்பான படைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம்.

நவீன எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செய்தால் கூட மனம் எங்கே இருக்கிறது?என்று கண்டுபிடிக்க முடியாது.மனநலத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
எல்லோரும் மகிழ்ச்சியாக,
நலமுடன் வாழ வேண்டும்.

என்றும் அன்புடன்…
டாக்டர் ஜி.ராஜமோகன்.