– முனைவர் மா.ஆ.தீபா.M.Sc. M.Phil.,Ph.D.

உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்.

நாம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தும் மூலிகைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிந்து வருகிறோம். இந்த மாதம் நாம் அறிந்து கொள்ளவிருக்கும் மூலிகை வால்மிளகு.இது ஜாவா பெப்பர் என்னும் பெயரால் அறியப்படுகிறது. “பைபர் கியூபேபா” (Piper cubeba) என்னும் தாவரவியல் பெயரைக் கொண்டது.மிளகு, தாவர குடும்பத்தில் மிக முக்கியமான தனித்தன்மை வாய்ந்த மூலிகை ஆகும்.ஒவ்வொரு மிளகிலும் வால் போன்ற ஒரு சிறிய காம்புப் பகுதி ஒட்டி இருப்பதன் காரணமாக வால்மிளகு என்ற பெயரைப் பெற்றது.

இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளை தாயகமாக கொண்டது. முக்கியமாக இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் தோன்றியதாலேயே இதற்கு ஜாவா “கியூபெப்” என்ற பெயரும் வந்தது. “கியூபெப்”என்ற சொல் அரபு வார்த்தையான “கபாபாவில்”இருந்து வந்ததாக அறியப்படுகிறது. இதன் அர்த்தம் “இறைச்சிப் பந்து” என்பதாகும்.காய்ந்த வால் மிளகின் கனிகளின் மேல் தோல் சுருக்கம் பெற்று… பார்ப்பதற்கு “இறைச்சிப்பந்து” போல தோன்றுவதால், காபாபா என்ற அரபு மொழி வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிற்காலத்தில் இவ்வார்த்தை கியூப் அல்லது க்யூபெப் என மறுவியுள்ளது. அரேபிய வியாபாரிகளின் மூலம் இந்தோனேசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

கண்கோலா மற்றும் சீரகண்கோலா என்ற இரண்டு வகை உள்ளது.கண்கோலா ஒரு கொடி வகையைச் சார்ந்தது. இருப்பினும் இதன் தண்டு மரத்தைப் போன்று தடிமனாக இருக்கும்.இதய வடிவில் 5-6 இன்ச் நீளம் வரை கரும்பச்சை நிறத்தில் இருக்கும் இலைகளை கொண்டுள்ளது. இதன் காய்கள் பழுப்பதற்கு முன்பு பறிக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது. உலர்த்தப்படும்போது சாம்பல் கலந்த பழுப்பு நிறம் அல்லது லேசான கரு நிறத்தை பெறுகிறது. மிகக் கடினமான எண்ணெய் சத்து நிறைந்த வெள்ளை நிற விதைகளை கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

பார்ப்பதற்கு மிளகு போன்று தோன்றினாலும் சிறிய வால்பகுதியுடன் கூடியதாக,அன்றாடம் சமைக்கும் உணவிற்கு நல்ல நறுமணத்தையும் சுவையையும் கொடுப்பதாக உள்ளது.பட்டை, கிராம்பு,ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் உடன் சேர்த்து பயன்படுத்தப்படும் போது தனிச் சுவையை தருகிறது. அதிக அளவில் பிரியாணி,இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகளில் சுவையைக் கூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த மிளகு தனித்தன்மை வாய்ந்த மண்வாசனை, இனிப்பின் சுவை நெடி மற்றும் லேசான காரமும்,கசப்புத் தன்மையும் கொண்டது. குறுமிளகை போலவே வால்மிளகிலும் எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளது. இதில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்ப் பொருள்
கியூபேபியின் மற்றும் கேரியோஃபிலின். இரண்டுமே இதன் காரத்தன்மைக்கு மற்றும் மருத்துவத் தன்மைக்கும் காரணமாக அமைகிறது.இந்த எண்ணெய்க்கு நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது என்பது அறிவியல் ரீதியாக அறியப்படுகிறது. இதன் கசப்பு மற்றும் துவர்ப்புத் தன்மை காரணமாக கண்பார்வை கூர்மையாக்கவும், நாவில் சுவைத்தன்மை மேம்படவும் வாத, பித்த மற்றும் கப தோஷங்களுக்கும் தலைப்பகுதியில் ஏற்படும் வலிகளுக்கும் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

பழுக்காத பச்சை வால்மிளகு காய்களில் ஆவியாகும் தன்மை கொண்ட எண்ணெய் (10-20%) உள்ளது. இதில் செஸ்கிடெர்பீன் ஹைட்ரோகார்பன்கள் உள்ளன; லிக்னான்கள், முக்கியமாக கியூபிபைன் (சுமார் 2%) கியூபெபினின் மற்றும் கினோகினின், கியூபெபிக் அமிலம், ஆக்ஸிஜனேற்றப்பட்ட சைக்ளோஹெக்சேன்கள்,பைபெரெனால் ஏ மற்றும் பி, குரோட்டெபாக்சைடு மற்றும் ஜெய்லெனால் போன்ற மருத்துவ தன்மை கொண்ட பொருட்கள் உள்ளன.

இப்பழங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய் சற்று பச்சை நிறத்தைக் கொண்டிருக்கும். இதன் சுவை சற்றே வெதுவெதுப்பான மற்றும் கற்பூரத்தின் நெடியை கொண்டிருக்கும்.6.4 முதல்8.5% பசை போன்ற பொருட்களையும் நிறமிகளையும், எண்ணெய் பொருட்களையும், மாவுச் சத்தையும், நைட்ரஜன் கொண்ட பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த வால்மிளகைப் பற்றிய மருத்துவ குறிப்பு ஆயுர்வேதிக் பார்மக்கோபியாவிலும் உள்ளது. அக்குறிப்பின்படி இருமல்,வீக்கம், அஜீரணம் போன்ற குடல் உபாதைகளுக்கு பயன்படுத்தலாம் என அறியப்படுகிறது.

அஜீரண பிரச்சனைகளுக்கும், சிறுநீர் சார்ந்த உபாதைகளுக்கும், வயிறு உப்பியவாறு இருக்கும் மந்த தன்மைக்கும் சுவாசக் கோளாறுகளுக்கும் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.வலியுடன் கூடிய மாதவிலக்கின்போது வால்மிளகின் பொடியை தேனுடன் கலந்து 30-40 மில்லி பருகலாம்.இவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும்போது வலியை போக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.ஆயுர்வேத மருத்துவ முறைகளில் ஆண்களுக்கு விறைப்பு செயலிழப்புக்கு சிகிச்சையளிக்க, சர்க்கரை மற்றும் பாலுடன் கலந்த தூள் பரிந்துரைக்கப்படுகிறது.

வால்மிளகை விழுதாக அரைத்து நீருடன் கலந்து வாய் கொப்பளிக்கும் போது பல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.காய்ச்சல், இருமல் மற்றும் சளி தொல்லைக்கு வெகு காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

நன்கு அரைக்கப்பட்ட பழங்களின் விழுதை வீக்கம் மற்றும் வலிக்கும் இடங்களில் நேரடியாக தடவலாம். வால்மிளகின் பொடியை தேனுடன் கலந்து வாய் புண்களுக்கும் மருந்தாக இடலாம். தொடர் இருமல் மற்றும் சைனசைட்டிஸ் இருப்பவர்கள் வால்மிளகின் பொடியை தேனில் கலந்து ஒரு நாளைக்கு நான்கிலிருந்து 5 கிராம் வரை மூன்று தவணைகளாக உள் மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். அஜீரணக் கோளாறுகளுக்கும் பசியை தூண்டுவதற்கும் 3-5 சொட்டு வால்மிளகு எண்ணையை வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்தலாம்.

ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று கிராம் பொடியாகவும் அல்லது ஒன்று முதல் மூன்று துளி எண்ணெயாக மட்டுமே பயன்படுத்தலாம். மிக அதிகப்படியான மருத்துவ உட்பொருட்களை கொண்டுள்ளதால் சில சமயங்களில் தலைவலி,வாந்தி அல்லது வயிற்றில் எரிச்சல் ஏற்படும் என்பதால் எடுத்துக் கொள்ளும் அளவில் கவனம் முக்கியம். மேலும் வயிற்றில் எரிச்சல்,புண் அல்லது உயர் அமில தன்மை கொண்டவர்கள் மருத்துவரின் கண்காணிப்பிலேயே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.இது தவிர மிளகு அலர்ஜி உள்ளவர்கள் வால் மிளகை அறவே தவிர்க்க வேண்டும்.

இவ்வாறாக பல விதங்களிலும் நமக்கு நன்மை பயக்கும் மருத்துவ குணம் கொண்ட வால்மிளகை உணவாக அல்லது மருந்தாக பயன்படுத்தி நாமும் ஆரோக்கியமாக வாழ்வோமாக.