
-டாக்டர் ஜி.ராஜமோகன்.
இன்றைய தேதியில் மருத்துவ சிகிச்சை செலவுகள்,மருந்து, மாத்திரை செலவுகள், மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், அறுவைசிகிச்சை கட்டணம் ஆகியவை மிகவும் அதிகமாக இருப்பதால், அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது. திடீர் விபத்து,தீவிர உடல் நலக்குறைவு போன்றவற்றால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் லட்சக்கணக்கான மருத்துவச் செலவை சமாளிக்க உதவும், நிதி பாதுகாப்புதான் (Financial Protection) மருத்துவக் காப்பீடு.
விபத்து,மாரடைப்பு போன்றவற்றால் திடீர் மருத்துவச் செலவு ஏற்பட்டால், மாதச் சம்பளம் வாங்கும் பலரால் உடனடியாகப் பெருந்தொகையைத் திரட்ட இயலாது. உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்குபவர்கள், சொத்து,நகைகளை அடமானம் வைத்து நிலைமையை சமாளிப்பவர்களும் சேமிப்பு பணத்தை
மருத்துவ செலவுக்குப் பயன்படுத்துபவர்களுக்கு மீண்டு வர பல ஆண்டுகள் ஆகின்றன.மருத்துவ காப்பீட்டை குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரிலும் கட்டாயம் எடுக்க வேண்டும்.
ரொக்கமில்லா சிகிச்சை வசதி!
மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் பல்வேறு மருத்துவமனைகளுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன. இதனால், அவர்களின் பாலிசிதாரர்கள் அந்த மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சை (Cashless Treatment) எடுத்துக்கொள்ள முடியும்.காப்பீடு நிறுவனத்தின் நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேரும்போது பணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை. காப்பீடு நிறுவனத்தின் மூன்றாம் தரப்பு நிர்வாகிக்கு (TPA) தகவல் தெரிவித்து அவர்களின் அனுமதியுடன் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற முடியும்.
எனவே, காப்பீடு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ மனைகளின் நெட்வொர்க்கை பார்க்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் இருந்தால் நல்லது. மேலும்,உங்கள் வீட்டின் அருகில் அது போன்ற நெட்வொர்க் மருத்துவமனைகள் இருக்கின்றனவா என்பதை கவனித்து எடுப்பது நல்லது.கையிலிருந்து செலவு செய்து விட்டு பின்னர் இழப்பீடு தொகை பெறுவது ரீஇம்பேர்ஸ்மென்ட் முறை ஆகும்.
காப்பீடு எடுக்கும்போது வீணான செலவாக தோன்றலாம்.எதிர்பாராத மருத்துவ செலவுகளை எளிதாக எதிர்கொள்ள காப்பீடு அவசியம்.
-டாக்டர் ஜி.ராஜமோகன்.

