
*நமக்கு நல்ல தூக்கம் வேணும் என்ற எண்ணத்தை மனதில் தீவிரமான ஒரு உறுதியாக எடுத்துக்கொண்டால், நல்ல தூக்கம் நிச்சயம்!
*சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே எழுந்துவிடும் பழக்கம் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.ஒரு வாரம் இந்தப் பயிற்சியைக் கடைப்பிடித்தால் போதும்.பின்னர் அதுவே வழக்கமாகிவிடும்.
*தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துக்கொண்டால், நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
*காபி,டீ போன்ற பானங்கள் விழிப்பு நிலையைத் தூண்டி, தூக்கத்தைத் துரத்தியடிக்கும். எனவே,மாலை 4 மணிக்குப் பிறகு இதுபோன்ற பானங்களை அருந்த வேண்டாம்.
*மது குடித்த உடனே தூங்கச் செல்வோருக்கு அரைத் தூக்கமும், அதிகாலைத் தலைவலியும் நிச்சயம்!
*சாக்லெட் மற்றும் குளிர்பானங்களில் விழிப்பைத் தூண்டுகிற காஃபின் இருக்கிறது.எனவே, தூங்குவதற்கு முன்பு இவற்றைச் சாப்பிட வேண்டாம்.
*இரவில் தூங்குவதற்கு முன்பாக தண்ணீர் அருந்தினால், நள்ளிரவில் அடிக்கடி டாய்லெட் போக வேண்டிய உந்துதல் ஏற்படும்.இதனால், ஆழ்ந்த தூக்கம் தடைப்படும்.எனவே, தூங்கச் செல்லும் முன் டாய்லெட் சென்றுவிட வேண்டும். இன்சோம்னியா பிரச்னை இருப்பவர்கள் தூங்குவதற்கு முன்பு அதிகமாகத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
*தூக்கத்தில் பிரச்னை உள்ளவர்கள்,பகலில் குட்டித் தூக்கம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
*காலை அல்லது மாலை நேரங்களில் தினமும் உடற்பயிற்சி செய்வது,இரவில் நிம்மதியாகத் தூங்க உதவி புரியும்.இசை, தியானம், புத்தகங்கள் படித்தல்,ஓவியம் வரைதல்… என்று மனதை ரிலாக்ஸ் செய்யும் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டால் இரவில் அநாவசியமான சிந்தனை ஓட்டங்கள் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும்.
*இரவு வேளைகளில், டி.வி.,கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்ற சாதனங்களில் இருந்து வெளிவரும் பிரகாசமான வெளிச்சம் தூக்கத்தைத் தடை செய்யும். விளக்குகளை அணைத்துவிட்டு கம்ப்யூட்டரில் வேலை செய்வது கண்களுக்கும் தூக்கத்துக்கும் பாதகமான விஷயம்.
*ஸ்பெயின் நாட்டில் உள்ள பெரும்பாலான அலுவலகங்களில் தங்களது ஊழியர்கள் குட்டித் தூக்கம் தூங்கி எழுவதற்குத் தேவையான தனியறை வசதியையே செய்து கொடுத்து இருக்கிறார்கள். காரணம்,இப்படித் தூங்கி எழுந்தவர்கள் இரட்டிப்புப் புத்துணர்வுடன் அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பதால், உற்பத்தியும் இரண்டு மடங்கு அதிகரிக்கிறதாம். எனவே,மதிய சாப்பாட்டுக்குப் பின்னர் தூக்கம் வருகிறது என்று குறைப்பட்டுக்கொள்ளாதீர்கள். தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்.

