
நான் 12ம் வகுப்பு படிக்கிறேன்.எனக்கு பீரியட்ஸ் வரும்போது வீட்டில் தனியாக படுக்க வேண்டும்;சாமி அறைக்கு அருகில் போகக்கூடாது, யாரையும் தொடக்கூடாது… இன்னும் ஏகப்பட்ட சட்ட திட்டங்கள்.எல்லாம் எனது அம்மா உத்தரவு.மாதவிலக்கின் போது வரும் ரத்தம் அசுத்தமானதா…ஆபத்தானதா?
– பெயர் வெளியிட வேண்டாம்… தஞ்சாவூர் வாசகி
பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தம் அசுத்தமானது என்பது தவறான நம்பிக்கை.நம் உடலின் பல்வேறு பாகங்களுக்குச் செல்லும் ரத்தம் எப்படி சுத்தமானதோ, அதே அளவுக்கு பீரியட்ஸ் ரத்தமும் சுத்த மானதுதான். பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறமும் வேறுபடலாம். உதாரணத்துக்கு, ஆரம்பத்தில் அது பளீர் சிவப்பு நிறத்தில் இருக்கும். பீரியட்ஸ் அப்போதுதான் ஆரம்பித்திருப்பதன் அடையாளம் அது.
ரத்தத்தின் நிறமானது அடர்சிவப்பு அல்லது பிரவுன் நிறத்துக்கு மாறலாம்.அது அந்த ரத்தம் ஆக்ஸிடைஸ் ஆவதன் அடையாளம். பொதுவாக பீரியட்ஸ் ரத்தமானது கட்டியாகாது. ஒருவேளை அப்படி கட்டிகளாக வெளியேறினால் அளவுக்கதிகமான ப்ளீடிங் இருப்பதாக அர்த்தம் கொள்ளலாம். பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தில் ரத்தம்,
கர்ப்பப்பை சுவரின் உதிர்ந்த திசுக்கள், கர்ப்பப்பையின் சவ்வுப்படலம், ரத்தத்தை உறையச் செய்யும் பொருள்கள் (Coagulating agents) ஆகியவை இருக்குமே தவிர, நச்சுகள் இருக்காது. உடலுக்குள் ஓடுகிற ரத்தத்தில் ரத்த செல்கள் அதிகம் இருக்கும்.எனவே, மாதவிலக்கு என்பதை அசுத்தமானது என்ற எண்ணமே தேவையற்றது.
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் எதிர்கொள்கிற இயல்பான நிகழ்வுதான் அது. அது குறித்துப் பேசவும் தயங்க வேண்டாம்.உங்கள் அம்மாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.இந்த நம்பிக்கை காலம் காலமாக இருக்கிறது… அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வளர்க்க மாறும்.

