
டாக்டர்.ஆர்.பி.சண்முகம் பேட்டி .
தரமான,குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவையை வழங்குவதில் 50 ஆண்டுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் டாக்டர்.ஆர்.பி.சண்முகம்.சென்னை கொரட்டூரில் ஆர்.பி.எஸ் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
1987ல் வயிறு, குடல், செரிமான உறுப்புகள், அறுவை சிகிச்சை நிபுணராக பட்டம் பெற்றார். தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வந்து சண்முகம் டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்.
அவர்களிடம், “நீங்கள் ஏன் சென்னைக்கு வர வேண்டும்?உங்கள் ஊரில் மருத்துவர்கள் இல்லையா?” என்று கேட்டால்,”எங்கள் ஊரில் இருக்கிறார்கள்.ஆனால் டாக்டர் சண்முகம் மாதிரி சிறப்பாக சிகிச்சை அளிக்க யாருமில்லை. அதனால்தான் 500,600 கிலோமீட்டர் பயணம் செய்து அவரைப் பார்க்க வருகிறோம்” என்கிறார்கள்.
வயிறு,குடல் சிகிச்சையில் முன்னோடியாக இருக்கும் டாக்டரிடம் மூல நோய் குறித்து பேசினோம்.அவரது பேட்டியில் இருந்து…
* மூல நோய் பாதிப்பின் அறிகுறிகள் என்ன டாக்டர்?
நான்கு கால்களில் நடந்த குரங்கு,நிமிர்ந்து மனிதனாக மாறி இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கியதில் இருந்து மனிதனுக்கு மூல நோய் வரத் தொடங்கி விட்டது.
உடலில் இருந்து எந்த சிரமமும் இல்லாமல் மலம் வெளியேறுவது தான் ஆரோக்கியத்தின் அறிகுறி.கீழ் மலக்குடலில் (Rectum) ஏற்படும் மாறுபாடுகளால் உண்டாகும் ஒரு நோய்தான் மூலநோய்.ஆசனவாயில் வெடிப்பு,விரிசல்,வலி,எரிச்சல், அரிப்பு ,ரத்தக் கசிவு, சீழ் கட்டி போன்ற அறிகுறிகள் இருந்தால் மூல நோய் பாதிப்பா என்று பரிசோதிக்க வேண்டும்.
* எதனால் ஏற்படுகிறது டாக்டர்?
மலக்குடலில் ஏற்படும் அழுத்தம் காரணமாக மூல நோய் ஏற்படுகிறது.மலம் போகும்போது வலி வரலாம்.கட்டி போன்று வெளிவருவது இருந்தால் மூல நோயா என்று பரிசோதிக்க வேண்டும்.
* எப்படி ஏற்படுகிறது டாக்டர்?
மலம் சரியாக வெளியேறாமல் தேங்கும்.மலச்சிக்கல் அடிக்கடி ஏற்படலாம்.அடிக்கடி முக்கிப் போவதால் அங்கு உள்ள சிரைகளில்(veins) ரத்தம் தங்கி கொஞ்சம் கொஞ்சமாக கட்டி ஏற்படுகிறது.
மலம் இருகி மேலும் மேலும் மலச்சிக்கல் உருவாகும்.போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நிலமை இன்னும் மோசமாகும்.நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் பிஸ்ஸா,பர்கர் சாப்பிடுவார்கள்.மைதா மாவு கலந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவதும் ஆபத்தாகும்.
தற்போது ஐ.டி.யில் பணியாற்றுபவர்கள் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் பணியாற்றுவதும் மூல நோய் உருவாக முக்கிய காரணம்.சிலருக்கு மலச்சிக்கல் என்பது பழக்கமாகவே மாறிவிடுகிறது.மனச்சிக்கல் அதிகம் இருந்தாலும் மலச்சிக்கல் தானாகவே வந்து சேரும்.
* யாரை அதிகம் பாதிக்கிறது டாக்டர்?
இந்த நோய்க்கு ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லை.முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும்.இப்போது இளைஞர்களுக்கும் வர தொடங்கிவிட்டது.
சமீபகாலமாக ஐ.டி.யில் வேலை செய்கிறவர்களை அதிகம் பாதிக்கிறது. அவர்கள் மூன்று ஷிப்டுகளில் மாறி மாறி வேலை செய்கிறார்கள்.வேலைப்பளுவும் மன அழுத்தமும் அதிகமாக இருக்கிறது. காய்கறி பழங்களை போதிய அளவுக்கு எடுத்துக்கொள்வது இல்லை, சரியான தூக்கம் இருப்பது இல்லை.
உடற்பயிற்சியும் இருக்காது. ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூலநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.
* எப்போது சிகிச்சை அவசியம் டாக்டர்?
மூலநோய் மிகப்பெரிய வியாதி இல்லை. ஆபத்தானதும் இல்லை.மலச்சிக்கலால் ஏற்படுகிறது.மூல நோயை நான்கு நிலைகளாக வகைப்படுத்தி சொல்வது உண்டு.
முதல் நிலை.
மலம் கழிக்கும் போது சொட்டு சொட்டாக ரத்தம் வரலாம்.மூல நோய் ஆரம்பமாக இருக்கலாம்.
இரண்டாவது நிலை.
மலம் கழிக்கும் போது சதை போன்று வெளியில் வரும்.மலம் கழித்தவுடன் தானாக உள்ளே சென்று விடும்.
மூன்றாவது நிலை.
சதை வெளியில் வரும். விரலால் தள்ளி விட்டால் உள்ளே சென்று விடும்.
நான்காவது நிலை.
கை வைத்து தள்ளினாலும் உள்ளே போகாமல் வெளியிலேயே நின்று விடும்.
முதல் இரண்டு நிலையில் இருப்பவர்களுக்கு நல்ல நார்ச்சத்து உள்ள காய்கறி பழங்கள்,பருப்பு வகைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால்,போதுமான தண்ணீரை குடித்து வந்தால்… நோய் கட்டுப்படும் .படிப்படியாக சரியாகிவிடும்.
மூன்றாவது நான்காவது நிலைகளில் மூல நோய்க்கு முறையான சிகிச்சை தேவை.
சிலருக்கு ஊசி போட்டால், மூலம் சுருங்கி சரி ஆகிவிடும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
* லேசர் சிகிச்சை நல்லதா? சாதாரணமாக எவ்வளவு செலவாகும் டாக்டர்?
சாதாரண அறுவை சிகிச்சை செய்யலாம்.லேசர் சிகிச்சை அல்லது ஸ்டாப்ளர் முறையில் சிகிச்சை அளிப்பதும் நடைமுறையில் உள்ளது.தற்போதைய நிலையில் அறுவை சிகிச்சை செய்ய, தனியார் மருத்துவமனையில் தோராயமாக ரூபாய் 40,000 முதல் 50,000 வரை தேவைப்படும்.லேசர் சிகிச்சை செய்யும் போது சில இடங்களில் ஒரு லட்ச ரூபாய் ஆகலாம்.
* என்ன செலவு செய்தாலும் மீண்டும் மீண்டும் மூலநோய் வருவதாக பலரும் சொல்கிறார்களே?
மூலநோய் எதனால் வந்ததோ அதற்கான காரணங்களை அறிந்து கொண்டு,அதற்கு ஏற்றார் போல் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். நான் எப்போதும் போல் தான் இருப்பேன்…எதையும் என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்று சொன்னால் எத்தனை லட்சம் செலவு செய்தாலும் மறுபடியும் மூலநோய் வரும்.
மறுபடியும் மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.அவர்களை அவர்களே காப்பாற்றினால் தான் உண்டு.
* மூலநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் தாமதிக்காமல் கழிவறைக்கு செல்ல வேண்டும் .சிலர் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்கள். செல்போனில் பேசுவது ,வியாபாரம் செய்வது என்று மணிக் கணக்கில் கழிவறைக்கு செல்லாமல் தள்ளிப் போட்டால் கண்டிப்பாக மூல நோய் வரும்.
மூலநோய் வராமல் இருக்க வேண்டுமென்றால் உணவில் சோற்றை குறைக்க வேண்டும்.காய்கறிகளை இரண்டு மூன்று பங்கு அதிகப்படுத்த வேண்டும். ஸ்வீட் ,மிக்ஸர் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக ஆப்பிள்,கொய்யாப்பழம், ஆரஞ்சு,பப்பாளி பழம் போன்ற பழங்களை தொடர்ந்து தினசரி சாப்பிட்டு வர வேண்டும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் உட்கார்ந்து வேலை செய்யக்கூடாது. அவ்வப்போது நடக்க வேண்டும்.
பல் துலக்குவது மாதிரி தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். மனதில் கவலைகள் இருக்கக் கூடாது. மகிழ்ச்சியான வாழ்க்கை முறை இருக்க வேண்டும்.
* மூல நோயை வெளியில் சொல்ல தயக்கம் இருக்கிறதா டாக்டர்?
மூலநோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் சுலபமாக,எந்தவித சிரமமும் இல்லாமல் நலம் பெறலாம் .ஆனால் பலரும் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை நாடுவதில்லை. இந்த நோய் பாதிப்பு என்பது அசிங்கமோ அருவருப்போ இல்லை. பரவலாக எல்லோருக்குமே வரக்கூடியது தான். தயங்க வேண்டியது இல்லை.தாமதிக்கவும் கூடாது.
மூலநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர்,பெண் மருத்துவர் கிடைப்பாரா என்றும் ஏங்கி தவிக்கிறார்கள்.50,000, ஒரு லட்சம் பிரசவம் பார்த்த புகழ்பெற்ற மருத்துவர்கள் ஆண்கள்தான். மருத்துவர்களுக்கு ஆண் ,பெண் என்ற பாரபட்சம் இல்லை .பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து நலம் பெற உதவுவதே எங்கள் நோக்கம் என்றார் டாக்டர் ஆர்.பி.சண்முகம்.
தகவல் தொடர்புக்கு: 7338817817
சந்திப்பு : குணா.

