ள்ளி,கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு.குழந்தைகளை புதுப்புது கோர்ஸ்களில் சேர்த்து சிரமப்படுத்த வேண்டாம்.உற்றார், உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்புங்கள்.மனித வாழ்வியலை கற்றுக் கொள்ளட்டும்.ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வெற்றி பெற்றவர்களாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். குழந்தைகளுக்குச் சொல்லக்கூடிய அறிவுரைகள், போதனைகள், கட்டுப்பாடுகள் என அனைத்துமே இதையே நோக்கமாகக் கொண்டி ருக்கும்.பெற்றோர்கள் அதற்காகச் சில விஷயங்களில் தங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.குழந்தைகள் மீது தங்கள் விருப்பங்களை திணிக்கக்கூடாது.

பெற்றோர்களே இல்லாத குழந்தைகள்கூட வாழ்க்கையில் வெற்றி பெற்ற குழந்தைகளாக மாறியிருக்கின்றன.அதனால் குழந்தைகளின் வெற்றிக்கு பெற்றோர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.ஆனால், ஒரு குழந்தை தோற்றுப்போவதற்கு ஏதோ ஒரு வகையில் பெற்றோர்களின் மாற்றிக்கொள்ளாத பிடிவாதமான அணுகுமுறைகள் காரணமாக இருக்கலாம்.

அவர்களின் வேலையை அவர்களே செய்யட்டும்!

ஜூலி ஹைன்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர்.குழந்தைகள் உளவியல் தொடர்பாகவும், குழந்தை வளர்ப்பு தொடர்பாகவும் பல ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்.

அவர்,தான் பார்த்த,வெற்றிபெற்ற குழந்தைகளிடம் இருந்த மிக முக்கியமான குணம் என ‘குழந்தைகளின் அன்றாட வேலைகளை அவர்களே செய்து கொள்வதுதான்’ என்கிறார். அவர்களுடைய அன்றாட சாதாரண வேலைகளைக் கூட அவர்களுக்கு பதிலாக பெற்றோர் செய்துகொண்டிருந்தால் அவர்களுக்கு எப்படித் தன்னம்பிக்கையும், தைரியமும் வரும்? எனக் கேட்கிறார்.

தங்களது வேலைகளைக் குழந்தைகளே செய்யத் தொடங்கும் போதுதான் அவர்கள் அதில் உள்ள சிக்கல்களை, கால அளவுகளை, நேர்த்தியைக் கற்றுகொள்கிறார்கள். அதுவும் அன்றாட வேலைகள் போன்ற சுலபமான வேலைகளில் இருந்து நேர்த்தியையும், ஒழுங்கையும், நேர மேலாண்மையையும் மிக எளிதாகக் குழந்தைகளால் கற்றுக் கொள்ள முடியும்.அது மட்டும் இல்லாமல் அப்போது மற்றவர்களின் உதவியை,தேவையை, கஷ்டங்களை அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள்.அது அவர்களைப் பக்குவப்பட்டவர்களாக மாற்றும்.தங்களது இயல்புகள், குறைகள், போதாமைகள், விருப்பங்கள் என குழந்தைகள் தங்களைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கும் இந்த அன்றாட வேலைகளைச் செய்வது உதவியாக இருக்கும்.

” திட்டமிடக்கூடியவர்களாக, சக மனிதர்களை சிறப்பாக ஒருங்கிணைக்கக்கூடியவர்களாக, ஒரு செயலை மிகத் துல்லியமாகவும், சரியான நேரத்தில் சிறப்பாக முடிக்கக் கூடியவர்களாகவும்… இன்று இருக்கும் ஆளுமைகள் அனைவரிடமும் சிறு வயதில் இருந்த ஒரு பொதுவான பண்பு அவர்களின் அன்றாட வேலைகளை அவர்களே செய்பவர்களாக இருந்ததுதான்” என்கிறார் பேராசிரியர் ஜூலி.

குழந்தைகளுக்கு வழி காட்டுங்கள்… போதும்.அவர்கள் வாழ்ந்து காட்டுவார்கள்.நம்புங்கள்…நம்பிக்கையை விதையுங்கள்.தேவைப்பட்டால் ஆற்றல், ஆர்வம் தொடர்பான‌ உளவியல் சோதனைகளை செய்து வழி காட்டலாம்.

-அன்புடன்…
டாக்டர் ஜி.ராஜமோகன்.