
புதிய நம்பிக்கை – 12
அறிவியலின் வளர்ச்சி ஒரு பக்கம் மனித சமூகத்துக்குப் பெரும் நன்மையை அளித்திருக்கும் அதே நேரத்தில் மற்றொரு பக்கம் பெரும் தீமைகளையும் விளைவித்திருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்… அறிவியலின் அசுரத்தனமான வளர்ச்சியால் மெதுமெதுவாக மனிதர்களின் கவனம் சிதைந்து கொண்டே வந்து, இன்று பெரும்பாலான மக்களின் கவனமும் சிதைந்துபோய் விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது..!
அறிவியலின் முக்கியமான அம்சமாக உருவாகியிருப்பது திரைக்கலை… அது நாடகக் கலையிலிருந்து மனிதர்களை முற்றிலுமாகத் திரைக்கலை நோக்கித் திருப்பியிருக்கிறது… சாதாரண மக்கள் திரைப்படங்களின் வருகையைப் பற்றிக் கனவுகூட கண்டிருக்க வாய்ப்பில்லை… அப்படிப்பட்ட சூழலில் திரைப்படத் தொழில் நுட்பம் வந்ததும் மக்கள் அதனால் முற்றிலுமாக ஈர்க்கப்பட்டார்கள்… நாடகங்கள் உட்பட நாட்டுப்புறக் கலைகள் மக்களிடமிருந்து அகலும் சூழல் உருவானது… மக்களின் கவனம் ஒட்டுமொத்தமாகத் திரைப்படங்களிலேயே அமிழ்ந்து போனது…
திரைப்படங்கள், மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து கிடந்த பக்தியையும் புராண, இதிகாசக் கதைகளையும் கூடவே சரித்திர கதைகளையும் மக்களிடம் கொண்டு சென்றன… அதனால் மக்களின் விருப்பம் திரைப்படங்களின் மீது திரும்பினாலும் அவர்களின் சிந்தனைகள் சிதைந்து போகவில்லை…
திரைப்படங்களும் மக்களின் எண்ணங்கள் சீரடைய, வாழ்க்கை சிறப்படைய மக்களுக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அவற்றைக் கொடுத்துக் கொண்டிருந்தன என்று சொல்லலாம்..!
கொஞ்சம் கொஞ்சமாக பக்தி, புராணம், சரித்திரம் சார்ந்த கதைகள் மட்டுமல்லாமல் மக்களின் எதார்த்த வாழ்க்கையையும் கதைகளாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க ஆரம்பித்தன திரைப்படங்கள்…
நாளடைவில், திரைப்படங்கள் மாற்றமடைந்து மக்களின் பொழுது போக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு வந்து நின்றது…
இதற்கிடையில் தொலைக்காட்சியும் போட்டியில் குதித்தது… திரைப்படங்கள் தமக்குப் போட்டியாக வந்த தொலைக்காட்சியுடன் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது…
அப்பொழுதுதான் திரைப்படங்கள், அறிவியல் தொழில் நுட்பத்தின் துணையைத் தேடி ஓட ஆரம்பித்தன… அறிவியல் தொழில் நுட்பத்துடன் கதைகளையும் காட்சிகளையும் பிரம்மாண்டமாக்கி ரசிகர்களைத் தன் வசப்படுத்தும் யுக்தியைப் பயன்படுத்த ஆரம்பித்தது…
இப்படி திரைப்படம், தொலைக்காட்சி என்கிற இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு மக்களைக் கவர்வதற்காகத் தங்கள் எல்லைகளை மீற ஆரம்பித்தன… அத்தகைய மாற்றங்களால் மக்களின் கவனம் முற்றிலுமாகத் தடம் மாறியது… சிதைய ஆரம்பித்தது என்றும் சொல்லலாம்..!
திரைப்படங்களும் தொலைக்காட்சியும் மக்களைச் சுதந்திரமாகச் சிந்திக்க விடாமல் முடக்கிப் போட்டன… திரைப்படங்கள் சில மணி நேரங்கள் மட்டுமே மக்களின் கவனத்தைக் கலைக்கும் நிலையில், தொலைக்காட்சியோ வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு தினமும் மக்கள் கவனத்தை மழுங்கடிக்க ஆரம்பித்தன…
இரண்டும் மக்களைத் தங்கள் வசம் வசீகரித்துக் கொள்வதற்காக மக்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டி, ஆதாயம் தேடிக்கொள்வதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன… மக்களின் மீது அக்கறையில்லாமல் போனது… லாபம் மட்டுமே முக்கியம் என்றாகிப் போனது…
மக்களின் பலவீனங்களான கவர்ச்சி, அடிதடி, வன்முறை, நகைச்சுவை போன்றவற்றை அளவுக்கு அதிகமாகவும் வலிந்தும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கட்டாயமாகத் திணிக்கும் போக்குத் தீவிரமடைந்தது…
ஒரு பக்கம் திரைப்படங்களும் இன்னொரு பக்கம் தொலைக்காட்சிகளும் மக்கள் சிந்தனைகளை மழுங்கடித்துக் கொண்டிருக்க, அறிவியல் வீச்சானது தனது அடுத்தக் கட்டத்தை அடைந்தது… கம்ப்யூட்டருக்குப் பின், அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆகப்பெரிய ஒன்றாக மொபைல் என்கிற கைபேசி அறிமுகமாகி, இன்றைக்கு ஆன்ட்ராய்டு ஃபோனாக மாற்றமடைந்து மனிதர்களால் இனி தவிர்க்கவே முடியாத ஒரு கருவியாக ஒவ்வொருவரின் கைகளிலும் உட்கார்ந்து கொள்ள ஆரம்பித்தது…
குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை, அனைவரும் அனைத்தையும் மறந்து தங்கள் ஒட்டுமொத்தக் கவனத்தையும் மொபைல் என்கிற கைபேசிக்குத் தாரை வார்த்து விட்டார்கள்…
தொலைக்காட்சி, திரைப்படங்கள் போன்றவற்றின் மீது பதிந்திருந்த விருப்பம், கவனம் முழுவதும் ஒட்டுமொத்தமாக வேரடி மண்ணோடு பெயர்த்து எடுக்கப்பட்டு, மொபலின் மீது திருப்பப்பட்டிருக்கிறது…
அறிவியலின் ஆச்சர்யங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் மொபைல் அனைத்து மக்களிடமும் நீக்கமற நிறைந்திருக்கும் அளவுக்கு நிலைமை மாறிப்போயிருக்கிறது…
எல்லா காலகட்டங்களிலும் மனிதர்களுக்கு அறிவியலால் ஏராளமான நன்மைகள் கிடைத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை… அதைப்போலவே மொபைல்களாலும் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கிறது என்பதையும் மறுக்க முடியாது… ஆனால், நன்மைகளைவிடத் தீமைகள் மிக அதிகமாக ஏற்படுகிறது என்பது சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற தேவையற்ற பல மாற்றங்களின் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது…
மக்கள் தங்கள் கவனத்தை மொத்தமாக இழந்திருக்கிறார்கள்… சாலைகளில் நடக்கும் பொழுது, வாகனங்களை இயக்கும் பொழுது, சாப்பிடும் பொழுது, தூங்கும் பொழுது என எப்பொழுதும் மொபைலைக் கையில் வைத்துக் கொண்டு எதையாவது பார்த்துக் கொண்டே இருப்பது இயல்பான ஒன்றாகிப் போனது…
அறிவியல் கொடுத்திருக்கும் அற்புதமான கருவியான மொபைல் என்கிற அந்தக் கருவியை, எப்பொழுதும் பயன்படுத்திக் கொண்டே இருப்பது என்பது எவ்வளவு ஆபத்தானது என்கிற அறிவியலை எவரும் புரிந்து கொள்ளவில்லை…
ஒட்டுமொத்தமாக நம்முடைய மூளையானது தனது திறனை இழந்துவிடும் என்பது எவருக்கும் புரியவில்லை… இயற்கை மனிதனுக்கு என்றே கொடுத்திருக்கும் அதியற்புதமான மூளையை, அதன் மாபெரும் ஆற்றல்கள் அனைத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்கிற உண்மையை உணரும் தன்மை எவருக்கும் இல்லாமல் போனது… மொபைலுடன் ஒப்பிடும் பொழுது, தொலைக்காட்சிகளினாலும் திரைப்படங்களினாலும் ஏற்பட்ட கவனச் சிதைவுகள் என்பது ஓரளவுக்கே மனிதகளைப் பாதிக்கிறது என்று சொல்லலாம்…
தொலைக்காட்சிகளில் வெளியாகும் நிகழ்ச்சிகள், தொடர்கள் போன்றவைகளால் எந்தவிதமான நன்மையும் மக்களின் எண்ணங்களில் ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது… அதைவிடவும் மோசமான சிந்தனைப் போக்குகள் உருவாவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது… வீட்டிற்குள்ளேயே வந்து மக்களின் கவனத்தைச் சிதைப்பதால் திரைப்படங்களைவிட தொலைக்காட்சிகளால் அதிகமான பாதிப்புகள் சமூகத்தில் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன…
அதற்காகத் திரைப்படங்கள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கின்றன என்கிற கருத்தில் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது… திரைப்படங்களின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் பெரும்பாலான மக்களால் திரைப்படங்களைப் பார்க்க முடியவில்லை… இளைஞர்கள்தான் அதிகமாகத் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள்… அதனால், பாதிப்புகள் அனைவருக்கும் ஏற்படுவதில்லை…
ஆனால், தொலைக்காட்சிகளை பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் பார்க்கிறார்கள்… அதனால், பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன…
ஆனால், அவற்றையெல்லாம் விட, மொபைல் இன்று ஒட்டுமொத்தமாக அனைவரின் கைகளிலும் உட்கார்ந்து கொண்டு தன் ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருப்பதால் மக்கள் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்… அந்தப் பாதிப்புகளின் விளைவுகள் மிகவும் விபரீதமாக இருக்கும் என்கிற புரிதல் எவருக்கும் இல்லாமல் போனது…
நம் கவனம் சிதைக்கப்படாமல் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற புரிதல் இங்கேதான் இருக்கிறது… பொதுவாக ஒருங்கிணைந்த கவனம் முழுமையாக எவருக்கும் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் இயல்பு… ஆனால், அது எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய, கவலைப்பட வேண்டிய விஷயம்…
நாம் சுமார் ஆயிரம் பக்கங்கள் உள்ள ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்… அவரின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கவனம் செலுத்திப் படித்தால் மட்டுமே நம்மால் அந்த மனிதரைப் பற்றி, அவரின் உயர்ந்த சிந்தனைகளைப் பற்றி, தியாகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்… அப்படியில்லாமல், போதிய கவனமின்றி படித்தால் அந்த மனிதரைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல் போய்விடும்…
இது எல்லாவற்றுக்கும் பொருந்தும்… எந்த ஒன்றிலும் நாம் நம் கவனத்தை முழுமையாகச் செலுத்தி, அல்லது முடிந்த வரையில் கவனத்தைச் செலுத்தி செயல்பட்டால் மட்டுமே நமக்கு நம்பிக்கையும், புரிதலும், எப்படிப்பட்ட மோசமான சூழல்களாக இருந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் திறமையும், அதற்குரிய சிந்தனைத் தெளிவும் நமக்கும் கிடைக்கும்…
அப்படி நம் கவனத்தை எவையெல்லாம் பெருமளவு பாதிக்கின்றனவோ அவற்றை நாம் மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்… மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்… அப்படி மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய ஒன்றுதான் மொபைல்… அதைச் சரியாகக் கையாளாவிட்டால் இன்னும் அதிகமான, மோசமான, விபரீதமான விளைவுகளை நாளைய சமுதாயம் சந்திக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது..!
நாம் எல்லாவற்றிலும் கவனமாகச் செயல்பட்டு, நாளைய சமுதாயத்துக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்மாதிரியாக இருக்க முயற்சிப்போம்…
(சில தவிர்க்க இயலாத காரணங்களால் இந்தத் தொடரானது தற்காலிகமாக இத்துடன் நிறைவடைகிறது… விரைவில் மீண்டும் தொடரும்..!)
நன்றியுடன்… ஆனந்த சிவா

