நரைத்த கூந்தலுக்கு சாயம் பூசிய காலம் மாறி, இன்று கருத்த கூந்தலைகூட

ஸ்டைலுக்காக கலர் கலராக மாற்றிக் கொள்வதே நாகரிகம் என்றாகிவிட்டது. தவறான வாழ்வியலில் 10 வயது பிள்ளைக்கும் நரை எட்டிப் பார்ப்பது சகஜமாகி விட்டது. அதேவேளையில் நரைய எப்படித் தவிர்ப்பது என்பதைவிட, எப்படி மறைப்பது என்பதுதான் இப்போது எல்லோருடைய கவலையாகி விட்டது.

கருப்போ வெளுப்போ முடியென்று ஒன்று இருந்தால் போதுமல்லவா? இந்த விஷயத்தில் வழுக்கை தலையர்களைப் பார்த்து ஆறுதல்பட்டுக் கொண்டால் அனைவரின் ஆரோக்கியத்துக்கும் நல்லதாகிவிட்டது. கவர்ச்சிகரமான விளம்பரங்களில் சிக்கி, சந்தையில் கூவிக் கூடி விற்கப்படும் ‘ஹேர் டை’களில் எது நல்லது எனத் தெரியாமல் கண்டதை வாங்கிப் பூசிக் கொள்கிறது ஒரு கூட்டம்.

இதற்கிடையில் ‘‘ஆங்கில மருந்துகள் கலந்த ‘டை’ தான் ஆபத்தானது; ‘ஹெர்பல் டை’களில் அந்த ஆபத்து இல்லை என்று ஒரு தவறான கற்பித்தலும் இங்கு வசீகரமாக நடைபெறுகிறது. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் நல்லக் கொள்ளியல்ல.. ஆனால், அந்தக் கொள்ளியை எடுத்து விரும்பி தலையில் வைத்துக் கொள்பவர்கள் பல்கிப் பெருகிவிட்டார்கள்.

வாடிக்கையாளரை கவர்ந்திழுக்க ‘மூலிகை டை’, ‘இயற்கை டை’ என்று எந்தப் பெயரில் அதை அழைத்தாலும், அடிப்படை தயாரிப்பில் இது ஒரு ரசாயனக் குழம்பு என்பதை மறந்து விடக்கூடாது. கருப்பு நிறம் தருவது வேண்டுமானால் மூலிகையாக இருக்கலாம். அதை தலைமுடியில் தாங்குவது ரசாயனம்தான். இது கூந்தலை கருப்பாக்கும் வேலையுடன் ஒவ்வாமை முதல் புற்றுநோய் வரை பல ஆபத்துக்களை போனசாக கொடுக்கத் தயங்குவதில்லை.

‘அமோனியா ஃப்ரீ’ ஹேர் டைத்தான் சிறந்தது என நினைத்து, அதைத் தேடி ஓடுகிறது ஒரு கூட்டம். இது ‘ஜுரோ பர்சன்ட்’ வட்டி என்பது போன்ற போலியான வாதம்தான். ஹேர் கலர்களில் அமோனியாவை விட அதிக ஆபத்தான ரிசோர்சினால், பெட்ரோலியம் ஜெல்லி, பேராபென்ஸ், மெதைல் பினால், பிபிடி, நாப்தால் போன்ற ரசாயனங்களும் உள்ளன.

அவை எல்லாமே நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் நஞ்சுகள்தான். ஆனால், வெளி அழகைக் கூட்ட இருபது மணி நேரம் செலவழிக்கிற இளைஞர்/இளைஞி கூட்டம், இந்த ஆரோக்கிய கேடுகள் குறித்து இரண்டு நிமிடம்கூட யோசிப்பதில்லை. சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்பவர்கள் பல்கிப் பெருகி விட்டார்கள்.

நீங்க என்ன வேணா சொல்லுங்க நான் ‘ஹேர் டை’ அடித்தே தீருவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கான டிப்ஸ் இதோ..

ஓர் இரும்புப் பாத்திரத்தில் மருதாணிப் பொடி, டீ டிகாஷன், பீட்ரூட் சாறு லவங்கப் பொடி, எலுமிச்சை சாறு இவற்றை தேவைக்கேற்ப கலந்து, முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் இதை தலைமுடியில் தடவி 2 மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இயற்கை வழியில் இளநரையை மறைத்துக் கொள்ள இதுதான் சிறந்த வழி. அப்புறம் உங்கள் இஷ்டம்.