
டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா, சிறப்பு மனநல மருத்துவர்
“நலம். நலமறிய ஆவல்” என்று சம்பிரதாயமாக கடிதம் எழுதும் போதும், “சுகமா?” என்று தெரிந்த ஒருவரிடம் நாகரிகம் கருதி நலம் விசாரிக்கும் போதும், “நலம்” என்ற சொல் உடல் நலத்தையே குறிக்கும் என்பது எழுதப்படாத ஒரு விதி. இம்மாதிரியான சாதாரண உரையாடலில் பொதிந்துள்ள உட்கருத்து நலம் அல்லது ஆரோக்கியம் என்பது உடல் நலத்தை மட்டுமே உள்ளடக்கியது என்பதுதான். எவரும் மனநலத்தைப் பற்றி விசாரிப்பதில்லை. ‘உங்கள் மனநலம் எப்படி?’ என்றோ ‘மன நிம்மதியோடு இருக்கிறீர்களா?’ என்றோ வினவுவது இல்லை. கேட்டாலும் கோபித்துக்கொள்வார்கள்.
ஏன்? ஆரோக்கியம் என்பது உடல் நலத்தை மட்டுமே சார்ந்தது என்ற தவறான எண்ணம்தான். ஆனால், மனிதன் மகிழ்ச்சியான, நிம்மதியான, நிறைவான வாழ்க்கையை வாழவே விரும்புகிறான். தனக்கு நெருங்கியவர்களுடன் வளமான உறவுகளைப் பேணுவது, தன் திறமைகளை வளர்த்துக்கொள்வது, தான் வாழும் சமுதாயத்துக்குத் தன்னால் முடிந்ததைச் செய்வது ஆகியவற்றையே மிக உயர்ந்த லட்சியமாகக் கருதுகிறான். இருந்தும் நாம் இவற்றைப் பற்றி விசாரிப்பதுமில்லை, அக்கறை கொள்வதும் இல்லை.
ஆரோக்கியம் என்பது உடல் நலத்தையும் மனநலத்தையும் உள்ளடக்கியது. இவ்விரண்டும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை, ஒன்றில்லாமல் மற்றது இல்லை. இதையே உலக சுகாதார நிறுவனம், “ஆரோக்கியம் என்பது நோய்கள் அல்லது சுகாதாரக் கேடின்றி இருப்பது மட்டுமல்ல; சுகாதாரம் என்பது உடல், மனம், சமுதாயம் மற்றும் ஆன்மீக நன்னிலைகளையும் உள்ளடக்கியது” என்று வரையறுத்துள்ளது. ஆனாலும் மன நலத்தைப் புறக்கணிக்கும் மனப்பாங்கு நம்மிடம் வேரூன்றிப் போயுள்ளது.
இன்னுமொன்று, உடல் நலத்தையும் மனநலத்தையும் பிரித்துப் பார்ப்பதும் தவறு. உடல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு கூடுதல் அளவில் மனச்சோர்வு போன்ற மனக்கோளாறுகள் உண்டாகின்றன. அதேபோல, மனக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு உடல் நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, மனச்சோர்வு காரணமாக இருதய மற்றும் இரத்தநாள நோய்கள் உருவாகின்றன என்று சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
சரி, மனநலம் என்றால் என்ன? முன் கூறிய கருத்துக்கு ஏற்றபடி, மனநலம் என்பது மனக்கோளாறுகள், மனநோய்கள் இல்லாதிருப்பது மட்டுமல்ல, அதன் பொருள் அதைவிட விரிவானது, பரந்துபட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு தனிநபரின் மனநலம் என்பது பின்வரும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது:’
தன்னுடைய முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துதல்.
அன்றாட வாழ்வியல் போராட்டங்களைத் தாங்கி முன்னேறுதல்
திறம்படப் பணி செய்தல்.
சமுதாயத்துக்குத் தன்னாலான பங்கீட்டை அளித்தல்.
இந்த நான்கு கூறுகளில் முதல் மூன்றும் அகம் சார்ந்தவை, மற்றது புறம் சார்ந்தது. இதன் அடிப்படையில், மனநலம் என்பது தன்னைப் பற்றிய நல்லுணர்வு கொண்டிருப்பதும், தனி நபராக குடும்பத்திலும் சமுதாயத்திலும் முறையாகச் செயல்படுவதும் என்பது அறியப்படுகிறது. இக்கருத்தையே உளப்பகுப்பாய்வின் தந்தை என்று அழைக்கப்படும் சிக்மண்ட் ஃப்ராய்ட், “மனித வாழ்க்கையின் நோக்கம் அன்பு செலுத்துவதும் பணி செய்வதும்” என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறினார். சமுதாயத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு அதன் மக்களின் மனநலம் முக்கியம். இது மனித வளத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.
உடற் கோளாறுகள் பற்றி அறிந்த அளவுக்கு மனக்கோளாறுகள் பற்றி பொதுமக்களுக்குத் தெரியாது. மனக்கோளாறுகள் கண்களுக்குத் தெரிவதில்லை.
பொது மக்களிடையே மனக்கோளாறுகள் பற்றிய அறிவு குறைவு என்றால், (மனநல மருத்துவர்களைத் தவிர்த்து) பொதுநல மருத்துவர்கள் மத்தியிலும் இது பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது. இந்த நிலைக்குப் பல காரணங்கள் உண்டு.
மருத்துவப் படிப்பின் போது அவர்களுக்கு மனக்கோளாறுகள் பற்றி அளிக்கப்படும் பயிற்சி குறைவு என்பது ஒரு காரணம், மற்றது, உடல் நோய்களுக்கான அணுகுமுறையும் மனக்கோளாறுக்கான அணுகுமுறையும் வித்தியாசமானவை. நோயை அடையாளம் கண்டோம், அதற்கேற்ற மருந்தைக் கொடுத்தோம் என்ற மனப்பான்மை மனக்கோளாறுகளுக்கு ஏற்றவை அல்ல. மனித உடலில் மிகச் சிக்கலான உறுப்பு, மூளை.
அதில் தங்கி இருக்கும் மனதின் செயல்பாடுகள் மிக மிகச் சிக்கலானவை, முழுமையாக அறியப்படாதவை. மனக்கோளாறுகளின் அறிகுறிகளைக் கேட்டறிய பொறுமையும் அவகாசமும் தேவை. மற்றவரின் அனுபவத்தை அறிந்து ஒத்துணர்வோடு அணுக வேண்டும். அவற்றிற்கான காரணங்களைக் கண்டறிய எக்ஸ்ரேயும் ஸ்கேனும் பயன்பட மாட்டா.
‘நோய்=மருந்து’ என்ற சமன்பாட்டை கைவிட்டு உளவியல் நோக்கில் பிரச்சினைகளை அணுக வேண்டும். இது எல்லோருக்கும் தானாகக் கைவருவதில்லை. ஆனாலும் பொது மருத்துவர்களிடம் நோய்க் குறிகளுடன் செல்பவர்களில் 25 சதவீதத்தினருக்கு மனக்கோளாறுகள் உள்ளன என்று இந்திய ஆராய்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. இவை பெரும்பாலும் அடையாளம் காணப்படுவதில்லை.!
எனவே, மக்களுக்குப் பணிபுரியும் மருத்துவர்கள், முதல்நிலை சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, மனக்கோளாறுகள் பற்றிய அடிப்படை அறிவும் புரிதலும் கட்டாயமாகத் தேவை. மேலும், மனக்கோளாறுகள் பற்றிய முக்கிய தகவல்களை பொதுமக்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

