முகத்தின் அழகுக்கு…
 
அகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும். ‘அகம்’ என்றால் மனம் மட்டுமல்ல; வயிறும்தான். எண்ணெய்ப் பிசுக்கான முகம் இருந்தால் தினசரி சீரகத்தண்ணீர் அருந்தவும். பால், வகைகளை ஒதுக்கிவிட்டு, பழ ஆகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். குறிப்பாக, பாலிஃபீனால்கள் நிறைந்த பப்பாளி தினசரி உணவில் இருக்கட்டும். கேரட், தக்காளி சேர்த்த ஜூஸ் அதனுடைய ஆண்ட்டி ஆக்சிடன்ட் தன்மையால், முகத்தில் சுருக்கங்கள் வராது பாதுகாக்கும்.
 
அழகைத் தரும் காயகல்பம்! 
 
போலியான சில விளம்பரங்களால் இந்த வார்த்தைக்குத் தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டுவிட்டது. ‘காயகல்பம்’ என்பது, உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் உறுதி செய்ய, அந்தக் காலத்தில் தமிழ்ச் சித்தர்கள் காட்டிய உணவுப் பழக்கம்,ஒழுக்க முறை, யோகப் பயிற்சியும் தானே தவிர, எந்த ‘ஸ்பெஷல் சிட்டுக்குருவி’ லேகியமும் அல்ல. அழகான உடலை வசீகரத்துடன் அன்றைய சாதுக்கள் பெற்றிருந்தமைக்கு இந்தக் காயகல்பப் பயிற்சி ஒரு முக்கியக் காரணம். அழகு நிலைத்து இருக்க, ஒவ்வொருவரும் அவரவர் உடலுக்கேற்ற உணவை, குறிப்பிட்ட மூலிகையை மருத்துவர் ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்து தினசரி சாப்பிடுவதும், பிராணாயாமப் பயிற்சிகளை தினசரி செய்வதும், என்றும் உங்களைப் ‘பளிச்’ என வைத்திருக்கும்.