
டாக்டர் ஜி.ராஜமோகன்
என்னிடம், கை வண்டியில் இளநீர் விற்பவர் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. சிக்கனமும் சேமிப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை எனும் தத்துவத்தைப்பற்றி தீவிரமாக யோசிக்க வைத்தது.
நான் சென்னை, பெசன்ட் நகரில் வசிக்கிறேன். சமீபத்தில் வாடகை வீடு தேடி அலைந்த போதுதான் இளநீர் வியாபாரி அந்த கேள்வியை கேட்டார்.
“35 ஆண்டுகளாக நான் உங்களை அறிவேன் .நல்ல வேலை ,பேராசிரியர் பணி ,மருத்துவ சேவை என அயராது உழைக்கிறீர்கள். தினமணியில் உங்கள் கட்டுரை இடம்பெறாத நாளே இருக்காது. அது தவிர நிறைய பத்திரிகைகளில் எழுதி வந்தீர்கள். பின்னர் ஹெல்த் அண்ட் பியூட்டி பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பு ஏற்றீர்கள். இப்படி அயராது உழைத்தும் உங்களுக்கு சொந்தமாக வீடு இல்லையா ?என்னால் நம்ப முடியவில்லை! நம்பாமல் இருக்கவும் முடியவில்லை! ” என்று மனம் வெதும்பி புலம்பினார்.
அவர் கூறியது என் இதயத்தை தொட்டாலும் மனம் உறுதியாகவே இருந்தது. ஈதல் இசைபட வாழ்தலே வாழ்க்கை.புகழ்பட வாழ்தலே என் குறிக்கோள்.என் வேலைக்கு ஊதியம் பெறுகிறேன்.எனது மருத்துவ சேவைக்கு சிறு கட்டணம் வாங்குகிறேன்.பொதுவாகவே மருத்துவ சேவைக்கு நான் கட்டணம் வசூல் செய்ய விரும்புவதில்லை.
தற்போது எனக்கு வயது 76. எனது குடும்பம் மகிழ்ச்சியாகவே உள்ளது.நேற்றைய நிலையைப்பற்றி கவலைப்படாதே.
நாளையைப்பற்றியும் அஞ்சாதே.இன்று உன்னுடைய நாள்.வாழ்வதை அர்த்தம் உள்ளதாக மாற்றிக்கொள்.இது தான் சிறப்பான வாழ்வியல் தத்துவம். தன் நலத்தோடு பிறர் நலத்தையும் பேணுக என்பதையே என் வாழ்க்கையின் நோக்கமாக கொண்டிருக்கிறேன். ஒருவேளை எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் என் மனப்போக்கு மாறி இருக்கலாமோ என்றும் நினைத்துப்பார்க்கிறேன்.
எதுவானாலும் சேமிப்பு அவசியம். எனது சொந்த(நீடாமங்கலம்) ஊரில் ஒரு பாட்டி இருந்தார்கள். அவருக்கு சொந்த பந்தம் என்று யாரும் இல்லை. ஒரு சிறு குடிசை வீட்டில் அவர் மட்டுமே தனியாக வாழ்ந்து வந்தார். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். அப்போது நான் பள்ளி மாணவன். அவர்கள் சொல்வார்கள் ,”நான் இறந்தால் இறுதிக் கடன் செய்ய இந்த சிறு பெட்டியில் பணம் வைத்துள்ளேன்… அதனையே செலவு செய்து அடக்கம் செய். வேறு எவரிடமும் பணம் வாங்கி விடாதே” என்பார் .அவ்வாறே செய்தேன் .சேமிப்பு தேவை என்பதையே வலியுறுத்துகிறேன்.
-அன்புடன்
டாக்டர் ஜி.ராஜமோகன்

