
டாக்டர் ஜி.ராஜமோகன்
எதிர்மறையாளர்கள் நம்மை எப்போதும் கூர்ந்து கவனிப்பார்கள். பிறரைப் பற்றி குறைசொல்வதும், பிறர் விஷயங்களில் தலையிடுவதும்தான் அவர்களின் பிரதான வேலை. அவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாம்தான் சோர்ந்துபோவோம்.
முடியாது…சிரமம்…
சாத்தியமில்லை…
அதிர்ஷ்டம் இல்லை…
ஆபத்து வருகிறது…
கஷ்டம்,நஷ்டம்…
இது தான் நெகடிவ் சிந்தனையாளர்கள் எப்போதும் பேசும் வார்த்தைகள்.
அதனால் எதிர்மறை நண்பர்களை திருத்திவிடலாம் என வீண்முயற்சி செய்வதை தவிர்த்துவிட்டு புத்திசாலித்தனமாக எதிர்கொள்வதே நல்லது. அவர்களை விட்டுவிலகுதல் மேலும் நல்லது. உங்கள் மனதை தன்னம்பிக்கை நண்பர்கள் என்னும் தங்கத்தோடு சேர்த்தால்தான் மதிப்பு. அதை விடுத்து எதிர்மறை நண்பர்கள் என்னும் தகரத்தோடு பொருத்தி மனதை மதிப்பிழக்கச் செய்துவிடாதீர்கள்.
உலகில் வெற்றியாளர்கள் அனைவருமே எதிர்மறையாளர்களை சந்தித்துவிட்டுதான் வந்துள்ளார்கள். திரைப்படத்தைக் கண்டுபிடித்த எடிசனிடம், ‘திரையில் வரும் ஒளியை யாரும் பணம் கொடுத்துப் பார்க்கமாட்டார்கள்’ என வலுவாக எதிர்த்தார்கள். மேரி க்யூரியிடம் அவரது நண்பர், ‘ரேடியத்தைப் பற்றி சிந்திப்பதை மறந்துவிடு’ என்று கூறினார். பாரதியாரை, ‘காலத்தை மீறி கனவு காண்கிறாய்’ என்று விமர்சித்துள்ளார்கள் மகாத்மாவிடம், ‘இந்தியா சுதந்திரம் பெற அகிம்சை முறை எடுபடாது’ எனக்கூறினர். ஆனால் அத்தகைய எதிர்மறையாளர்களை வெற்றியாளர்கள் ஒரு பொருட்டாகவே நினைத்தது இல்லை.
ஓர் அரசன் தன்னுடைய சிறிய படைகளை வைத்துக்கொண்டு பெரிய படைகளையெல்லாம் வென்றார். அவ்வளவு சாமர்த்தியம் மிக்கவர். ஆனால் அவரது தளபதி எப்போதும் எதிர்மறை எண்ணம் கொண்டவர். ஒரு சமயம் அவர் எதிரியின் மீது படையெடுத்துச் செல்லும்போது, அவரது தளபதிக்கு ஒரு சந்தேகம் வந்தது. இந்தப் போரில் நாம் வெற்றி பெற முடியுமா? என்பதுதான். உடனே துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெதுவாக அரசரிடம் கேட்டுவிட்டார்.
அரசரும் ‘சரி அதை நாம் முடிவு செய்யவேண்டாம். புத்த கோயிலுக்கு செல்வோம். பூவா தலையா போட்டுப் பார்ப்போம். பூ வந்தால் தோற்றுவிடுவோம், எனவே போருக்கு போவதை தவிர்த்து விடுவோம். தலை விழுந்தால் போருக்கு போவோம். வென்று திரும்புவோம். என்ன சொல்கிறீர்கள்? ஏனென்றால் போருக்குச் செல்லும்போது எதிர்மறை எண்ணங்களுடன் போக வேண்டாம்’ என்று கூறினார்.
உடனே அவர்கள் எல்லோரும் அங்கே உள்ள புத்தர் கோயிலுக்கு சென்றார்கள்.
அரசர் உள்ளே சென்றார். எல்லாரும் ஆவலோடு வெளியில் காத்துக் கொண்டிருந்தார்கள். ரொம்ப நேரத்திற்குப் பிறகு அரசர் புத்தர் கோயிலில் இருந்து வெளியே வந்தார். அனைவர் முன்னிலையிலும் பூவா தலையா போட்டு பார்க்கலாம் என்று தங்க நாணயத்தை சுழற்றினார், தலை விழுந்திருந்தது. அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி. எல்லோரும் உறுதியான முடிவோடு போருக்குச் சென்றார்கள். வெற்றியோடு திரும்பினார்கள். பிறகு கோலாகலமாக வெற்றி விழா நடந்தது. தளபதி உரை நிகழ்த்தினார். “இந்த வெற்றியை தங்க நாணயம்தான். முடிவு செய்தது. அதனால் விதியை யாரால் வெல்ல முடியும்?” என்று கூறினார்.
அப்போது அரசர் தன்னிடம் இருந்த தங்க நாணயத்தை ரகசியமாக தளபதியிடம்
காண்பித்தார். அந்த நாணயத்தில் இரண்டு பக்கமும் தலைதான் இருந்தது. அப்போது அரசர் சொன்னார்: “உங்களிடம் எதிர்மறை எண்ணத்தைப் போக்குவதற்குத்தான் நான் இவ்வாறு செய்தேன். வெற்றியின் ரகசியம் மனஉறுதியில் தான் இருக்கிறது என்றார்.
நம்மால் முடியும் முயற்சி செய்வோம் என்பது பாசிட்டிவ்.முடியாது…சாத்தியமே இல்லை என்பது நெகடிவ்.எதிர்மறை சிந்தனை உள்ளவர்களோடு பழகாமல் விலகி இருப்பது நல்லது.

