
போதுமான அளவுக்கு தினமும் தூங்குவது முக்கியம்.தூங்க வேண்டிய நேரம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். வயதுக்கேற்ப இந்த நேரம் மாறலாம்.
பிறந்த குழந்தை 18 முதல் 20 மணிநேரம் வரை தூங்கிக்கொண்டே இருக்கும். வளர வளர தூக்க நேரமும் மாறும். நான்கைந்து வயதில் குழந்தைகள் இரவு நேரம் மட்டுமே பெரும்பாலும் தூங்குவார்கள். 10-11 மணி நேரம் வரை உறங்குவார்கள்.
சில குழந்தைகள் பகலில் ஒன்றிரண்டு மணி நேரம் தூங்குவார்கள். பதின்பருவ பிள்ளைகளுக்கு 8 – 9 மணி நேரத் தூக்கம் கட்டாயம் தேவை. வளர்ந்த நபர் ஒரு நாளைக்கு 6 – 8 மணி நேரம் வரை உறங்க வேண்டும். தூங்கி எழுந்து மறுநாள் தம் வேலைகளை சுறுசுறுப் பாகச் செய்ய முடிந்தால் ஒரு நபர் போதுமான அளவு தூங்கியிருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்.
மதிய நேர குட்டித்தூக்கம் ஆரோக்கியமானதா?
‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்பார்கள். மதிய சாப்பாட்டுக்குப் பின் சிறிது நேரம் தூங்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. எத்தனை மணி நேரம் உறங்குகிறீர்கள் என்பது மிக முக்கியம். மதிய நேர உறக்கம் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இருந்தால் பிரச்னை இல்லை. ஒரு மணி நேரம் தாண்டி உறங்குவது ஆரோக்கியமானதல்ல.
மதியம் உறங்குவதற்கேற்ற சூழல் எல்லோருக்கும் இருக்காது. முதியவர்கள், வீட்டில் இருப்பவர்கள் என யாருக்கெல்லாம் அதற்கான சூழல் அமைகிறதோ, அவர்கள் சிறிது நேரம் தூங்கி, புத்துணர்வு பெறலாம். இரவில் தூக்கமின்மை தொந்தரவு உள்ளவர்கள் மதிய உறக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. பகலில் தூங்கிப் பழகுவதும் இரவில் தூக்கமின்மைக்கு காரணமாகலாம் என்பதால் அதைத் தவிர்க்கவும்.

