உடற்பயிற்சியை மிகக் குறைந்த நபர்களே ஒழுங்காகச் செய்கிறார்கள். தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நீங்கள் செய்யும் வேகமான நடைப் பயிற்சி உங்கள் உடலை நலத்துடன் வைப்பதுடன் நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ உதவுகிறது. நீங்கள் செய்யும் உடற்பயிற்சி கடுமையாக இருக்க வேண்டியதில்லை. மெதுவாக நடப்பதுகூட இதய நோய்கள் வராமல் தடுக்கும். ஆனால் வேகமாகவும் அதிக நேரமும் நடக்கும்போது பேலும் நல்ல உடல்நல விளைவுகள் ஏற்படும்.
 
முதலில் செய்ய வேண்டியவை
 
நல்ல நடைப்பயிற்சித் திட்டம் பாதுகாப்பானதாகவும் செய்ய முடிவதாகவும் இருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் இதோ:
 
1.உங்களால் முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள்.
 
 முதலில் முறையான உடற்பயிற்சியால் உங்களுக்கு என்ன பலன் என்று சிந்தியுங்கள். நீங்கள் 45 வயதுக்காரராயின் உங்களுக்கு இதயநோய் பற்றிய பயம் இருக்கிறதா? நீங்கள் 75 வயது உடையவராயின் மேலும் வாழ்க்கையை அனுபவிக்கவும் தனித்து வாழவும் விருப்பம் உள்ளவரா? நீங்கள் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? இரத்த அழுத்தத்தைக் குறைக்க விரும்புகிறீர்களா? நீங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க நினைக்கிறீர்களா? மேலும் நல்ல உடல் நலத்தைப் பெற விரும்புகிறீர்களா?
 
நடைப்பயிற்சியின் மூலம் நீங்கள் இவை அனைத்தையும் பெறலாம். முதலில் எது தேவை என நிர்ணயம் செய்யுங்கள். பிறகு எவ்வளவு வேகம், எவ்வளவு தூரம் எனத் தீர்மானியுங்கள். நான் அதிக தூரம் நடப்பேன் என்பதைவிட நான் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை காலை 7 முதல் 7.30 வரை நடப்பேன் எனக் கூறுங்கள்.
 
2.நல்ல காலணிகளை வாங்குங்கள்.
 
 நடப்பதற்காக வடிவமைக்கப்பட்ட காலணிகளை வாங்குங்கள். ஆனால் இதற்காக அதிகம் செலவு செய்ய வேண்டாம். உங்கள் கால்களுக்கு உறுதியும் பாதுகாப்பும் அளிக்கும் காலணிகளை அணியுங்கள்,
 
3.உடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
 
 இறுக்கமான உடைகளைத் தவிர்த்துவிடுங்கள். வசதியான உடைகளை அணியுங்கள். குளிர்காலத்திலும் கோடைக் காலத்திலும் தட்பவெப்பத்திற்கேற்ப உடை அணியுங்கள். அதில் பளிச்சென்ற நிறமுடைய உடைகளைத் தேர்ந்தெடுங்கள். ஒளியைப் பிரதிபலிக்கும் அட்டைகளை உடலில் ஒட்டுங்கள். ரப்பர் கலந்த உடைகள் வியர்வையைத் தடுப்பதால் அதனைத் தவிர்த்துவிடுங்கள். கோடைக்காலத்தில் வெப்பத்தைத்
தடுக்கும் கிரீம்கள், கண் கண்ணாடிகள், தொப்பிகள் அணியுங்கள்.
 
 4.தண்ணீர் குடியுங்கள்.
 
 உடற்பயிற்சியின்போது உங்கள் தசைகளின் இயக்கத்துக்கும், உடல் வெப்பத்தை இயல்பாக வைத்திருக்கவும் கூடுதல் நீர் தேவைப்படுகிறது. எனவே உடற்பயிற்சிக்கு முன்னரும். பின்னரும் நிறைய நீர் அருந்துங்கள். 20 நிமிடங்கள் நடைப் பயிற்சியின்போது அரை முதல் 1 டம்ளர் தண்ணீர் தேவை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இதுபோல் நீர் பருகவும்.