அழுகை என்பது ஒருவரது பலவீனத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. மன உறுதி குறைந்த மனிதர்களின் பழக்கமாகவும் நம்பப்படுகிறது. அழுவதால் வரும் நன்மைகள் எதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் 85 சதவீத பெண்களும், 73 சதவீத ஆண்களும் அழுத பிறகு நன்றாக உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அழுகை துக்கத்தின் வடிகால். ஒருவர் அழும்போது மற்றவர்கள் ஆறுதல்படுத்தி உதவும்போது நிம்மதியாக உணர்வார்கள். ஒருவித மன இறுக்கம் குறைந்து புத்துணர்ச்சி பெருகும். இப்படி மனதளவில் மட்டுமல்ல.. உடலளவிலும் பல்வேறு நன்மைகளை உடையது கண்ணீர் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

துன்பத்தை.. துயரத்தை மனதில் போட்டு அடைக்காமல் வெளியே அழுவதால் நம் மன அழுத்தம் குறைகிறது. சந்தோஷத்தை சிரித்து தீர்த்துக் கொள்ள வேண்டும்; துக்கத்தை அழுது தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அழுபவர் எல்லாம் கோழை அல்ல. மகிழ்ச்சியான தருணங்களில்கூட கண்ணீர் வரும். அது ஆனந்தக் கண்ணீர். அதற்காக எடுத்ததெற்கெல்லாம் அழுது புலம்பினால் அழுமூஞ்சி பட்டம்தான் கிடைக்கும்.

பவித்ரன்