மது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தடை போடுவது கடந்த கால கசப்புகள்தான்.
நோய்களின் ஆதாரம் – அழுத்தி வைக்கப்பட்ட கசப்பான உணர்வுகள்.நமக்கு ஒவ்வாத, தேவையில்லாத, நன்மை தராத அனைத்து எதிர்மறை உணர்வுகளையும் நமக்கே தெரியாமல் தேக்கி வைத்துள்ளோம். அவை ஆழ்மனதில் பத்திரமாகச் சேமிக்கப்பட்டு காலம் காலமாக நம்மை ஆட்டிப்படைக்கும்.

பதவி உயர்வை கெடுத்தான்,அப்பாசொத்தில் பங்கு தரவில்லை, அண்ணன் துரோகம்,பங்காளி பகை… அவர்களை பார்த்தால் வயிறு பத்திக்கிட்டு எரியுது… ஜீரணிக்க முடியாது… ஜென்மத்தில் மறக்க மாட்டேன்‌.

இப்படி அவமானம், துக்கம்,பொறாமை, துரோகம்,வஞ்சம், ஆற்றாமை,கோபம், குற்றஉணர்வு என ஏதோ ஒன்றை (அல்லது கூட்டு உணர்வுகளை) கேடயங்கள்போல் சேமித்து வைத்துக்கொள்கிறோம்.காலம் கடந்தாலும், மனிதர்கள் மறைந்தாலும்,சூழல் மாறினாலும் இந்தக் காயங்கள் ஆறாமல் உள்ளேயே இருக்கும். அதன் வலிமையும் வீரியமும் உங்களுக்குத் தெரியாது. இவைதான் வார்க்கப்பட்ட இறுகிய எண்ணங்களை உருவாக்குகின்றன. நடத்தையை மாற்றும்.உடல் உறுதியைக் கெடுக்கும்.நோய்கள் வரக் காரணமாகும்.அதனால் இதைச் சரி செய்யாமல் உங்களால் மன மாற்றத்தையோ, உடல் நலத்தையோ பேண முடியாது.

நேற்றைய உணவுக் கழிவை வெளியேற்றிய பின்னர்தான், இன்றைய உணவை எடுத்துக்கொள்கிறோம். மனக்கழிவுகளுக்கும் இதே முறைதான் தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக உள்ளே வைத்துக் கெட்டுப்போன உணர்வுகளை வெளியேற்ற வேண்டும்.பிறகு ஆரோக்கியமான உணர்வுகள் உட்புக அங்கு இடம் கொடுக்க வேண்டும். உள்ளே ஆண்டுக்கணக்காக புழுங்கி,அழுகிக் கிடக்கும் அடைபட்ட உணர்வுகளை வெளியேற்ற வேண்டும்.

இதைத்தான் ‘Release Technique’ என்று சொல்வார்கள்.
உணர்வுகளும் எண்ணங்களும்தான் உடலைப் பாதிக்கின்றன என்பது உண்மையானால், அந்த உணர்வுகளையும் எண்ணங்களையும் மாற்றினால் உடல்நிலை மாறும்தானே?உள்ளே சிக்கிக்கொண்டு உபாதை தரும் உணர்வுகளை வெளியேற்றி விடுதலை பெறுதல் அவசியம்.

கடந்த காலத்தின் பாடங்கள் மட்டும் போதும்.கடந்த காலக் கசப்புகள் வேண்டாம். அந்த உணர்வுகளைத் தொடர்ந்து வாழ்ந்து பார்ப்பதன் மூலம், நீங்கள் கடந்த காலத்திலேயே சிக்குண்டு கிடக்கிறீர்கள். கழுத்து ஒரு முறைதான் அறுபட்டிருக்கும். ஆனால்,ஒவ்வொரு முறையும் நீங்கள் கற்பனைசெய்து பார்க்கும்போது உங்கள் உடலையும் மனத்தையும் மீண்டும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறீர்கள். நம்முள் ஆறாமல் இருக்கும் உணர்வுகளை ஆற்ற முதல் வழி அவற்றை வெளியேற்றுவதுதான்.

இதற்கு சிறந்த வழி’அஃபர்மேஷன்’ தான்!

“என் சிறு வயது அவமான உணர்வுகளை வெளியேற்றுகிறேன்!”

“என் திருமணத்துக்குத் தடையாக இருக்கும் அனைத்துக் கசப்பான உணர்வுகளையும் வெளியேற்றுகிறேன்.”

”என் நோய்க்குக் காரணமான அனைத்து அடைக்கப்பட்ட உணர்வுகளையும் வெளியேற்றுகிறேன்!”
இந்த வழிமுறை மகிழ்ச்சியாக வாழ உதவும்.
-அன்புடன்…

டாக்டர் ஜி.ராஜமோகன்.