
உடல் நலம் இல்லாதபோது அவசரத்திற்கு ஆம்புலன்ஸை அழைக்கிறோம்.தற்போது
ஆம்புலன்ஸ் என்பது நகர்ந்து வரும் மருத்துவமனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அவசர சிகிச்சையை வழங்க தொடர்ந்து கண்காணிக்கும் வசதி கொண்ட 5ஜி ஆம்புலன்ஸ் சேவையை காவேரி மருத்துவமனை, சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம் நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே, மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையை உடனுக்குடன் கண்காணித்து, ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவக் குழுவினருக்கு நோயாளிக்கு வழங்க வேண்டிய அவசர சிகிச்சை குறித்து ஆலோசனைகளை வழங்கி அவர்களை வழிநடத்த முடியும்.
இந்த சேவையை சென்னை பெருநகர காவல் ஆணையரும், காவல் துறையின் கூடுதல் தலைமை இயக்குநருமான திரு. A.அமல்ராஜ் ஐ.பி.எஸ் அவர்கள் தொடங்கிவைத்தார்.
ஆழ்வார்பேட்டை, வடபழனி,ரேடியல் சாலை மற்றும் மா காவேரி ரேடியல் சாலை ஆகிய இடங்களில் இயங்கி வரும் காவேரி குழுமத்தின் மருத்துவமனைகளில் 30-க்கும் மேற்பட்ட இந்த நவீன ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.
பச்சிளம் குழந்தைகள், சிறார்கள், நரம்பியல் மற்றும் இதய பாதிப்புகள் உள்ள நோயாளிகள் மற்றும் பிற அவசர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அவசர காலங்களில் உயிர்காக்க உதவும் மருத்துவ சிகிச்சையையும், முதலுதவியையும் இவைகள் வழங்குகின்றன. விரைவான சேவையை உறுதி செய்வதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் இந்த ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மாநகரின் முக்கியப் பகுதிகளில் இந்த நவீன ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், மருத்துவமனையை சென்றடையும் பயண நேரம் குறைவதோடு, அவசரமான மருத்துவ நெருக்கடி சூழ்நிலைகளில் நோயாளிகளுக்கு மிக விரைவாக சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
மருத்துவமனையில் உள்ள சிபிஎம்எஸ் கட்டுப்பாட்டு அறை, அவசர அழைப்பு வந்த அடுத்த நொடியே செயல்படத் தொடங்கும். ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தின் உதவியோடு, அழைப்பு வந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள ஆம்புலன்ஸை அது உடனடியாக அனுப்பி வைக்கும். நோயாளியைப் பற்றிய முக்கியத் தகவல்களைக் கட்டுப்பாட்டு அறைக் குழுவினர் சேகரித்து ஆம்புலன்ஸ் குழுவுக்கு வழங்குவர்.இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் மிக முக்கியமான நேரத்திற்குள் நோயாளிகளுக்குத் தேவைப்படுகிற மற்றும் உயிர்காக்கும் சிகிச்சை விரைவாக கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
இந்த ஆம்புலன்ஸ்களில் வென்டிலேட்டர், டிஃபிப்ரிலேட்டர், மருந்து மற்றும் ரத்தத்தை உட்செலுத்தும் பம்புகள் மற்றும் மானிட்டர்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் உபகரணங்கள் அனைத்தும் உள்ளன. நோயாளியின் ஆக்சிஜன் அளவு (SpO2),ரத்த அழுத்தம்,இதயத் துடிப்பு மற்றும் சுவாச நிலை போன்ற முக்கியத் தகவல்களை IoT தொழில்நுட்பம் மூலம் மருத்துவமனைக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கும் வசதியும் இதில் உள்ளது.
மக்கள் அடர்த்தியாக வசிக்கும் மற்றும் அதிக போக்குவரத்து நெரிசலுள்ள பகுதிகளிலும் கூட, நோயாளியின் தகவல்கள் அதிவேகமாக மருத்துவமனைக்குச் சென்றடைவதை 5G இணைய இணைப்பு வசதி ஏதுவாக்கும். இதனால் ஆம்புலன்ஸ் மருத்துவமனையை சென்றடைவதற்கு முன்பே, நோயாளியின் உடல்நிலையை மருத்துவர்கள் மதிப்பீடு செய்து சிகிச்சையை உடனடியாக தொடங்க தயாராகி இருப்பார்கள். இதன் மூலம் சற்றும் தாமதமின்றி பொருத்தமான சிகிச்சை செயல்முறைகளை விரைவாக தொடங்கி நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும்.
இந்நிகழ்வில் பேசிய திரு. A. அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்கள், “சென்னை போன்ற பெருநகரங்களில் மருத்துவ அவசர நிலைகளின்போது மிக துரிதமாக ஒருங்கிணைப்புடன் செயல்படுவது மிக முக்கியம். நோயாளி மருத்துவமனைக்கு வரும் முன்பே அந்நபருக்கு தேவையான முதலுதவி சிகிச்சையை வழங்குவது அவசியம்.நிகழ்நேர கண்காணிப்பு, மருத்துவ நிபுணத்துவம் மற்றும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் செயல்படும் இதுபோன்ற முன்னெடுப்புகள் ஒட்டுமொத்த அவசர சிகிச்சை அமைப்பை வலுப்படுத்துவதோடு பொதுமக்களுக்கு மிகவும் நம்பகமான சேவையாக இருக்கும்,” என்று கூறினார்.
காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். மணிவண்ணன் செல்வராஜ் கூறுகையில், “அவசர சிகிச்சையில், ஆம்புலன்ஸ் பணியாளர்களும் மருத்துவமனை நிபுணர்களும் ஒருங்கிணைந்து விரைவாக செயல்படுவது நோயாளிகளின் உயிர்களைக் காக்க மிகவும் அவசியம்” என்றார்.
காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர்.அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “அவசர சிகிச்சை என்பது விரைவாகச் செயல்படுவது மட்டுமின்றி,அந்த நேரத்தில் எடுக்கப்படும் சரியான மருத்துவ முடிவுகளையும் பொறுத்தது.இந்த நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியால், மருத்துவமனைக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளையும் எங்களால் கண்காணிக்க முடிகிறது. தேவையான வழிகாட்டல்களை ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு உடனடியாக வழங்கி மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே நோயாளியின் உடல்நிலையைச் சீராக்க இது பெரிதும் உதவும்,” என்று தெரிவித்தார்.
‘காவேரி கேர்’ செயலியிலுள்ள ஒரே ஒரு ‘SOS’ பட்டனை அழுத்துவதன் மூலமும் இந்த 5G ஆம்புலன்ஸ் சேவையைப் பெறலாம். இதை அழுத்தியதும், மருத்துவமனைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனடியாக அழைப்பு வரும். மேலும், 24/7 வீடியோ அழைப்பின் மூலம் மருத்துவரிடம் தொடர்பு கொண்டு பேசி, ஆம்புலன்ஸ் வரும் வரை நோயாளிகளுக்குத் தேவையான முதலுதவி ஆலோசனைகளைப் பெற்று அவற்றைச் செயல்படுத்தலாம்.
இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பெற 044 4000 6000 என்ற 24×7 அவசர உதவி எண்ணையோ அல்லது ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் கிடைக்கும் ‘காவேரி கேர்’ செயலியையோ தொடர்பு கொள்ளலாம்.
-ஷைலஜா, ஹெல்த் அண்ட் பியூட்டி.

