
ஆண்களுக்கு மட்டுமே இருக்கக்கூடியது புரோஸ்டேட் சுரப்பி.40,50 வயதுக்குப் பிறகு அதில் நோய் பாதிப்புகள் ஏற்படலாம்.
புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, சென்னையில் இயங்கிவரும், ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூராலஜி (AINU),அதிக ஆபத்து வாய்ந்த வயதுப்பிரிவைச் சேர்ந்த ஆண்களை, அறிகுறிகள் தீவிரமாகும்வரை காத்திராமல், புரோஸ்டேட் ஆரோக்கியம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்து அதிக கவனம் செலுத்தி, உரிய நேரத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறுவலியுறுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்… ஏ.ஐ.என்.யு. மருத்துவமனையின் தலைமை யூரோ ஆன்காலஜிஸ்ட், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ரோபோட்டிக் சர்ஜன்,நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண்குமார் பேசினார். “சிறுநீர்ப்பையின் கீழே வால்நட் கொட்டை அளவுள்ள சுரப்பிகளையே புரோஸ்டேட் சுரப்பிகள் என அழைக்கிறோம். இவை ஆண்களுக்கு மட்டுமே காணப்படுபவை. ஆண்களின் இந்திரியத் திரவத்தில் காணப்படும் பெரும்பான்மை அளவு திரவத்திற்கு இதன் சுரப்பே காரணமாகிறது. டெஸ்ட்டோஸ்டீரான் எனும் ஆண்களுக்கான நாளமில்லாச் சுரப்பு காரணமாக புரோஸ்டேட் சுரப்பி மெல்லப் பெருக்க ஆரம்பிக்கிறது. இப்பெருக்கத்தின் காரணமாக இவை சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்த்தாரைக்குச் செல்லும் சிறுநீர் ஓட்டத்தைத் தடைசெய்வதால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படலாம். முழு அடைப்பு ஏற்படும்போது கடும் வலி ஏற்படலாம்.
இவை தவிர இரவு நேரம் அடிக்கடி சிறுநீர் கழிதல்,சிறுநீர் கழித்த பிறகும் சிறுநீர் வடிதல்,10 முதல் 15 நிமிடங்களுக்குள் மீண்டும் சிறுநீர் கழிதல் போன்றவை ஏற்படலாம்.
மருத்துவர்கள் பழைய அம்பாசிடர் காரை உதாரணமாக சொல்வார்கள். காரை ஸ்டார்ட் செய்யும்போது, இரண்டு,மூன்று முறை லேசாக சத்தம் வரும். குலுங்கி குலுங்கி வேகத்தை அதிகரிக்கும். இதேபோன்றுதான் சிறுநீர் கழிப்பதிலும் ஒரு சிலருக்கு சின்னச் சின்ன தடைகள் இருக்கலாம்.அதை அலட்சியம் செய்யக்கூடாது.
புரோஸ்டேட் சுரபியில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் உண்டு. அதற்கான அறிகுறிகள் உடனே தெரியாது.40 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
புரோஸ்டேட் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக புதிய விழிப்புணர்வு பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனை
முன்கூட்டிய பரிசோதனை மற்றும் விழிப்புணர்வுக்குஆதரவாக, செப்டம்பர் 24 முதல் 30, 2026 வரை இலவச புரோஸ்டேட் ஆரோக்கிய பரிசோதனை முகாமை AINU நடத்துகிறது.
இலவச பரிசோதனையில் அடங்குபவை:
*PSA பரிசோதனை.
*யூரோஃப்ளோமெட்ரி(Uroflowmetry).
*அல்ட்ராசவுண்ட்.
*CUE (முழுமையான சிறுநீர்பரிசோதனை).
*மருத்துவர் ஆலோசனை.
அறிகுறிகள் எதுவும் வருவதற்கு முன்பாகவே, பரிசோதனை செய்துகொண்டால், நோய் வரும் முன் அடையாளம் கண்டு முறையான சிகிச்சை பெற முடியும் ” என்றார் டாக்டர் அருண் குமார்.
நிகழ்ச்சியில் நடிகரும்,ஹார்ட் பீட் இணையதள வெப்சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் கார்த்திக்குமார் கலந்து கொண்டு,மருத்துவ விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தகவல் தொடர்புக்கு:
AINU Hospital, 12/21,டாக்டர் திருமூர்த்தி நகர் பிரதான சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை-600 034, 044-6965 6767.
-பவித்ரன், ஹெல்த் அண்ட் பியூட்டி.

