
டாக்டர் ச.மருதுதுரை,
முன்னாள் முதல்வர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி.
இரு மரண குறிப்புகள்:
கொரோனா முதல் அலையின்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்க பணிக்கப்பட்ட நாட்களில் நிகழ்ந்த இரு மரணக் குறிப்புகளை பகிர்கிறேன். கொரோனா மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் என அரசு முனைப்போடு செயல்பட,கவனம் பெறாமல் போன பிற மரணங்கள் சமீப காலத்திய மருத்துவ நகை முரண்.கிட்டத்தட்ட மற்ற அனைத்து மருத்துவ சேவைகளுமே மூடப்பட்டிருந்த சூழல்.அறுவை அரங்குகள் பூட்டப்பட்டிருந்ததும், கேத் லேப் இயங்காமலிருந்ததும் கொரோனா முதல் அலை காலத்தில் இவையெல்லாம் ஏன் அப்படியொரு ‘ஓவர் டைம்’ வேலை பார்த்தன என்ற கேள்வியை மக்கள் மனங்கள் எழுப்பாமலில்லை.
அவசர மருத்துவ சேவைகள் தொடர்ந்து இயங்கியபோதும் சில எமர்ஜென்சிகளுக்கான மருத்துவ இலக்கணங்கள் திருத்தியமைக்கப்பட்ட வரலாறும் உண்டு. இலக்கப்பிழை வந்துவிடக்கூடாது என்ற அதி எச்சரிக்கை உணர்வின் பக்க விளைவு, இந்த இலக்கணப்பிழைகள் என்பது கோர சமரசம். ஒரு எழுதப்படாத விதி இருந்தது. “…யாரும் கொரோனாவால் சாகக்கூடாது”.
இந்த பின்னணியில் அனைத்து மருத்துவ பணியாளர்களும், உட்பிரிவு படுக்கைகளும் கொரோனாவிற்கென திருப்பிவிடப்பட்ட சூழலில் அவசர மருத்துவ பிரிவில் சேர்க்கப்பட்ட சேக் தாவூது,வயது 17/ஆ என்ற நோயாளி மற்றும் 35 வயது நிரம்பிய காவல் உதவி ஆய்வாளர் திரு.மூர்த்தியின் நோயாளர் பதிவேடுகள், இன்றைய முதன்மை உயிர்க்கொல்லி காரணியை நமக்கு அடையாளம் காட்டக் கூடியவை. ஆம்,இருவருமே தற்கொலை செய்து கொள்ளவேண்டி விஷம் அருந்தியவர்கள்.
அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக தேர்ந்தெடுத்தது பெட்டிக்கடை யெங்கும் அட்டை அட்டையாய் தொங்கும் வெகு எளிதில் கிடைக்கும் எலிப் பசை(Rat killer paste)ஆகும். ரசீது இல்லாமல் 30 ரூபாய்க்கு ஒன்று என பட்டிதொட்டியெங்கும் விரிக்கப்பட்டிருக்கும் விநியோக வலையில் எலிகள் ஒழிக்கப்படுகின்றனவா என்பது தெரியாது.நிச்சயம் மனிதர்கள் அழிக்கப்படு கிறார்கள்.கொத்து கொத்தாக இளைஞர்களும் இளைஞிகளும் எலிப்பசைக்கு பலியாவது இன்றைய மிகப்பெரிய சோகத்தொடர். எப்படி இத்தனை ஆபத்தான விஷம் இவ்வளவு எளிதில் கை நீட்டிய இடமெல்லாம் கிடைக்கிறது என்ற கேள்வி உரக்க எழாமலிருப்பது ஒருவகை சமுதாய துயரம்.

தஞ்சாவூர் துயரம்
ஆண்டுக்கு 1,400 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே எலிப் பசை சாப்பிட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகின்றனர்.20 சதவீதம் பேர் எவ்வித சிகிச்சைக்கும் பலனின்றி இறந்து போகிறார்கள்.
ஒருநாள் காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொலைபேசியில் அழைத்து சொன்ன போதுதான் திரு.மூர்த்தி விபரம் தெரிந்தது.
“நல்ல எஸ்.ஐ. டாக்டர்.Ratol paste சாப்பிட்டு மெடிக்கல்ல அட்மிஷன்ல இருக்காரு. பாத்துக்குங்க சார். நான் அவர பாக்க வரேன்” என்றார். கொரோனா அமளிக்கு நடுவே பாய்சன் வார்டுக்கு எஸ்.பி வர்றாரா ? சரி வரட்டும், பார்த்துக் கொள்வோம் என்று சரி சொல்லிவிட்டு நோயாளர் அறிக்கையினை வாங்கி புரட்டினேன். இரண்டு ட்யூப் எலிப் பசை வாங்கி எறும்புக்கு கூட மிச்சம் வைக்காமல் மொத்தத்தையும் விழுங்கியிருக்கிறார்.ஆக,தீர்மானம் செய்த முடிவு. காவல் கண்காணிப்பாளர் வந்ததும் அவரோடு நோயாளி படுக்கையருகே சென்றேன்.
வணக்கம் தெரிவித்தார். நன்றி சொன்னார். ஏன் இப்படி செஞ்சீங்க என்றபோது முகத்தை திருப்பிக் கொண்டார். கண்காணிப்பாளரிடம் தன் மனைவிக்கு வந்து சேரவேண்டிய பணப் பலன்கள் குறித்த உறுதிமொழியை மட்டும் வாங்கிக் கொண்டார்.சுற்றி நின்றிருந்த எங்களை அவர் விருப்பு வெறுப்பு ஏதுமின்றி கேள்விகளின்றி, பதற்றமின்றி எதிர்கொண்ட விதத்தை நான் எப்படி வார்த்தைப் படுத்துவது? முடிவு செய்து நிர்ணயித்துவிட்ட இறுதிக் கணத்துக்காக காத்திருக்கும் அந்த மனிதன் முன் நாங்கள் என்ன வகை நாடகத்தை நிகழ்த்துவது?
காருக்கு திரும்புகையில் கண்காணிப்பாளரிடம் சொன்னேன் “இவருக்கு மன நல ஆலோசனைகள் முன்னரே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.Now it is beyond redemption. Matter of time before his end.Very sorry”.
“இதுக்கு ஒன்னுமே பண்ண முடியாதா டாக்டர்” என்றார். “இவ்வளவு எளிதில் கிடைக்கும் இந்த கொடிய விஷத்தை தடை செய்யுறதுக்கு கொஞ்சம் முயற்சி பண்ணுங்க சார்” என்றேன்.
அடுத்த இரண்டு நாட்களில் மூர்த்தி காமாலை,ஈரல் செயலிழப்பு கோமா என சீக்கிரமே எரிந்து போனார்.
சேக் தாவூது சொன்னதை கேட்போமா? “பைக் எடுத்ததுக்கு வாப்பா திட்டுனாக. அதான் எலி பேஸ்ட் வாங்கி சாப்புட்டேன்”.
“இது ரொம்ப ஆபத்தானதுன்னு உனக்கு தெரியாதா”
“ஈஸியா கிடைக்குது. கோபமா வந்துச்சு. வாங்கி சாப்புட்டேன்”.
“சாப்பிட்ட உடனேயே ஏன் ஆஸ்பத்திரிக்கு வரல?”
“நான் யாருக்கிட்டயும் சொல்லவேயில்ல. கோவத்துல சாப்பிடவுமில்ல. வயித்துவலி வந்த பிறவுதான் அம்மாட்ட சொன்னேன்”.
ஈரல் பாதித்து மஞ்சள் காமாலை கூடிக்கொண்டே வரும் கட்டத்தில் நிகழ்ந்த உரையாடல். இன்னும் ஓரிரு நாளில் அவன் நினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று விடுவான். நினைவு திரும்பாமலே அவன் இறந்துவிடுவான் என்பதை அன்றாடம் பார்த்து பார்த்து சோர்ந்து போன என்னைப் போன்ற மருத்துவர்களால் எப்படி அந்த பெற்றோருக்கு நம்பிக்கையளிக்க பேச இயலும் ? எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர் என்ற அவர்களின் பரிதாப கையேந்தலின் முன் எப்படி உண்மை. உரைப்பேன் ? எப்படி நம்பிக்கை வார்த்தை சொல்வேன்? ஒரு கோர மரணக் கொட்டகையின் வாயிற் காவலனைப் போன்ற பணியிடை சேக்தாவூதிடம் உண்மையை மறைத்து பேச்சு கொடுக்கிறேன்…
“சாகணும்னு முடிவு செய்யுறது தப்பு இல்லியா?”
“தப்புதான் சார். என்னை காப்பாத்திடுங்க. நான் உயிர் பிழைக்கணும். இப்ப எனக்கு உயிர் வாழ ஆசையாயிருக்கு, அம்மா அழுவுறத பாக்க கஷ்டமாயிருக்கு. .அப்பா அழுது… அழுது சாஞ்சிட்டாரு. எப்படியாவது என்னை காப்பாத்திடுங்க சார்…ப்ளீஸ்.”
செய்ய வேண்டிய மருத்துவ உதவி யாவற்றையும் ஒருவகை “பகவத் கீதை மனோநிலை”யில் செய்துவிட்டு வீடு திரும்பிவிட்டேன். நள்ளிரவு வார்டிலிருந்து பணியிலிருக்கும் பட்டமேற்படிப்பு மாணவர் தொலைபேசியில் அழைத்தார்.சேக் தாவூது நினைவு தவறி செயற்கை சுவாச கருவியில் இணைக்கப்பட்ட தகவலை சொன்னார். மீண்டும் தூங்க வெகு நேரம் பிடித்தது.
அடுத்தநாள் காலை வார்டில் நுழைந்த போது என்னைக் கண்டதும் கூப்பிய கைகளுடன் தரையில் விழுந்து கதறிய அந்த ஏழைத் தாயிடம் ஆறுதலாய் என் கைகளை பற்றிக் கொள்ள அனுமதிப்பதை தாண்டி என்னால் ஏதும் செய்வதற்கு இயலாதவனாகவே அவர் முன் நிற்கிறேன். எதார்த்தத்தை புரிந்து கொண்ட அவரது கணவரின் பார்வையில் என்னைக் குறித்த கோபமோ ஏளனமோ இல்லாதிருந்தது அவரது பெருந்தன்மை.
ஆனால், அவர் கண்களில் தென்பட்ட வெறுமையை இன்றும் என் நினைவிலிருந்து அகற்ற இயலவில்லை. பரிசோதனை முடிவுகள் பரிகசிக்க,மருந்து தரவுகள் எங்கள் பேனாக்கள் முன் மௌனிக்க, செயற்கை சுவாசக் கருவியின் இயந்திர ஏற்ற இறக்கத்தில் ஊசலாடியபடி அந்த பெற்றோரின் நம்பிக்கையும் என் இரக்க உணர்வும். வார்டின் ஒதுக்குப் புறத்திற்கு எங்கள் மருத்துவ அணியை அழைத்துக் கொண்டு போய் “வென்டிலேட்டர எப்ப டிஸ்கனெக்ட் பண்றதுன்னு பாத்துக்குங்க” என்றேன். அப்போது அந்த சுவற்றின் ஓரமாக எலி ஒன்று விரைந்து ஓடி பொந்து ஒன்றில் மறைந்தது.பழம் தின்று கொட்டை போட்ட அந்த சுண்டெலி என்னைப் பார்த்து சிரித்திருக்குமோ?
நன்றி: காக்கைச் சிறகினிலே. இலக்கிய மாத இதழ்.

