மனம் அமைதியாக இருந்தால்… வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும். பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை கொண்டாட்டமாக இல்லை.அதற்கு என்ன காரணம்?

நோய்களின் ஆதாரம் …அழுத்தி வைக்கப்பட்ட கசப்பான உணர்வுகள்.நமக்கு ஒவ்வாத, தேவையில்லாத, நன்மை தராத அனைத்து எதிர்மறை உணர்வுகளையும் நமக்கே தெரியாமல் தேக்கி வைத்துள்ளோம். அவை ஆழ்மனதில் பத்திரமாகச் சேமிக்கப்பட்டு காலம் காலமாக நம்மை ஆட்டிப்படைக்கும்.

அதன் இயற்பியல் உருமாற்றம்தான் உடல் வழியாகத் தோன்றும் உபாதைகள்.நல்ல உணர்வுகளை எளிதில் கடந்து விடுகிறோம். ஆனால்,மோசமான உணர்வுகளை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறோம். பல நேரம் அவற்றைப் பதப்படுத்தாமல், வெளிக்காட்டாமல் மென்று விழுங்கி உள்ளேயே பதுக்கிவிடுகிறோம்.அவற்றைக் கேடயங்கள்போல் அவ்வப்போது எடுத்துப் பார்த்துப் பெருமைப்படுவோம் என்பதுதான் விநோதம்.

இப்படி அவமானம், துக்கம்,பொறாமை, துரோகம்,வஞ்சம், ஆற்றாமை,கோபம், குற்றஉணர்வு என ஏதோ ஒன்றை (அல்லது கூட்டு உணர்வுகளை) கேடயங்கள்போல் சேமித்து வைத்துக்கொள்கிறோம்.காலம் கடந்தாலும், மனிதர்கள் மறைந்தாலும், சூழல் மாறினாலும் இந்தக் காயங்கள் ஆறாமல் உள்ளேயே இருக்கும்.அதன் வலிமையும் வீரியமும் உங்களுக்குத் தெரியாது. இவைதான் வார்க்கப்பட்ட இறுகிய எண்ணங்களை உருவாக்குகின்றன. நடத்தையை மாற்றும்.உடல் உறுதியைக் கெடுக்கும்.நோய் வரக் காரணமாகும்.

அதனால் இதைச் சரிசெய்யாமல் உங்களால் மன மாற்றத்தையோ உடல் நலத்தையோ பேண முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? பாத்திரத்தில் கெட்டுப் போன உணவு இருந்தால் என்ன செய்வீர்கள்?

அதை வழித்து வெளியே போட்டுவிட்டு, பாத்திரத்தைச் சுத்தமாகத் துலக்கி கவிழ்த்து வைப்பீர்கள் அல்லவா? அதையேதான் செய்ய வேண்டும், உங்கள் உடலிலும் செய்ய வேண்டும்.

நேற்றைய உணவுக் கழிவை வெளியேற்றிய பின்னர்தான், இன்றைய உணவை எடுத்துக்கொள்கிறோம். மனக்கழிவுகளுக்கும் இதே முறைதான் தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக உள்ளே வைத்துக் கெட்டுப்போன உணர்வுகளை வெளியேற்ற வேண்டும்.பிறகு ஆரோக்கியமான உணர்வுகள் உட்புக அங்கு இடம் கொடுக்க வேண்டும்.உள்ளே ஆண்டுக்கணக்காக புழுங்கி,அழுகிக் கிடக்கும் அடைபட்ட உணர்வுகளை வெளியேற்ற வேண்டும்.

இதைத்தான் ‘Release Technique’ என்று சொல்வார்கள். லெஸ்டர் லெவன்சென் உருவாக்கிய இந்த சிகிச்சை முறையில் உள்ளே மண்டிக்கிடக்கும் உணர்வுகளை வெளியேற்றுதல்தான் நோய் குணமாகச் செய்யும் சிகிச்சை.

உணர்வுகளும் எண்ணங்களும்தான் உடலைப் பாதிக்கின்றன என்பது உண்மையானால், அந்த உணர்வுகளையும் எண்ணங்களையும் மாற்றினால் உடல்நிலை மாறும்தானே?உள்ளே சிக்கிக்கொண்டு உபாதை தரும் உணர்வுகளை வெளியேற்றி விடுதலை பெறுதல் அவசியம் என்று சொல்கிறது இந்த வழிமுறை.

உலகம் ரொம்ப பெரிது.நம்மோடு பழகும்,உறவாடும் மனிதர்களை அன்பாக நடத்தி வாழ்க்கையை கொண்டாடி மகிழ்வோம். ஆரோக்கியமாக வாழ்வோம்!.