வாழ்க்கை என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட ஒரு அழகான பயணம், அனுபவங்களின் தொகுப்பு ஆகும். அறிவியல் பூர்வமாக இது ஒரு உயிரினத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டைக் குறிக்கிறது. ஆனால் தத்துவ ரீதியாக,வாழ்க்கை என்பது நாம் வாழும் விதத்திலும்,நாம் உருவாக்கும் அர்த்தத்திலும் தான் உள்ளது.

வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. இதில் இன்பம்,துன்பம், வெற்றி,தோல்வி, ஏமாற்றம்,மகிழ்ச்சி என அனைத்தும் கலந்திருக்கும். இந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு கடப்பதே வாழ்க்கை.

மனிதன் தனித்து வாழும் இயல்புடையவன் அல்ல.பிறரிடம் அன்பு காட்டுவதும், அன்பைப் பெறுவதும், மற்றவர்களுக்கு உதவுவதும் வாழ்க்கைக்கு மிக ஆழமான அர்த்தத்தைத் தருகின்றன.

தினசரி பலரையும் சந்தித்து பேசுகிறேன். வேலை நேரம் போக மிச்ச நேரத்தில் என்ன செய்வீங்க? என்ற கேள்வியை கேட்டால், பெரும்பாலும் எங்கே சார் நேரம் இருக்கு…என்ற சலிப்பான பதிலைத்தான் கேட்க முடிகிறது.

வேலை மற்றும் வேலைக்கான பயணம் என்பது 10 முதல் 12 மணி நேரத்தைச் சாப்பிட்டுவிடுகிறது.இன்று அதுவே இயல்பு வாழ்க்கையாகி விட்டது.பலர் வீட்டுக்கு வந்தும் அலுவலகத்தைப் பற்றிய கதைதான் பேசுவார்கள். அல்லது அலுவலக ஆட்களுடன் பேசுவார்கள்.
தூங்கத்தான் வீட்டுக்கே வர்றோம்… என்பார்கள். வேலையே போதையாக மாறிவிடுகிறது. இது ஆபத்தான வாழ்வியல் முறை.

வாழ்வைக் காதலி!

வேலையின் கூர்மையை அதிகரிக்க, உளைச்சலைக் குறைக்க, வேலையை மகிழ்வோடு செய்ய, வேலையைத் தவிர மற்ற வேலைகளையும் பாருங்கள். வாழ்க்கை ரம்மியமானது. குழந்தைகளைக் கொஞ்ச, புத்தகங்கள் படிக்க, தோட்டம் வளர்க்க, செல்லப் பிராணி வளர்க்க, நிலா பார்த்துக் கவிதை யோசிக்க,மலை ஏற, உறவினர் வீடு செல்ல, நட்பு வட்டத்துடன் உறவு கொள்ள, எளியோருக்கு உதவ,இசையை ரசிக்க, வாழ்க்கையை பற்றி யோசிக்க நேரம் செலவிடுங்கள்.

வாழ்க்கையைக் காதலியுங்கள். அதன் பகுதியான வேலையை அதிகமாகக் காதலிப்பீர்கள்!