புத்தக அறிமுகம்

ஜிம்முக்கு வாங்க! ஆசிரியர் :ராஜராஜன் ஆர் ஜே.
வெளியீடு: தொடர்புக்கு 9940682870(ஈ.மெயில்:contact@rajarajanrj.com)
பக்கங்கள் :98
விலை ரூபாய்:100

ஜிம்முக்கு போங்க என்று சொல்லாமல், ஜிம்முக்கு வாங்க என்று சொல்வதில் உள்ள அறிவு நேர்மையை புரிந்து கொள்ளலாம்.பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் ஆலோசனை வழங்கலாம். ஜிம்முக்கு சென்று,பயிற்சி செய்து,தானே பயனடைந்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து இருப்பதை மற்றவர்களும் அடைய வேண்டும் என்ற சமூக அக்கறை நூல் ஆசிரியர் இருக்கிறது.

உடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்யும் தினசரி பயிற்சியாக அமைய வேண்டும் என்று வலியுறுத்தி எழுதியிருக்கும் நூலாசிரியருக்கு நமது இதழ் சார்பில் பாராட்டி வாழ்த்துகிறேன்.

இந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.
-ஆசிரியர்.

உணவுக் கட்டுப்பாடு- உடற்பயிற்சிஇவை இரண்டுமே நமது உடல் நலத்திற்கு இன்றியமையாதவை. நடைப்பயிற்சியில் இருந்து ஓட்ட பயிற்சி, யோகா,பேட்மிட்டன் என பலவற்றுக்கும் முயற்சித்தேன். எல்லாவற்றிற்குமான அடிப்படை ஒன்றாக இருந்ததை உணர்ந்தேன். அதாவது ஒவ்வொரு நாளும் எவ்வளவு கலோரி உட்கொள்கிறோம், எவ்வளவு கலோரி செலவு செய்கிறோம் என்கிற கணக்கை பொறுத்துதான் நம் உடல் எடையை குறைப்பதும் கூட்டுவதும் என்கிற எளிய கணக்கு எனக்கு புரிந்தது.

நடைப்பயிற்சியில் நன்கு பயிற்சி பெற்ற பிறகு ஜிம்முக்கான தேவையை உணர்ந்தேன். ஜிம்மில் சேர்ந்து படிப்படியாக பயிற்சியை அதிகப்படுத்தி இன்று புத்தகம் எழுதும் அளவுக்கு பலன் அடைந்திருக்கிறேன்.

ஜிம்முக்கு போனதால் என்ன கிடைத்தது…

1.ஒரு ஒழுக்கத்தை கட்டமைத்து இருக்கிறேன்.

2. நம்மால் முடியாத விஷயங்களையும் முயற்சித்தால் முடியும் என்பதை கண்டிருக்கிறேன்.

3. மனத்தடையை நீக்கினால் பலவற்றை சாதிக்கலாம் என்று உணர்ந்திருக்கிறேன்.

4.என் வாழ்வின் மற்ற விஷயங்களை சாதிப்பதற்கு அடிப்படை நல்ல உடல் நலன், அதை தருவது ஜிம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

5. என்னை விட இளம் வயதினர் ஜிம்மிற்கு வருவதைக் கண்டு, நாமும் முன்னரே இதை ஆரம்பித்து இருக்கலாமே என்று யோசித்து இருக்கிறேன்.

6.உடற்பயிற்சி என்பதை அன்றாட செயல்பாடாக மாற்றி இருக்கிறேன்.

7.ஜிம்மிற்கு போனால் மட்டும் போதாது,ஜிம்மை தாண்டியும் நம் உடல் நலனை கவனித்துக்கொள்ள வேண்டும்.7 மணி நேரம் நிச்சயம் தூங்கவேண்டும். உணவு கட்டுப்பாடு என்பது உடல் நலத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்திருக்கிறேன்.

8. ஜிம்மில் கற்றுக்கொண்ட உடற்பயிற்சிகளை வைத்து வீட்டிலேயே நாள்தோறும் செய்வதற்கான 50 க்கும் மேற்பட்ட உடற்பயிற்சிகளை குறித்துவைத்து செய்து வருகிறேன் .

9. இதற்கு முன் ஸ்கிப்பிங் தெரியாது. இப்போது கற்று இருக்கிறேன்.

10.ஒரு கிலோ மீட்டர் வரை ஓடமுடியாமல் இருந்தேன். இப்போது நான்கு கிலோமீட்டர் வரை ஓடுவதற்கான உடல் உறுதியை பெற்று இருக்கிறேன்.

11.வளர்ச்சி மனநிலை என்று சொல்லப்படும் “Growth Mindset” யை கட்டமைத்து என்னை நானே அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதை உணர்கிறேன்.

12.ஜிம்மிற்கு செல்வதால் ஏற்படும் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கை என் அலுவல் வேலையிலும், வீட்டிலும் எதிரொலிப்பதை உணர்கிறேன்.முன்பை விட சிறப்பாக செயல்படுவதாக உணர்கிறேன்.

இது எனக்கான மாற்றங்கள். உங்களுக்கும் இதே போன்ற நீண்ட கால பலன்கள் நிறைய ஏற்படும் என்பதை 100% என்னால் உறுதியாக கூறமுடியும்.

ஜிம் என்பது உடற்பயிற்சிக்கு மட்டுமான இடம் அல்ல;
அது நம் வாழ்க்கையை சிறப்பாக வடிவமைக்க உதவும் ஒரு அற்புதமான இடம்.

“ஜிம் உடற்பயிற்சி கடுமையானதா?” என்பதற்கு பதில் இல்லை என்பதே. நீங்கள் நாள்தோறும் ஜிம்மிற்கு செல்வதை பழக்கமாக்கிக்கொண்டால், இன்று நீங்கள் எதையெல்லாம் முடியாது என்று நினைக்கிறீர்களோ, இன்று நீங்கள் எதையெல்லாம் கடினம் என்று நினைக்கிறீர்களோ – அவை எல்லாமே ஓராண்டில் செய்து முடித்து இருப்பீர்கள். செய்து முடிக்கும் போது, என்னையும் நினைப்பீர்கள்.

உங்களுக்கு உடல்நலத்தை பேணும் நபர்கள் நண்பர்களாக இருந்தால், அவர்களுடன் இணைந்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு உடல்நலத்தை பேணும் நபர்களை தெரிந்தால், அவர்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள்.

உங்களுக்கு உடல்நலத்தை எப்படி பேணுவது என்ற தெளிவு இல்லாமல் இருந்தால், உங்கள் நண்பர் செய்வதை பார்த்து அதையே நீங்களும் செய்ய ஆரம்பியுங்கள். அல்லது, அவரிடம் பேசி, என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

வாய்ப்பிருந்தால், அவர் செல்லும் ஜிம்மிலேயே நீங்களும் சேர்ந்துக்கொள்ளுங்கள்.

உடல் நலன் குறித்து அக்கறை இருக்கும் நண்பர்களை இணைத்து ஒரு வாட்சப் குழுவை ஆரம்பியுங்கள்.அப்படி ஏதேனும் குழுக்கள் இருந்தால், அதில் இணைந்துக்கொள்ளுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் ஜிம் சேர்ந்தால் நலம். அல்லது, நண்பர்களை ஜிம்மில் உருவாக்கிக்கொண்டாலும் நலம்.

எதுவாக இருப்பினும், ஒத்த சிந்தனை உடையவர்களை கூட வைத்துக்கொண்டால் -உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

ஜிம் சேர்ந்த பிறகு உங்களது உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றத்தை கண்ட பிறகு, உங்களது தன்னம்பிக்கை உயர்ந்த பிறகு, அதை மற்றவர்களிடமும் பரப்புங்கள்.

நாம் நமக்கு தெரிந்ததை, நாம் கற்றுக்கொண்டதை பிறருக்கு சொல்லிக்கொடுக்கும் போது தான் நாம் அடுத்தகட்டத்துக்கு செல்கிறோம் என்று பொருள்.உங்களைப் போல மேலும் சிலரை நீங்களே உருவாக்க முயலுங்கள்.

குறிப்பாக உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் உடற்பயிற்சியால் உங்கள் வாழ்வில் நிகழ்ந்த மாற்றத்தை தொடர்ச்சியாக பேசுங்கள். வாய்ப்பிருந்தால், சமூக வலைதளங்களில் பதியுங்கள்.

உடற்பயிற்சியின் அருமையை நீங்கள் உணர ஆரம்பிக்கும் போதே, உணவின் அருமையையும் நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். சமையல் என்கிற ஒன்று ஒரு அடிப்படையான உயிர்வாழும் திறன். அதை நாம் கற்றுக்கொண்டால், பல பிரச்சனைகளை தீர்க்கமுடியும்.நாம் என்ன உணவு உட்கொள்ள வேண்டும்,எப்போது உட்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்போது செய்துகொள்ளலாம்.

இன்னொன்று, சமையல் கற்றுக்கொண்டால், எந்த ஊரிலும்,எந்த நிலையிலும் நம்மால் பிழைத்துக்கொள்ள முடியும்.

நீங்கள் ஃபிட்டாக இருக்கும்போது உங்களால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை பொங்கி வரும்.

நல்ல உடல் நலத்தை கட்டமையுங்கள், சிறப்பான வாழ்வை தொடங்குங்கள்!