
பிறர் மனதை அறியும் வித்தை தெரிந்தால் பல உறவுகள் பலப்படும். வீணான விவாதங்கள் தவிர்க்கப்படும்.சண்டை சச்சரவுகள் இருக்காது.நிறைய நண்பர்கள் உறவினர்கள் கிடைப்பார்கள். மனதில் அமைதி நிரந்தரம்.அதற்கு எம்பதி(empathy) எனும் மிகச் சக்திவாய்ந்த கருவி பயன்படும். எதிராளியின் மனநிலையில் தன்னை நிறுத்தி அவரின் கண்ணோட்டத்தை அறிவது என்பது அவ்வளவு சுலபமாக வருவதல்ல.
எதிராளியின் மனநிலையை அறிவுப்பூர்வமாக மட்டும் பார்க்காமல் உணர்வுப்பூர்வமாகவும் கூர்மையாகப் புரிந்துகொள்ள உதவுவதே ‘எம்பதி’. பிறர் மனதை உணரும் இந்தத் திறன் பற்றிய ஆராய்ச்சிகள் இன்று உளவியலில் கொட்டிக்கிடக்கின்றன.எல்லா வெற்றியாளர்களும் இந்தத் திறன் கொண்டவர்களே என்று அடித்துக் கூறுகின்றன பல சுய உதவி நூல்கள்.
அமெரிக்காவில் நடந்த ஒரு சுவாரசியமான மருத்துவத் துறை ஆய்வு இதை உறுதிசெய்கிறது. மருத்துவர்கள் நோயாளிகளிடம் பேசும் உரையாடல்களை வைத்து எம்பதியைக் கணக்கிடுகிறார்கள். குறைந்த எம்பதி கொண்ட மருத்துவர்கள் மீது நோயாளிகளின் புகார்கள்,சட்ட வழக்குகள் அதிகம் இருப்பது அதில் தெரியவருகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் நோயைக் குணப்படுத்தும் திறனில் இரண்டு விதமான மருத்துவர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால், நோயாளியின் மனம் அறிந்து உணர்வால் ஒன்றுபடாத மருத்துவர்கள் மீதுதான் அதிக வழக்குகள் உள்ளன.
எம்பதி அதிகமுள்ள டாக்டர்கள் என்ன செய்கிறார்கள்? கண்ணைப் பார்த்துப் பேசுகிறார்கள். நோயாளி பேசும்போது கூர்ந்து கவனிக்கிறார்கள். அவர்களைத் தவிர வேறெங்கும் கவனத்தைச் சிதறடிப்பதில்லை. சொல்வதைப் புரிந்துகொண்டு, அதற்குப் பதில் அளிக்கிறார்கள், எவ்வளவு அற்பமானது என்றாலும்.
‘நான் இருக்கிறேன்’ என்று ஆறுதல் வார்த்தை கூறுகிறார்கள். சொன்ன பிரச்சினை, சொல்லாத பிரச்சினை இரண்டையும் புரிந்துகொள்கிறார்கள்.முக்கியமாகப் புன்னகைக்கிறார்கள்! எளிய விஷயங்கள்தாம். ஆனால்,இதை இயல்பாகச் செய்வது அவசியம்.
எம்பதி கற்க உங்களுக்கு ஒரு சிறு வீட்டுப்பாடம் தருகிறேன்.இன்று உங்களிடம் சண்டை பிடிக்கும் ஆள் யாராக இருந்தாலும், உடனடியாகப் பதில் கொடுக்காமல், அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள்.
அவர்களின் பிரச்னை என்ன என்பதை யோசியுங்கள். அடிநாதமாக உள்ள விஷயம் பிடிபட்டால் அதை அவர்களிடமே கேளுங்களேன். குறிப்பாக,நீங்கள் அவர்கள் பக்க நியாயத்தை அறிய முயல்கிறீர்கள் என்பதைத் தெரிவியுங்கள். “இவ்வளவு சிம்பிளா?” என்று எண்ணாதீர்கள்.நாம் முட்டி முட்டி திறக்கப் போராடும் பல கதவுகளுக்குச் சின்னதாய் ஒரு சாவி இருக்கும்.தேடிப் பாருங்கள்!
-அன்புடன்
டாக்டர் ஜி.ராஜமோகன்.

