
காவேரி மருத்துவமனை குழுமம் சென்னை,ரேடியல் சாலையில் புதிதாக ‘மா காவேரி’ மருத்துவமனையை தொடங்கியுள்ளது.
மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் மா காவேரி மருத்துவமனையைத் திறந்து வைத்தார்(25.08.26).திறப்பு விழாவில் காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டாக்டர் எஸ்.சந்திரகுமார், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்,இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி. செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மா காவேரி மருத்துவமனை கர்ப்பிணிப் பெண்களுக்கு 24 மணி நேரமும் மகப்பேறு கால பராமரிப்பு மற்றும் இயல்பான மற்றும் அதிக இடர்வாய்ப்புள்ள கர்ப்ப நிலைகளில் சிறப்பு சிகிச்சை மேலாண்மை சேவைகளை வழங்குகிறது. கர்ப்பகாலம்,பிரசவ வலி மற்றும் குழந்தை பிறப்பு என அனைத்து காலகட்டங்களிலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆதரவளிக்க பிரத்யேக மருத்துவக் குழுக்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றன. தாய்மைப்பேறு காலம் முழுவதிலும் அன்னையருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் ஒருங்கிணைந்த ஆதரவை உறுதி செய்யும் வகையில், விரிவான பராமரிப்பை இம்மருத்துவமனை வழங்குகிறது.
டாக்டர் டி. செங்குட்டுவன் அவர்கள் கூறியதாவது… “பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத் தேவைகள் தனித்துவமானவை,தொடர்ந்து மாறக் கூடியவை.2024 ஆம் ஆண்டு முதல், திருச்சி காவேரி மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் மா காவேரி மருத்துவமனை பிரிவு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த பராமரிப்பு மாதிரியை உருவாக்கி செம்மைப்படுத்தியுள்ளோம். சென்னையில் உள்ள ரேடியல் சாலையில் மா காவேரி மருத்துவமனையைத் தொடங்கியிருப்பதன் மூலம்,சிறப்பு நிபுணத்துவம், மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் கனிவான பராமரிப்பு ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைத்து,இந்த மாதிரியை நாங்கள் சென்னை மாநகரில் செயல்படுத்தியிருக்கிறோம்.
24 மணி நேரமும் பணியாற்றும் அனுபவமிக்க சிறப்பு மருத்துவர்கள் குழுவுடன் நவீன தொழில்நுட்ப சாதனங்களும் இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளன. டீன்ஏஜ் வயது பிரிவினருக்கான ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்புச் சிகிச்சை உள்ளிட்ட பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிவரும் உடல்நலத் தேவைகளை இம்மருத்துவமனை திறம்பட பூர்த்தி செய்கிறது” என்றார்.
மகப்பேறு மற்றும் குழந்தை நல சேவைகளுடன், விரிவான பெண்ணோயியல் சிகிச்சை பராமரிப்பையும் மா காவேரி வழங்குகிறது. மாதவிடாய் தொடர்பான ஆரோக்கியம் முதல் மாதவிடாய் நிற்றல் மற்றும் பிற பெண்ணோயியல் பிரச்சனைகள் வரை பெண்களுக்கான பல்வேறு சிகிச்சைத் தேவைகளை மா காவேரி மருத்துவமனை பூர்த்தி செய்கிறது.
மேலும், ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார ஆலோசனைக்கான ஆலோசனை மையமும், மேமோகிராஃபி உள்ளிட்ட மார்பக ஆரோக்கியம் மற்றும் பெண் பிறப்புறுப்பு சார்ந்த புற்றுநோய்கள் தொடர்பான சிறப்புச் சேவைப் பிரிவும் இந்த மருத்துவமனையில் செயல்படுகின்றன.
குழந்தை இல்லாத பெண்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
-பவித்ரன், Health and beauty.

