மணத்தக்காளி கீரையை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். வீட்டிலேயே எளிதாகவும் வளர்க்கலாம். இதற்காக பரந்த நிலப்பரப்போ, அதிக அளவு தண்ணீரோ, உரமோ தேவையில்லை. இரண்டு அல்லது மூன்று தொட்டிகளே இதை வளர்ப்பதற்குப் போதுமானது.
மணத்தக்காளி கீரையை வாரம் இரண்டு முறை அனைவரும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தங்களுடைய விருப்பப்படி பொரியல், கீரை குழம்பு, மசியல், சூப் என விதவிதமாக சமைத்து உண்ணலாம்.

செடி வகையைச் சார்ந்த மணத்தக்காளிக் கீரையில் தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை ஏராளமாக உள்ளன. இவை தவிர நியாசின், ரிபோஃப்ளாவின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. இதனுடைய இலை மற்றும் பழங்களில் வைட்டமின்-சி அதிகம் காணப்படுகிறது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவுப்பொருளாக திகழ்கிற இக்கீரை, வாய்ப்புண், வயிற்றுப்புண் உட்பட பலவிதமான வயிறு தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்த வல்லது.

உடல் சூட்டைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. எனவே, அதிக அளவு உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். கட்டி, முகப்பரு, சரும எரிச்சல், சொரியாசிஸ் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களும் இதை சாப்பிடலாம்..
ரத்தசோகை மற்றும் பலவீனமான இதயம் உள்ளவர்கள் இதனுடைய காய்கள், இலைகளைத் தூள் செய்து 100 மில்லி லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, காலை மற்றும் இரவு நேரங்களில் (தூங்கப் போகும் முன்) சாறாக அருந்தி வர இப்பிரச்னைகள் சரி செய்யப்படும். தொண்டை கரகரப்பு, சளித்தொல்லை இருக்காது.

வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் 5 இலைகள் தினமும் மென்று சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். உடல் வீக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நீரிழிவு உள்பட கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இக்கீரை மிகவும் ஏற்ற உணவாகும்.
100 கிராம் மணத்தக்காளி கீரையில் நீர்ச்சத்து – 82.1 கிராம், கால்சியம் – 410 மில்லி கிராம், புரதம் – 5.9 கிராம், இரும்புச்சத்து – 20.5 கிராம், பாஸ்பரஸ் – 70 மில்லி கிராம், வைட்டமின் சி – 11 மில்லி கிராம், ரிபோஃப்ளேவின் – 59 மில்லி கிராம், நையாசின் – 0.9 கிராம், கலோரி – 68 என பலவிதமான சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.

மணத்தக்காளி கீரையைக் கொண்டு செய்யும் சில சமையல் குறிப்புகளை பார்ப்போம்..

மணத்தக்காளி கீரை மசியல்:

தேவையான பொருட்கள் :
மணத்தக்காளி கீரை -& ஒரு கட்டு
உடைத்த பச்சைப் பருப்பு &- ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் -& 2
பூண்டுப்பல் &- 8
சின்ன வெங்காயம் -& 50 கிராம்
தக்காளி -& சிறியது 1
உப்பு -& தேவைக்கு
தாளிக்க : நல்லெண்ணெய், கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம்.

செய்முறை :

கீரை சுத்தம் செய்து இலைகளை மட்டும் ஆய்ந்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும். தக்காளியை நறுக்கி கொள்ளவும். பச்சைப்பருப்பை நன்றாக கழுவி அடிகனமான ஒரு சட்டியில் போட்டு வேகுமளவு தண்ணீர் ஊற்றி துளி மஞ்சள்தூள், பெருங்காயம், ஓரிரு சொட்டுகள் நல்லெண்ணெய் விட்டு வேக விடவும். பருப்பு பாதி வெந்து வரும்போது பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி, 5 பூண்டு சேர்த்து வேகவிடவும். அடுத்து அதில் கீரையைப் போட்டு துளி உப்பு போட்டு மூடி போடாமல் வேக வைக்கவும். மூடினால் கீரையின் அழகான பச்சை நிறம் காணாமல் போய்விடும். இடையில் ஓரிரு முறை கிண்டி விடவும். இல்லையென்றால் அடியில் உள்ள கீரை குழைந்தும், மேலே உள்ளது வேகாமலும் இருக்கும். கீரை வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி மண் சட்டியில் போட்டு சூடாக இருக்கும் போதே கடைந்துவிடலாம்.
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு கடைசியில் பூண்டுப்பல்லை (பூண்டை கொரகொரப்பாக தட்டி கொள்ளவும்) போட்டு வதக்கிக் கீரை மசியலில் கொட்டி நன்றாக கிளறி இறக்கவும். சூப்பரான, சத்தான மணத்தக்காளி மசியல் ரெடி.

மணத்தக்காளி கீரை சூப்

தேவைப்படும் பொருட்கள்:
மணத்தக்காளி கீரை – 1/4 கப்
பூண்டு – 5 பல்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
வெங்காயம் -& சிறிதளவு
உப்பு -& தேவையான அளவு
தக்காளி – 1
தேங்காய்ப்பால் – 1/4 கப் (விரும்பினால்)
செய்முறை :
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதில் சீரகம், பூண்டு, மிளகு ஆகியவற்றைப் போட்டு வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன், வெங்காயம், தக்காளி, கீரையைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்னர், 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடாமல் 10 முதல் 15 நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் ஆற வைத்து குடிக்க சுவையாக இருக்கும்.

மணத்தக்காளி கீரை பொரியல்

தேவையான பொருட்கள்
மணத்தக்காளி கீரை &- 1 கட்டு
மஞ்சள் பொடி -& 2 ஸ்பூன்
பாசிப் பருப்பு -& 20 கிராம்
தேங்காய் – ரு மூடி
சீரகம் – லு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க: சின்ன வெங்காயம் – 3, கறிவேப்பிலை – 3 கீற்று, உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், கடுகு – ரு ஸ்பூன், மிளகாய் வற்றல் – 2, நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்.
செய்முறை:
மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து தண்டினை எடுத்து விடவும். பின்னர் அதனைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
நறுக்கிய கீரையை மஞ்சள் பொடி சேர்த்த தண்ணீரில் 2 நிமிடங்கள் மூழ்க வைக்கவும். பின்னர் கீரையைத் தனியே தண்ணீர் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடிய விடவும். ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பினை மூழ்குமளவு தண்ணீரில் போட்டு அடுப்பில் வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பிலிருந்து பருப்பினை இறக்கி மூடி தனியே வைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதனுடன் அலசிய கீரை, சீரகம், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
கீரை முக்கால் பாகம் வெந்ததும் அதனுடன் (பாசிப் பருப்பில் உள்ள நீரினை வடித்து விட்டு) பாசிப் பருப்பினைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும். துருவிய தேங்காயைச் சேர்த்து ஒரு சேர கிளறவும். சுவையும், சத்தும் கொண்ட மணத்தக்காளி கீரை பொரியல் ரெடி.