சமரசம் உலாவும் இடம் என்று கல்லறைகளைக் கூறுவார்கள். அங்கேயும் சமத்துவம் இல்லை. பணம் படைத்தவன் மண்டபம் கட்டிக் கொள்கிறான். ஏழை எங்கோ புதைக்கப் படுகிறான். இன்றைய நிலையில் சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் பேச்சளவிலேயே உள்ளது. அக்டோபர் 10 உலக மனநல தினமாக கொண்டாடப்படுகிறது. உலக மனநலத்தின் இவ்வாண்டு அறைகூவல் என்னவென்றால் ஏற்றத்தாழ்வுகளே மனக் கோளாறுகளுக்குக் காரணம். அவற்றை களைய வேண்டும் என்பதாகும்.

சமத்ததும் என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல. சாதி, மத, மொழி, வசிப்பிடம் ஊர், நாடு என பல வேறு வகைகளில் அமைகிறது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் மனிதன் தன்னை பல்வேறு வகைகளில் வேற்றுமை படுத்திக் கொள்கிறான்.

பாலின வேறுபாடு இயற்கை அமைத்தது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த உலகமாகவே உள்ளது.

சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கு 40 சதவீத ஓதுக்கீடு என்று அறிவித்த தீர்மானத்தைப் பல ஆணிய வாதிகள் எதிர்த்து வருகின்றனர். ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டினால் ஒரு குடும்பமே கல்வி பெற்றதாகும் என்றார் அண்ணல். ஆனால் அடிப்படையில் பலர் இதனை எதிர்க்கின்றனர். ராஜாராம் மோகன்ராய் காலம் தொட்டு உடன்கட்டை ஏறுவதை எதிர்த்த காலம் தொட்டே வெவ்வேறு வடிவங்களில் வேற்றுமை இருந்து வருகிறது.

அவ்வாறே பல வேற்றுமைகளால் தான் மனநலம் பாதிக்கப்படுகிறது என்பதால் இந்த ஆண்டு சமத்துவ வேறுபாடுகளை களைவோம் என்பதையே கொள்கையாக பிரகடனம் செய்து உள்ளனர்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் உதட்டளவில் உள்ளதே தவிர மனதளவில் இல்லை.

மனநலம் என்பதை அடைய சமத்துவமே ஒரே வழி என்பதை அனைவரும் உணர வேண்டும்.

அன்புடன்

ஜி.ராஜமோகன்