திருமதி ரெங்கராஜத்தம்மாள் –  பி.ஜி.ராஜன் கோவிந்தராஜன்.

மாதா, பிதா, குரு, தெய்வம். இதில் மாற்றுக் கருத்து எதுவும், யாருக்கும் இருக்க முடியாது. அன்னைதான் எல்லாவற்றுக்கும் முதல். அன்னைதான் ஆதி. பெற்றவளை நிற்க வைத்து வணங்கு. படுக்க வைத்து வணங்குவதில் பயனில்லை என்பார் யாகவா முனிவர். உயிரோடு இருக்கும்போதே அன்னையை அழுதும் தொழுதும் போற்ற வேண்டும். இறந்த பிறகு எவ்வளவு அழுது புரண்டாலும் அதில் பயனில்லை.

அம்மாவைப் பற்றி சொல்ல ஒவ்வொருவருக்கும் ஆயிரம் கதை இருக்கும். அவன் கைநாட்டுப் பேர்வழியாக இருந்தாலும், தன் அம்மாவைப் பற்றி சொல்ல வேண்டுமானால் காவியமே படைப்பான்.

நீடாமங்கலம்தான் என் சொந்த ஊர். என்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு அதுதான் அயோத்தி. என் அன்னை தற்போது என்னோடு மட்டுமில்லை… உலகத்திலேயே இல்லை. எங்கோ வானத்தில் நட்சத்திரமாய் இருந்து கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறாள். 1920ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி (20.10.1920) அவதரித்த என் அன்னைக்கு நூற்றாண்டு பிறந்த நாள் வருகிறது. என் அருகில் இல்லையென்றாலும் அருவமாய் இருந்து என்னை அனுக்கிரகித்துக் கொண்டிருக்கும் என் அன்னையின் நினைவு என்னை முதுமை என்னை மூழ்கடித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், அனுதினமும் வாட்டுகிறது. எந்த நினைவு தப்பினாலும் அவள் நினைவு என் கடைசி மூச்சு உள்ளவரை தப்பாது.

அம்மா என்றால் அன்பு மட்டுமல்ல… அம்மா என்றால் அறிவும்கூடத்தான். அப்பா உட்பட அனைத்து உறவுமுறைகளையும் அவள்தான் அறியச் செய்கிறாள். அறிவைத் தருகிறாள். உளவியல் நிபுணர்களின் ஒட்டுமொத்த கருத்து அன்னை வளர்ப்பின் முதல் 5 ஆண்டுகளே முக்கியம் என்பதாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? எனும் நம் முன்னோர் கருத்து அறிவியல் ஞானம் பொருந்தியது.

காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற ஒருவர், ஓநாய் குகை ஒன்றைக் கண்டார். அதன் உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு பெண் சிசுக்கள் இருந்தன. அவற்றை தூக்கி வந்து வளர்த்தார். கமலா, அமலா எனப் பெயரிட்டார். அக்குழந்தைகளால் பேச முடியவில்லை. ஓநாய் போன்றே சத்தமிட்டன. கை – கால்களை ஊன்றியே நடந்தன. மெத்தையில் அவைகளால் படுக்க முடியவில்லை. வைக்கோல், முட்புதர்களையே நாடிச் சென்றன. நாக்கை பயன்படுத்தியே பால் மற்ற திரவங்களை உட்கொண்டன. பேச வைப்பதற்கும், நடக்க வைப்பதற்கும் அக்குழந்தைகளின் வளர்ப்பு தந்தை படாதபாடுபட்டார். அடுத்தடுத்து சில ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டன.  இதனை கூறுவதற்கு காரணம் ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அறிவுறுத்துவதற்காகத்தான்.

நான் பிறந்த கிராமத்தில் துவக்கப்பள்ளிதான் இருந்தது. 8 மைலுக்கு அப்பால் சென்றால்தான் ஒரு உயர்நிலைப்பள்ளி. பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் வருவார்கள். ஒரு சிலர் சைக்கிளில் வருவார்கள். பேருந்தை நம்ப முடியாது. அது எப்போதாவதுதான் வரும். நான் என் அண்ணன், அக்காவோடு இருந்தேன். தன் பிள்ளைகள் தன்னைப் போலவே வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்பது என் அப்பாவின் அவா. ஆனால், என் அம்மா நான் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். வணிகத்தில் ஈட்டுவதை விட சிறந்த செல்வம் கல்விச் செல்வம்தான் என்று அம்மா நினைத்தாள். கல்லூரி பருவத்தில் என்னை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்த்தது; கல்விக் கட்டணத்தோடு விடுதிக் கட்டணத்தையும் எனக்கு செலுத்தியது என் அம்மாதான்.

அக்டோபர் 20 என் அம்மாவின் நினைவு நூற்றாண்டு பிறந்த நாள். என் அம்மாவைப் போலத்தான் உங்கள் அனைவரின் அம்மாவும், எத்தனையோ தியாகங்களை செய்து உங்களை ஆளாக்கி இருப்பார்கள். அவர்களை உயிரோடு இருக்கும்போதே போற்றிப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. நல்லபடியாக பராமரியுங்கள். மன நிம்மதியோடு வாழ வையுங்கள். இறந்த பின்பு எத்தனை ஆயிரம் செலவு பண்ணி பூஜை புனஸ்காரம் செய்தாலும் அதில் ஒன்றும் பலனிருக்காது. தன்னை சரியாக பராமரிக்காத பிள்ளைகளையும் அன்னை, மரித்த பிறகும் அருவமாய் இருந்து அருள்பாலிக்கத்தான் செய்வாள். பழிவாங்க மாட்டாள். காரணம் அம்மா என்றால் எப்போதுமே, இருந்தாலும், இறந்தாலும் அன்புதான். தாயை நிற்க வைத்து வணங்கத் தவறாதீர்கள். நூறு நூறு சாமிகள் இருந்தாலும், அவை அன்னைக்கு ஒருபோதும் ஈடாகாது.

-ஜி.ராஜமோகன்